SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பம்!

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு மையமான நவுறுவில் வாழ்ந்துவந்த அகதிகளில் முதல்தொகுதியினர் நியூசிலாந்தை சென்றடைந்துள்ளனர்.

2022-11-23_10-38-40.jpg
Auckland, New Zealand. Six refugees from an Australian offshore processing centre have arrived in the city and are set to be resettled Credit: Getty / REDA & Co

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலியா நியூசிலாந்து இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்கீழ் முற்கட்டமாக 6 அகதிகள் இவ்வாறு நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுகின்றனர்.

நேற்று நவுறுவிலிருந்து புறப்பட்ட விமானத்தில், நியூசிலாந்தில் குடியமர்த்தப்படவுள்ள முதல் ஆறு அகதிகள் சென்றிருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்துறை அமைச்சர் Clare O'Neil அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த மையங்களில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளை, நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டது.

இதன்படி வருடமொன்றுக்கு 150 அகதிகள் என்ற அடிப்படையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படவுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு மையமான நவுறுவில் உள்ளவர்கள் மற்றும் UNHCR - அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இவ்வாறு நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதியுடையவர்கள்.

இதன்படி ஆஸ்திரேலியாவிலும் மற்றும் கடல் கடந்த தடுப்பு மையங்களிலும் சுமார் 1,384 பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டப்பட்டுள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் மூலம் 450 பேர் மட்டுமே குடியமர்த்தப்படவுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள அகதிகள் செயற்பாட்டாளர்கள், ஏனையோரின் நிலை கேள்விக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடல்கடந்த தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை வருடமொன்றுக்கு ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்த இறுதி ஒப்பந்தம் சுமார் 9 ஆண்டுகளின்பின்னரே எட்டப்பட்டது.

நியூசிலாந்தின் சலுகையை ஏற்றுக்கொண்டால் அது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும், ஆஸ்திரேலியா வருவதற்கான பின்வாசலாக நியூசிலாந்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இதனை ஏற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் மறுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now