நவம்பர் 1, 2021 முதல் 2023 ஆகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில், வாகனத்தில் இருந்த பயணிகள் உரியமுறையில் seatbelt-ஆசனப்பட்டி அணியாத குற்றத்திற்காக 1,842 ஓட்டுநர்களுக்கு double demerit புள்ளிகள் தவறாக வழங்கப்பட்டதாகவும், 626 ஓட்டுநர் உரிமங்கள் தவறாக ரத்துச் செய்யப்பட்டதாகவும் மாநில போக்குவரத்து அமைச்சர் Mark Bailey கூறினார்.
இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்காகவும் தான் மனம் வருந்துவதாகவும் இத்தவறு ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இத்தவறினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் போக்குவரத்து மற்றும் பிரதான சாலைகள் திணைக்களம் தொடர்புகொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் 632 பேர் அநாவசியமாக good behaviour periodsஇல் இருந்ததாகவும், 236 பேர் இதற்கு முன்பு அநாவசியமாக good behaviour periodsஇல் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் வேறு மாநிலங்களையோ அல்லது வெளிநாடுகளையோ சேர்ந்த 43 ஓட்டுநர்கள் குயின்ஸ்லாந்தில் வாகனம் ஓட்டுவதில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள 121 ஓட்டுநர்களுக்கு, உரிமங்களை விரைவாக மீண்டும் வழங்குவது குறித்து போக்குவரத்து துறை அவசர சட்ட ஆலோசனையை கோருகிறது என்று மாநில போக்குவரத்து அமைச்சர் Mark Bailey கூறினார்.
பயணிகள் ஆசனப்பட்டியை சரியாக அணிவதற்கு ஓட்டுநர்களே பொறுப்பு என்ற அடிப்படையில் அபராதம் சரியாக வழங்கப்பட்ட போதிலும், கமரா மூலம் கண்டறியப்பட்ட இக்குற்றங்களுக்கு double demerit புள்ளிகள் வழங்கப்பட்டதே தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தவறு குறித்து ஒரு சுயாதீன மதிப்பாய்வு தொடங்கப்படும் எனவும் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 2021 ஜூலையில் mobile phone மற்றும் seatbelt கமராக்கள் புழக்கத்திற்கு வந்திருந்தன. இதையடுத்து முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 1,800 பேர் இக்கமராக்களில் அகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
