SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தில் ஒரேநாளில் 77 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று! ஒருவர் பலி!!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 77 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Greater Sydney has entered its third week of lockdown as COVID-19 cases continue to rise.
Greater Sydney has entered its third week of lockdown as COVID-19 cases continue to rise. Source: AAP

2 min read

Published


Skip to article content

Highlights

  • நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 77 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • அடுத்துவரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகின்றது.

கோவிட் தொற்றுக்கண்டவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 90 வயதுகளிலுள்ள மூதாட்டி ஒருவரே நேற்றையதினம் மரணமடைந்ததாகவும் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூதாட்டி கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை என நம்பப்படுகிறது.

அதேநேரம் கடந்த ஜுன் மாதம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் பரவல் ஆரம்பித்ததையடுத்து அங்கு ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். 

ஆனால் அடுத்துவரும் நாட்கள் இதைவிட மோசமாக இருக்கும் எனவும் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படக்கூடும் எனவும் மாநில Premier Gladys Berejiklian எச்சரித்தார்.

குறித்த 77 பேரில் 55 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 22 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 40 க்கும் மேற்பட்டோர்   நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால் மக்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் Premier Gladys Berejiklian கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்நிலையில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை, கல்வி(வீட்டிலிருந்து வேலைசெய்ய அல்லது கல்விகற்க முடியாதபட்சத்தில் மாத்திரம்) பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

கடந்த 24 மணிநேரத்தில் 48,754 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்தே இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now