வாகனம் ஓட்டும் போது சரியானமுறையில் seatbelt-ஆசனப்பட்டி அணியாமலிருத்தல், கைபேசியைப் பயன்படுத்துதல், வீடியோக்களைப் பார்த்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கவென, உலக தரத்தில் அமைந்த சிறப்பு கமராக்கள் விக்டோரியா மாநிலத்தில் ஜூலை 1 சனிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
Trailer-களில் பொருத்தப்பட்ட ஆறு mobile phone and seatbelt detection கமராக்கள் மாநிலம் முழுவதும் சுமார் 200 இடங்களில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு, சாலைவிதிகளை மீறும் ஓட்டுநர்களை கையும் கைபேசியுமாக பிடிக்கவுள்ளன.
வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் $577 அபராதம் மற்றும் நான்கு demerit புள்ளிகளை இழக்க நேரிடும்.
Seatbelt சரியாக அணியாமல் பிடிபட்டவர்களுக்கு $385 அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் மூன்று demerit புள்ளிகளை இழக்க நேரிடும்.
கைபேசி பாவனையாளர்களைக் கண்டுபிடிக்கவென அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைந்த இக்கமராக்கள், கடந்த சில மாதங்களாக பரீட்சார்த்த அடிப்படையில் விக்டோரியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தபட்டிருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இவை பரந்தளவில் பாவனைக்கு வந்துள்ளன.
கடந்த 3 மாதங்களாக இக்கமராக்களில் அகப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை. வெறும் எச்சரிக்கைக் கடிதம் மட்டும் அனுப்பப்பட்டது. எனினும் இனிமேல் இக்கமராக்களில் அகப்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
குறித்த கமராக்கள் எங்கே நிலைநிறுத்தப்படவுள்ளன என்பதை, பதிவுசெய்யப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விக்டோரியா காவல்துறை மற்றும் VicRoads அதிகாரிகள் தீர்மானிக்கவுள்ளனர்.
கைபேசி பாவனையை கண்டறியும் இக்கமராக்கள், எத்தகைய போக்குவரத்து மற்றும் வானிலைகளிலும் அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுக்கின்றன.
குறித்த கமராக்களில் எடுக்கப்படும் படத்தைவைத்து, நீங்கள் வீதியில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தீர்களா, அல்லது உங்கள் கைபேசியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தீர்களா என்பதை கண்டுபிடிக்க முடியும். வாகன ஓட்டி seatbelt அணிந்திருக்கிறாரா இல்லையா என்பதையும்கூட இதன்மூலம் கண்டறியமுடியும்.
விக்டோரிய சாலை பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக, பல மில்லியன் முதலீட்டில் இக்கமராக்கள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
