இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத நிலையில் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் 75 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கிறார்.

Leader and the presidential candidate of National People's Power Anura Kumara Dissanayake leaves a polling station after casting his vote in Colombo, Sri Lanka, Saturday, Sept. 21, 2024. (AP Photo/Eranga Jayawardena) Source: AP / Eranga Jayawardena/AP
இரண்டாவது இடத்தில் 32.76% வாக்குகளுடன் சஜித் பிரேமதாஸ உள்ளார். ரணில் விக்ரமசிங்க 17.27% வாக்குகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.
இதையடுத்து எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இல்லாததால் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி விருப்பு வாக்கு தேர்தவுக்காக அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். இவ்வாறு நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுகளில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாஸ இரண்டாவது முன்னுரிமை பெற்றிருந்தால் அந்த வாக்குகள் எண்ணப்பட்டு அந்தந்த வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்க்கப்படும்.
அந்த வாக்குச் சீட்டுகளில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாஸ இரண்டாவது முன்னுரிமையைப் பெறவில்லை என்றால், மூன்றாவது முன்னுரிமை யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என பரிசீலிக்கப்பட்டு அந்த வாக்குகள் அந்தந்த வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்க்கப்படும். இதன் அடிப்படையில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

Sri Lankan security personnel stand guard outside the ballot counting center the day after the presidential election, in Colombo, Sri Lanka, 22 September 2024. Source: EPA / CHAMILA KARUNARATHNE/EPA
தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்ட ரத்நாயக்க ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருப்பு வாக்களிப்பு முடிவுகள் மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் என்பதால் இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்ற உத்தியோகப்பூர்வ முடிவு வெளியாவதற்கு சற்றுத் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி உறுதியென்றும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அநுரவின் வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து அதிபர் செயலகத்தில் அவர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார் என்றும் விருப்பு வாக்குகள் இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும்.SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.