அண்மையில் ஒரு பிரபல பத்திரிக்கை ஒரு பெரும் தவறை செய்திருந்தது. சூடான் நாட்டைச் சேர்ந்த மாடல் (model) ஒருவரை, இன்னொரு ஆபிரிக்க பின்னணி கொண்ட ஒருவர் என்று தவறாக அடையாளம் காட்டியிருந்தது. அதைத் தொடர்ந்து, இனவாதம் குறித்த விவாதம் பல்மடங்காகியுள்ளது.
Adut Akech என்ற அந்த மாடல், தன்னுடைய இனத்தை இழிவு படுத்தியதாக அந்தப் பத்திரிகை மீது குற்றம் சாட்டினார்.
ஆனால், பலருக்கு, ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்தை வேறுபடுத்திக் காட்ட முடியாமல் இருப்பதற்குக் காரணம், இனவாதம் அல்லது இன ரீதியான தப்பபிப்பிராயம் என்று சொல்ல முடியாது என்று ஒரு புதிய ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.
மாறாக, சிறுவர்களாக இருக்கும்போது மற்றைய இனத்தவருடன் அவர்களுடன் பழகாத காரணம் தான், இவர்களை அப்படி ஆக்கியிருக்கிறது என்று அந்த ஆராய்ச்சி சொல்கிறது.
சிறுவர்களாக இருக்கும்போது பல இனக்குழுக்களுடன் பழகினால் இனவாதம் அல்லது இனப்பாகுபாடு முற்றாக நின்றுவிடும் என்று Australian National University ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
"12 வயதிற்கு முன் நீங்கள் பல்வேறு இனக்குழுக்களுடன் பழகும் வாய்ப்பு இருந்தால், மற்றவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் தன்மை குறைவாக இருக்கும்; நீங்களும் அவர்களில் ஒருவராகப் பார்க்கும் தன்மை அதிகமாக இருக்கும்," என்று இந்த ஆய்வை முன்னெடுத்த Kate Reynolds, SBS செய்திப்பிரிவிடம் சொன்னார்.

Source: AAP
மற்றைய இனங்கள் குறித்த பாரபட்சம், இனப்பாகுபாடாக வெளிப்படாமல், அவர்களை வித்தியாசமாகப் பார்க்க வைக்கலாம் அல்லது அவர்களை வித்தியாசமாக அணுக வைக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
"மற்றைய இனங்கள் குறித்த எதிர்மறையான பார்வையை எமது ஆராய்ச்சியில் தெளிவாக காண முடியவில்லை. அதற்கு காரணம் சிறு வயதிலேயே மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள எண்ணங்களும் அனுபவங்களும் தான்."
ஒரு புதிய மொழி கற்பது போல
பிறப்பிலிருந்து 12 வயது மிகவும் முக்கியமான காலமாக இருக்கிறது. அப்பொழுது தான் நாம் மனிதனின் முகங்களை அடையாளம் காண்பதற்குக் கற்றுக்கொள்கிறோம். சிறுவராக இருக்கும்போது மொழி கற்பது எவ்வளவு இலகுவாக இருக்கிறது, அதுவே பெரியவனானதும் மிகச் சிரமமான செயல்பாடாக மாறுகிறது.
வயது வந்த பின்னர், எத்தனை இனங்களுடன் பழகினாலென்ன எத்தனை வருடங்கள் பழகினாலென்ன அதனால் இனங்கள் குறித்த பாரபட்சத்தில் பாரிய முன்னேற்றம் எதுவும் இருப்பதாக இந்த ஆய்வு கண்டறியவில்லை.
"சிறுவயதிலேயே மற்றைய இனங்கள் குறித்த எண்ணங்களை சரியாக வளர்க்கவில்லை என்றால், பெரியவரானதும் அதனை மாற்றிக்கொள்ள ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது," என்று பேராசிரியர் Kate Reynolds மேலும் கூறினார்.
மேலும் அறிய:

ஆஸ்திரேலியப் பாடசாலைகளில் இனப்பாகுபாடு?
"இன்னொரு மொழி கற்பதை போல! - உங்களால் முடியும், ஆனால் அதிக சிரமம் எடுக்க வேண்டியிருக்கும்."
"முகங்களை சரியாக அடையாளம் காணக்கூடியவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்"
கடவுச்சீட்டுகளிலுள்ள நிழல்படத்தை சரியாக அடையாளம் காணாமலோ அல்லது நீதிமன்ற விசாரணைகளில் பிழையான ஒருவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டோ பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
ஒரு நல்ல உதாரணம், சாட்சி சொன்னவர் தவறாக அடையாளம் காட்டியதால், அமெரிக்காவில் Ronald Cotton என்பவர் வீணாக 10 வருடங்களை சிறையில் கழித்தார். பாலியல் வன்முறை மற்றும் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட இவர், DNA சோதனைகளின் பின்னர், 1995 ஆம் ஆண்டு, நிரபராதி என நிரூபிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.
முகங்களை அடையாளம் காண வேண்டிய வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள், சிறுவயதிலேயே பல்வேறு இனங்களுடன் பழகியிருக்கவேண்டும் என்று பேராசிரியர் பரிந்துரைக்கிறார்.
"அந்த சந்தர்ப்பம் கிடைக்காத பெரியவர்களுக்கு இனக்குழுக்கள் குறித்த பயிற்சி வகுப்புகள் மிக அவசியம்," என்கிறார் அவர்.