சூரியனில் இருந்து வரும் புற ஊதா அல்லது UV கதிர்வீச்சு தோலில் நேரடியாக படுவதால், தோலிலுள்ள கலங்கள் சேதமடைந்து மெலனோமா உட்பட பெரும்பாலான தோல் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.
ஏறக்குறைய 99 சதவீதமான மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்கள், மற்றும் 95 சதவீதமான மெலனோமா தோல் புற்றுநோய்கள், நேரடியான கதிர்வீச்சால் ஏற்படும் விளைவாகும்.
UV கதிர்வீச்சு என்பது சூரிய ஒளியின் கண்ணுக்கு தெரியாத பகுதியாகும், அதை நாம் பார்க்கவோ உணரவோ முடியாது. சேதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது, உண்மையிலேயே சேதம் ஏற்படும்வரை நமக்கு தெரியாது.

புற ஊதா கதிரால் ஏற்படும் சேதம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடியது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதாவது இப்பாதிப்பு காலப்போக்கில் படிப்படியாக உருவாகக்கூடியது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் வெயிலில் இருக்கும்போது, மற்றும் UV அளவு மூன்று அல்லது அதற்கு மேல் இருக்கும்போது, உங்கள் தோலை உரியமுறையில் பாதுகாக்கவில்லை என்றால், பாதிப்பு ஏற்படுவதுடன் உங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் தோல் புற்றுநோய் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது.
நாம் அதிகளவான UV கதிர்வீச்சை எதிர்கொள்வதற்கான பெரிய காரணம், தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியாவின் அமைவிடமாகும்.
ஆஸ்திரேலியா உண்மையில் உலகின் மிக உயர்ந்த UV அளவுகள் சிலவற்றைக் கொண்டுள்ளது.

இதற்குக் காரணம் நமது நாடு பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்திருப்பதும், தெளிவான வானம் மற்றும் நீல வான நாட்களை பெருமளவில் கொண்டிருப்பதுமாகும். இதன்காரணமாக பெருமளவான UV கதிர்வீச்சு நம்மைக் கடந்து செல்கிறது.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றுமொரு விடயம் என்னவென்றால், பல்கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை அதிகம் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா இருப்பதால், இங்கே அதிக எண்ணிக்கையில் வெள்ளைநிற தோலுடைய மக்கள் உள்ளனர்.
குறிப்பிட்ட அளவு UV கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கத் தேவையான மெலனின், இவர்களது தோலில் குறைவாக இருப்பதால், தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
UV கதிர்வீச்சுக்கு எதிரான பாதுகாப்பை மெலனின் வழங்குகிறது என்றபோதிலும், கருமைநிற தோல் உள்ளவர்களுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படலாம்.

புற ஊதா கதிர்வீச்சு தோல் புற்றுநோய்க்கான ஆபத்தை உருவாக்குகிறது. கருமைநிற தோல் கொண்டவர் அல்லது வெளிர் நிற தோலுள்ளவர் என அனைவரும் இந்த ஆபத்துக்கு ஆளாகிறார்கள்.
கருமைநிற தோல்கொண்டவருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது, ஆனால் நீங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தப்படாது. தோல் புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
வீட்டிலேயே செய்யக்கூடிய வழக்கமான தோல் பரிசோதனைகள் மூலம் தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.
நீங்களோ அல்லது உங்கள் துணைவரோ புதிய மாற்றங்கள் எதையேனும் அவதானித்தால் அதுதொடர்பில் கவனம் செலுத்துங்கள்.
சமச்சீரற்ற தன்மை, மேற்பரப்பு, நிறம் உள்ளிட்டவை தொடர்பில், நீங்கள் உணரும் எந்த மாற்றமும், அதை உங்களால் விளக்க முடியாவிட்டாலும்கூட, தோல் புற்றுநோய் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்.
ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதாக நீங்கள் நினைத்தால், மீண்டும் தோல் புற்றுநோய் மருத்துவரைப் பாருங்கள்.

UV கதிர்வீச்சிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் UV அளவைக் கண்காணிக்க வேண்டும்.
UV Index மூன்று அல்லது அதற்கு மேல் இருந்தால், சூரியனிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்.
பாதுகாப்பான ஆடைகளை அணிவது, SPF 30 அல்லது அதற்கும் அதிகமான, broad-spectrum, water-resistant தன்மை கொண்ட sunscreen பூசிக்கொள்வது, உங்கள் முகம், கழுத்து மற்றும் காதுகளுக்கு நிழலை வழங்கக்கூடியவகையிலான தொப்பியை அல்லது அதையொத்த பரந்த விளிம்புள்ள ஏதேனுமொன்றை அணிவது, நிழலில் இருப்பது மற்றும் sunglasses அணிவது ஆகியவற்றை பரிந்துரைக்கிறோம்.
இந்த ஐந்து வகையான பாதுகாப்புமுறைகளைப் பயன்படுத்துவது, உங்களுக்கு சூரியனிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.