மெல்பேர்னில் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் இரு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில்- எனது மகன்மார் இருவரும் அப்பாவிகள். அவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்று கூறுவதெல்லாம் சுத்தப்பொய்- என்று குறித்த சகோதரர்களின் தகப்பனார் கூறியுள்ளார்.
துப்பாக்கிகளை கொள்முதல் செய்து, மெல்பேர்னில் பொதுமக்கள் செறிவாக உள்ள இடத்தில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறிப்பிட்ட நபர்கள் இன்று அதிகாலை ஆஸ்திரேலிய பயங்கரவாத தடுப்ப பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளர்கள்.
இந்தக்கைது சம்பவம் தொடர்பாக அவர்களது வீட்டிற்கு வெளியே வந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய கைதானவர்களின் தந்தை - 'அதிகாலைவேளை வீட்டுக்குள் புகுந்த பொலீஸார் எங்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தினார்கள். ஜன்னலை உடைத்தார்கள். எனது கைகளிலும் விலங்கு மாட்டினார்கள். வீடுமுழுவதும் சல்லடைபோட்டு தேடினார்கள். ஈற்றில் எனது மகன்மாரை கைது செய்து சென்றுள்ளார்கள். எனது வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்கள். எனது 84 வயது தயார் இன்னமும் பதறியபடி உள்ளார். ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டதாக கூறுகிறார்கள். எங்கிருந்துதான் இவர்கள் இப்படிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்கிறார்களோ தெரியவில்லை. எனது பிள்ளைகளுக்கு ஆயுதங்களை எப்படிப்பயன்படுத்துவது என்றுகூடத்தெரியாது. அவர்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதக்கோட்பாடுகளையே பிடிக்காது. அவர்கள் அமைதியானவர்கள். ஆத்திரப்படாதவர்கள். அல்லாவின் பெயரால் இறைபக்தியுடன் வாழ்பவர்கள். இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை அமெரிக்காதான் உருவாக்கியதாக எனது மகன் கூறியிருக்கிறான். எனது மகன் துருக்கிக்கு போவதற்கு திட்டமிட்டதாக அவனது கடவுச்சீட்டை ஆஸ்திரேலிய பொலீஸார் ரத்து செய்திருந்தார்கள். துருக்கிக்கு அவன் போகத்திட்டமிட்டது திருமணம் செய்துகொள்வதற்காகும்'- என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் கடந்த பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், 17,000 தொலைபேசி உரையாடல்கள் மற்றும் 10,500 குறுஞ்செய்திகள் போன்றவற்றை ஆராய்ந்ததன் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் இன்று மதியம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரைக்கும் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கைது செய்யப்படும்போது காயமடைந்துள்ளார்.
இதேவேளை ஆஸ்திரேலிய பொலீஸாரால் பயங்கரவாத குற்றச்சாட்டில் அண்மையில் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் நிஸாம்டீன் ஒரு மாத காலத்தின் பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விடுதலையானமை இங்கு குறிப்பிடத்தக்கது.
