Highlights
- மெல்பனில் Whittlesea, Port Melbourne பகுதிகளில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
- பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் விக்டோரியா முழுவதும் 7 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது.
குறிப்பிட்ட பணியாளர் வேலைபுரிந்த மெல்பன் மேற்கு முதியோர் இல்லம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏனைய பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட முதியோர் இல்லப்பணியாளருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று ஆராயப்பட்டுவருவதாகவும், அவர் முதலாவது கோவிட் தடுப்பூசியை போட்டிருந்த நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விக்டோரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள முடக்க நிலையின் மூன்றாவது நாளான இன்று, கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மொத்தம் நாற்பதாக உயர்ந்துள்ளது.
இதுதவிர வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் கோவிட் நிலைவரம் தொடர்பாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த acting premier James Merlino, மர்மமான வழிகளில் தொற்று அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்தார்.
விக்டோரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள முடக்கநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு மொறிஸன் அரசிடம் கேட்டபோது, மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் குறுகிய காலப்பகுதிக்கான முடக்கநிலையில் ஏற்படும் பொருளாதார சரிவுகளை மாநில அரசுகளே கவனித்துக்கொள்ளவேண்டும் என்று மறுத்துவிட்டதாகவும், அரசின் இந்தப்போக்கு மிகவும் ஆத்திரமும் கவலையும் அளிப்பதாகவும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் acting premier James Merlino கூறினார்.
இதேவேளை, விக்டோரியாவில் அறிவிக்கபட்டிருக்கும் ஏழுநாள் முடக்கநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் மத்திய வர்த்தகர்களுக்கு உதவியளிப்பதற்கு விக்டோரிய அரசு 250 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக James Merlino தெரிவித்தார்.
முடக்கநிலையினால் ஏற்பட்டுள்ள வாடகை பிரச்சினை, தொழிலாளர் சம்பள சிக்கல் உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசு முடிந்தளவு பொறுப்புணர்வோடு இந்த உதவியை மேற்கொள்வதாக James Merlino கூறினார்.

Victoria's Acting Premier James Merlino Source: AAP Image/Luis Ascui
இதுஒருபுறமிருக்க தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் அவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவடைந்து 200-ஐக் கடந்துள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சென்றுவந்த இடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.