அமெரிக்காவைச் சேர்ந்த 90 வயதான Syukuro Manabe, மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த 89 வயதான Klaus Hasselmann ஆகியோர் “பூமியின் காலநிலையின் இயற்பியல் மாதிரி ஒன்றை உருவாக்கியதற்கும், காலநிலை மாறுபாட்டை அளவிடுவதற்கும் புவி வெப்பமடைதலை நிரூபிக்கும் வகையில் கணிப்புகளை நம்பத்தகுந்த வகையில் மேற்கொள்ளவும்” பணியாற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அத்துடன், “அணு அளவிலிருந்து பிரம்மாண்டமான கிரக அளவுகள் வரை, இயற்கை அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களையும் சீர்கேடுகளையும் அவற்றிற்கிடையேயான தொடர்புகளையும் கணடறிந்ததற்காக,” 73 வயதான இத்தாலிய விஞ்ஞானி Giorgio Parisi அவர்களுக்கும் என்று இந்த வருட நோபல் பரிசு மூன்று பேருக்கிடையில் பகிரப்படுகிறது.
நாம் வாழும் இந்த உலகில் கால நிலை எவ்வாறு மாறுகிறது அதற்கு மனித குலம் எவ்வாறு பங்களிக்கிறது என்பது குறித்த எமது அறிவின் அடித்தளத்திற்கு வித்திட்டவர்கள் Syukuro Manabe, மற்றும் Klaus Hasselmann என்று நோபல் பரிசுக்குழு குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டலத்தில் கரியமில வாயு (carbon dioxide) அதிகரிப்பதையும், அது உலகின் வெப்ப நிலையை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதையும் 1960களில் தொடங்கி, Syukuro Manabe நிரூபித்து, தற்போதைய காலநிலை கணிப்புகளுக்கு அடித்தளமிட்டிருக்கிறார்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர், வானிலை மற்றும் காலநிலை இரண்டையும் தொடர்புபடுத்தி கணிப்புகளை Klaus Hasselmann உருவாக்கினார். வானிலையில் குழப்பமான தன்மை இருந்தபோதிலும் காலநிலை மாதிரிகள் ஏன் நம்பகமானதாக இருக்க முடியும் என்பதை விளக்க உதவினார்.
காலநிலை மீது மனிதகுலம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன அன்று அறிவதற்கான அறிகுறிகளைத் தேடுவதற்கான வழிகளையும் அவர் உருவாக்கினார்.
இதே வேளை, Giorgio Parisi உருவாக்கிய இயற்பியல் மற்றும் கணித மாதிரி, பல சிக்கலான கணிப்புகளை, கணிதம் உயிரியல், நரம்பியல் மற்றும் இயந்திரங்கள் கற்றுக் கொள்ள (machine learning) என்று பல துறைகளில் உள்ள சிக்கலான அமைப்புகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
முக்கிய விடயங்கள்:
- ஒரே துறையில், தொடர்புடைய ஆராய்ச்சியில் ஈடுபடும் பல விஞ்ஞானிகள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வது புதிதல்ல
- பரிசை வென்றவர்கள் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள்
- வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுவதும் வழங்கப்படும்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
