Highlights
- விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுகிறது
- மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது.
விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெல்பனுக்கான முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக acting premier James Merlino அறிவித்துள்ளார்.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள எவரும் முதியோர் பராமரிப்பு இல்லங்களைச் சேர்ந்தவர்கள் அல்லவென தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் புதிதாக தொற்றுக்கண்டவர்களில் ஒருவர் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்ததையடுத்து Jervis Bay, Goulburn, Hyams Beach, Vincentia ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 51 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
இப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் விக்டோரியா முழுவதும் 7 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை நாளை இரவு 11.59 மணிக்கு முடிவடையவிருந்த நிலையில் Regional விக்டோரியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் இம்முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாகவும் acting premier James Merlino அறிவித்தார்.
இதன்படி மெல்பனில் வாழ்பவர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற மற்றும் பராமரிப்பு வழங்க, உடற்பயிற்சி மற்றும் வேலை(அனுமதி வழங்கப்பட்டவர்கள் மட்டும்) ஆகிய ஐந்து காரணங்களுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற முடியும்.
மக்கள் தமது வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு சற்றே தளர்த்தப்பட்டு, shopping மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றுக்காக வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்யலாம்.
மெல்பன் பெருநகரத்திற்கான இம்முடக்கநிலை ஜுன் 10ம் திகதி தளர்த்தப்படும் எனத் தான் நம்புவதாகவும் ஆனால் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாகவே தளர்த்தப்படும் எனவும் James Merlino தெரிவித்தார்.
அதேநேரம் Regional விக்டோரியாவில் வாழ்பவர்களுக்கு நாளை வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
- அங்கு வாழ்பவர்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்வதற்கு காரணம் தேவையில்லை.
- அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே மெல்பனுக்கு பயணம் செய்ய முடியும்.
- வெளியிடங்களில் 10 பேர் வரை ஒன்றுகூடலாம்.
- கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் இயங்க ஆரம்பிக்கலாம்.
விக்டோரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் dhhs.vic.gov.au இணையத்தளத்தில் மேலதிகமாக அறிந்துகொள்ளலாம்.
இதுஒருபுறமிருக்க தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் அவர்கள் சென்றுவந்த இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அந்த இடங்களின் விவரங்களை தமது இணையத்தில் வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


