Highlights
- நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகின்றது.
- சிறியளவிலான அறிகுறிகள் தோற்றினாலும் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் மாநில விவசாயத்துறை அமைச்சர் Adam Marshall-உம் அடங்குகிறார்.
குறித்த 11 பேரில் 10 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஒருவருக்கு மாத்திரம் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
இதையடுத்து Bondi பரவல் ஊடாக கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் Adam Marshall, தொற்றுக்கண்ட ஒருவர் சென்றுவந்த உணவகத்திற்குச் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து இவருக்கு கோவிட் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் தொற்றுக்கண்டிருக்கலாம் என கருதப்படும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுஒருபுறமிருக்க சிட்னி பெருநகரம், Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour ஆகிய பகுதிகளில் சில புதிய கட்டுப்பாடுகள் நேற்று புதன்கிழமை 4 மணிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதன்படி வீடுகளுக்கு 5 விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதி(சிறுவர்கள் உட்பட)
Supermarkets, வேலைத்தளங்கள், பொதுப்போக்குவரத்து மற்றும் organised outdoor events அனைத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
திருமண நிகழ்வுகள், இறுதிநிகழ்வுகள் உட்பட அனைத்து indoor and outdoor settings-இலும் நான்கு சதுரமீட்டர்களுக்கு ஒரு நபர் என்ற விதி பேணப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இதற்குள் அடங்குகின்றன.
அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த முழுமையான விவரங்களுக்கு www.nsw.gov.au/covid-19 என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.
இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆகக்குறைந்தது ஒரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் 48,402 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் Premier Gladys Berejiklian வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்தே இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share

