ஆஸ்திரேலியாவெங்கிலும் வாழும் பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்டிரெய்ட் தீவு மக்களை, இந்நாட்டின் பாரம்பரிய உரிமையாளர்களாகவும், நிலம், நீர் மற்றும் சமூகத்துடன் அவர்களுக்கான பிணைப்பையும் SBS அங்கீகரிக்கிறது.
Advance Australia Fairயின் பாடல் வரிகள் 1878-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பள்ளி ஆசிரியரும் பாடலாசிரியருமான பீட்டர் டாட்ஸ் மெக்கார்மிக் அவர்களால் முதலில் எழுதப்பட்டது. இந்தப் பாடல் 1984 ஏப்ரல் 19-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
தேசிய கீதத்தின் இரண்டாவது வரியில் இருந்த ‘young and free’ என்ற சொற்றொடர் ‘one and free’ என்று 2021-ஆம் ஆண்டு மாற்றப்பட்டு, அனைவரையும் பிரதிபலிக்கும்வகையில் புதுப்பிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய தேசிய கீதம் அதிகாரப்பூர்வமான விழாக்கள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பிற சமூக நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய தேசிய கீதத்தின் வரிகள் ஆஸ்திரேலியர்களே, மகிழ்ச்சியுடன் நாம் ஒன்றிணைவோம்,
ஏனெனில் நாமெல்லாம் ஒன்று, சுதந்திரமானவர்கள்;
உழைப்புக்கு ஏற்ற தங்க மண்ணும் செல்வமும் எம்மிடம் உள்ளன;
நமது இல்லம் கடலால் சூழப்பட்டுள்ளது;
அழகான, வளமான, அரிதான இயற்கையின் பரிசுகளால்
நமது நிலம் நிறைந்துள்ளது;
வரலாற்றின் பக்கத்தில், ஒவ்வொரு காலப்பக்கத்திலும்
நல்லதொரு ஆஸ்திரேலியா உயரட்டும்
மகிழ்வின் ராகத்தில் நாமும் பாடுவோம்
நல்லதொரு ஆஸ்திரேலியா உயரட்டும்
எங்கள் ஒளிரும் தெற்குத் தாரகை கீழே
இணைந்த இதயத்துடனும், கரங்களுடனும் கடினமாக உழைப்போம்;
எங்கள் காமன்வெல்த் நாடு
எல்லா தேசங்களிலும் புகழோடு வளர;
கடல்களைக் கடந்து வந்த அனைவருக்கும்
பகிர்ந்தளிக்க எம்மிடம் எல்லையற்ற சமவெளிகள் உள்ளன;
துணிவோடு நாம் அனைவரும் ஒன்றிணைவோம்
நல்லதொரு ஆஸ்திரேலியாவை உயர்த்த.
மகிழ்வின் ராகத்தில் நாமும் பாடுவோம்
நல்லதொரு ஆஸ்திரேலியா உயரட்டும்
- Credit: Don Arnold/Getty Images
ஆஸ்திரேலிய குடியுரிமை பெறும்போது நாம் வழங்கும் வாக்குறுதி
ஆஸ்திரேலிய குடியுரிமை 1949-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிகாரப்பூர்வ விழாவில் கலந்துகொண்டு வாக்குறுதி வழங்கி குடியுரிமை பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்படும் விழாக்கள் உள்ளூர் கவுன்சில்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன; அதில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்படும் ஆஸ்திரேலிய குடியுரிமை தினமும் அடங்கும்.
குடியுரிமை வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய தேசிய கீதம் இசைக்கப்படுகிறது; மேலும் மக்கள், குடியுரிமையுடன் தொடர்பான பொறுப்புகளை தாம் ஏற்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தும் வாக்குறுதியை அளிக்கின்றனர்.
அவ்வாறு மக்கள் அளிக்கும் வாக்குறுதி இரண்டு வடிவங்களில் உள்ளன; அவற்றில் ஒன்றில், “கடவுள்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
வாக்குறுதி – வடிவம் 1
ஆஸ்திரேலியாவுக்கும் அதன் மக்களுக்கும் நான் என் விசுவாசத்தை இன்று முதல் வழங்குகிறேன் என்று கடவுளின் சாட்சியமாக உறுதியளிக்கிறேன்.
அவர்களின் ஜனநாயக நம்பிக்கைகளோடு நான் உடன்படுகிறேன்.
அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நான் மதிக்கிறேன்.
அவர்களின் சட்டங்களை நான் காக்கவும் கடைபிடிக்கவும் செய்வேன்.
வாக்குறுதி – வடிவம் 2
ஆஸ்திரேலியாவுக்கும் அதன் மக்களுக்கும் நான் என் விசுவாசத்தை
இன்று முதல் வழங்குகிறேன் என்று உறுதியளிக்கிறேன்.
அவர்களின் ஜனநாயக நம்பிக்கைகளோடு நான் உடன்படுகிறேன்.
அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நான் மதிக்கிறேன்,
அவர்களின் சட்டங்களை நான் காக்கவும் கடைபிடிக்கவும் செய்வேன்.
தமிழ் மொழியில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்தையும் குடியுரிமை பெறும்போது ஒருவர் வழங்கும் வாக்குறுதியையும் நீங்கள் வாசியுங்கள்; கேளுங்கள்.