சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலின் போது, குறித்த ஓட்டுநர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்கும் நடவடிக்கையை குயின்ஸ்லாந்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 2022 இல் சாலைவிபத்துக்களில் 299 இறப்புகள் பதிவாகியுள்ள பின்னணியில் இந்நடவடிக்கை குறித்து மாநில அரசு ஆராய்ந்துவருவதாக Courier Mail செய்தி வெளியிட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் Mark Bailey, சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும்போது மீண்டும் சோதனைக்கு உட்படுத்தல், வேக வரம்பை மீறி 40km/hக்கு மேல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே வைத்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்டவை, மாநில அரசு நடைமுறைப்படுத்தவுள்ள புதிய மாற்றங்களில் அடங்குவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், குயின்ஸ்லாந்து அரசின் இத்திட்டம் குறித்து அம்மாநிலத்தவர்கள் பலரும் இணையவழி தமது எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர்.
பணம் திரட்டுவதற்கான மற்றொரு வழியாக அரசு இத்திட்டத்தை ஆலோசித்துவருவதாகவும், தவறு செய்யும் ஒரு குறிப்பிட்ட தொகுதியினருக்காக, பொறுப்புமிக்க அனைத்து வாகன ஓட்டிகளும் தண்டிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் ஓட்டுநர் உரிமத்தை இழந்தவர்கள் மறு சோதனைக்கு உட்படுத்தப்படுவது நியாயம் எனவும், அனைத்து ஓட்டுநர்களுக்கும் ஒரே விதியை அறிமுகப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாததது எனவும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் சாடியுள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
