ஆஸ்திரேலியாவிலிருந்து பிரியா-நடேஸ் குடும்பம் நாடு கடத்தப்படுமா என்பது குறித்த நீதிமன்ற முடிவு வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
“நீதியின் பெயரால்” இந்த முடிவை தாமதப்படுத்தியுள்ளதாக மெல்பேர்ணில் உள்ள ஃபெடரல் சர்க்யூட் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், இந்தக் குடும்பத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தடுக்க இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரியா மற்றும் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிக்கா ஆகியோர் கிறிஸ்மஸ் தீவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குடும்பத்தை நாடு கடத்தப்படும் முயற்சியில் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை ஈடுபட்டது. ஆனால், இறுதி நேரத்தில் குழந்தை தருணிக்கா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்த நாடு கடத்தல் தவிர்க்கப் பட்டது.
உயர் நீதிமன்றம் உட்பட ஆஸ்திரேலிய நீதிமன்றங்கள் பெற்றோரும் மூத்த குழந்தை கோபிகாவும் அகதிகள் அல்ல என்று தொடர்ச்சியாகத் தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவை இல்லை என்று கண்டறிந்துள்ளன.
தேசிய நலனைக் கருத்தில் கொண்டே இந்தக் குடும்பத்திற்குப் புகலிடம் வழங்கப்படவில்லை என்று பிரதமர் Scott Morrison ஊடகவியலாளர்களிடம் இன்று கூறினார். இவர்கள் வழக்கு குறித்து அவர் முன்னர் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியது நோக்கத்தக்கது.
“எல்லை பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு என்பது பொது மக்களின் உணர்வையோ வேறு கருத்துகளையோ ட்விட்டர் பக்கத்தில் பரிமாறுவது அல்ல. சரியான முடிவை எடுத்து செயல்படுவது” என்று மேலும் அவர் இன்று கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக, ஆஸ்திரேலியர்கள் வெளிப்படுத்திய உந்துதலையும் இரக்கத்தையும் நான் முற்றிலும் புரிந்து கொள்கிறேன். இருந்தாலும், தவறான முடிவுகளை எடுத்தால் அதன் பின் விளைவுகள் பாரதூரமாக அமையும் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
மீண்டும் இலங்கைக்குச் சென்று, அங்கிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு ஒரு புதிய வீசாவிற்கு விண்ணப்பிக்குமாறு இந்தக் குடும்பத்திடம் பிரதமர் முன்னர் கோரியிருந்தார்.
“பிரியா, நடேஸ், கோபிகா மற்றும் தருணிக்கா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு வர விரும்பினால், அவர்களுக்கு முன்னர் திருப்பி அனுப்பப்பட்ட 1500 பேரைப் போல, அவர்களும் முற்படலாம்” என்று பிரதமர் 3AW வானொலியிடம் கூறினார்.
பிரதமர் அந்த செயல் முறையை விரைவு படுத்துவாரா என்று கேட்டதற்கு, “நான் மற்ற அனைவருக்கும் பொருந்தும் அதே விதிகளைத் தான் இவர்களுக்கும் பயன்படுத்துவேன்.” என்று பதிலளித்தார்.
“ஒரு நியாயமான குடிவரவு முறையை நாம் கடைப்பிடிக்க ட்விட்டர் பக்கத்தில் வரும் கோரிக்கைகளுக்கு இசைந்து முடிவுகளை மாற்றிக் கொண்டிருக்க முடியாது.”
Labor கட்சித் தலைவர் Anthony Albanese, இந்தக் குடும்பம் வாழ்ந்து வந்த Biloelaவிற்கு இன்று காலை சென்றுள்ளார்.
"ஆஸ்திரேலியாவில் பிறந்த நான்கு வயது மற்றும் இரண்டு வயதுடைய குழந்தைகள் இங்கு வாழ உரிமை கொண்டவர்கள்” என்று Seven Network ஊடகத்திற்குத் தெரிவித்த அவர், குடிவரவு அமைச்சர் உசிதமாக சிந்தித்து முடிவை வழங்க வேண்டும் என்று கூறினார்.
“இவர்களின் பெற்றோர் சமூகத்திற்குப் பங்களிப்பைச் செய்கிறார்கள், அவர்கள் பிராந்திய குயின்ஸ்லாந்தில் வாழ்ந்தவர்கள், அவர்களின் உள்ளூர் சமூகத்தினால் ஆதரிக்கப்படுகிறார்கள்.”
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட 1500 பேரின் நிலை தான் இந்தக் குடும்பத்தின் நிலையும் என்று மூத்த அமைச்சர் மத்தியாஸ் கோர்மன் (Mathias Cormann) தெரிவித்தார்.

The Biloela family and their supporters hope they will be allowed to stay in Australia permanently. Source: AAP
இவர்களுடைய புகலிடக் கோரிக்கை அரசாங்கத்தாலும் பல்வேறு நீதிமன்றங்களாலும் விரிவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று செனட்டர் கோர்மன் மேலும் கூறினார்.
“அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக, ஆஸ்திரேலியாவுக்கு வர அவர்களுக்குத் தகுதி இல்லை என்பதை அந்த மதிப்பீடுகள் உறுதிப்படுத்தியுள்ளன” என்று அவர் ABCயிடம் கூறினார்.
“எல்லைப் பாதுகாப்பு விடயங்களில் ஆஸ்திரேலிய அரசாங்கம் கடுமையாக இல்லை என்று ஆட்கடத்தல்காரர்கள் முடிவெடுக்க அனுமதிக்க முடியாது.”
கடைசி நேர தடை உத்தரவு
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்ணிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில், சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
ஒரு நீதிபதி கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்தார், அதைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
இன்று (புதன்கிழமை) மாலை 4 மணி வரை அவர்கள் நாடுகடத்தப்படக் கூடாது என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தருணிக்காவின் பாதுகாப்பு குறித்து வழக்கு விசாரணை நடக்கும், அத்துடன், தருணிக்காவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் அந்த விசாரணை மேற்கொள்ளப்படும்.
நீதிமன்ற நடவடிக்கையின் முடிவு என்னவாக இருந்தாலும், அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கலாமா இல்லையா என்பதை உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தான் முடிவு செய்வார் என்று இந்தக் குடும்பத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் கூறுகிறார்.
“நீதிமன்றத்தில் இவர்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக இருந்தாலும், இந்தக் குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான ஒரே வழி, அமைச்சர் தலையீடு தான். ஏனெனில் அதற்கான அதிகாரத்தை உள்துறை அமைச்சர் மட்டுமே வைத்திருக்கிறார்,” என்று வழக்கறிஞர் கரினா ஃபோர்டு (Carina Ford) திங்களன்று நீதிமன்றத்திற்கு வெளியே கூறினார்.
நாட்டில் தங்குவதற்கான முயற்சியில், பிரியா மற்றும் நடேசலிங்கம் இருவரும் தங்கள் இரு இளம் குழந்தைகளை நியாயமற்ற முறையில் நீதிமன்ற மேல் முறையீடுகளுக்கு இழுத்துச் சென்றதாக திரு டட்டன் நம்புகிறார்.
“அதிகப்படியான” முறையீடுகள் அவர்களை இங்கே தங்க வைத்திருக்கின்றன, இப்போது அவர்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள நகரமான பிலோயெலாவில் தாம் கட்டியெழுப்பிய வாழ்க்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுளதாக புகார் கூறுகிறார்கள்.”

The daughters removed from their home with their family Source: (Tamil Refugee Council)
“மேன்முறையீடு செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது, அது அவர்களின் சட்ட பூர்வமான உரிமை” என்று திரு டட்டன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
“ஆனால், மேன்முறையீடு செய்து, நடுவரின் முடிவு உங்களுக்குப் பிடிக்காவிட்டால், தொடர்ந்தும் மேன்முறையீடு செய்து நடக்க வேண்டியவற்றைத் தாமதப்படுத்திக் கொண்டே இருக்க முடியாது. அப்படித் தாமதப் படுத்தியதால் நீண்ட காலமாக நீங்கள் இங்கு இருந்து விட்டீர்கள். அதனால் சமூகத்துடன் அந்த இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளீர்கள்.”
“இது எப்படி நியாயமாகும்”
நடேசலிங்கமும் பிரியாவும் போர் முடிந்ததும் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்தனர். அவர்கள் இங்கு சந்தித்து பிலோயெலாவில் குடியேறுவதற்கு முன்பு இரண்டு குழந்தைகளைப் பெற்றனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதால் இலங்கையில் தனக்கு ஆபத்து இருக்கிறது என்று நடேசலிங்கம் கூறியுள்ளார்.
ஆனால், பல சந்தர்ப்பங்களில் அவர் மீண்டும் இலங்கைக்கு பயணித்ததாகவும், அவர் ஆபத்தில் இருப்பதாக நீதிமன்றங்கள் நம்பவில்லை என்றும் பீட்டர் டட்டன் கூறினார்.
இவர்களது இறுதிக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், எவ்வளவு விரைவில் அந்தக் குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் என்று அமைச்சர் சொல்ல மறுத்து விட்டார்.
இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக, செவ்வாய்க்கிழமை இரவு, ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்றது, புதன்கிழமை விசாரணைக்கு முன்னதாக மெல்பேர்ணில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்திற்கு வெளியே மற்றொரு விழிப்புணர்வு நடைபெற்றது.