NSW மாநிலத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டு விட்டார்கள் என்று மாநில சுகாதார அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்கள். குறிப்பாக, சிட்னியின் சில உள்ளூராட்சிப் பகுதிகளில் தொற்று அதிகமாகப் பரவியதைத் தொடர்ந்து சில கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிமுகம் செய்தது. அப்படிக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நிலவும் 12 உள்ளூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள புறநகர் ஒன்றுதான் தனக்குப் பெருமை சேர்த்துள்ளது.
அந்தப் பெருமை பெறும் புறநகரின் பெயர், Edmondson Park.
இரண்டாம் உலகப் போரில் இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றி, ஜேர்மனியப் படையினரைத் தாக்கும் போது வீர மரணமடைந்த John Hurst Edmondson என்பவர் நினைவாக, எழுபதுகளில் இந்த இடத்திற்கு Edmondson Park என்ற பெயர் சூட்டப்பட்டது. போரில் மடிந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கும் அதி உயர் விருதுகளில் ஒன்று Victoria Cross என்ற விருது. இந்த விருதைப் பெற்ற முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமைக்குரியவர் பெயர் சூட்டப்பட்ட இந்தப் புறநகர், தடுப்பூசி அதிகம் போட்டுக் கொண்ட முதல் இடம் என்ற பெருமை பெறுகிறது.

Edmondson Park has more people vaccinated than any suburb around it. Source: NSW Health
90 சதவீதத்திற்கும் அதிகமானோர்
Edmondson Park என்ற இடத்தில் வாழும் சுமார் 3,100 பேரில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் சுற்றைப் பெற்றுள்ளனர், மேலும் 80 முதல் 89 சதவீதத்தினருக்கு தடுப்பூசி முழுமையாகப் போடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் வாழும் மக்கள் வெளிநாடுகளிலிருந்து குடிவந்தவர்கள் என்பதால் அதிகப்படியானவர்கள் தாங்களாகவே தடுப்பூசி போட முடிவெடுத்திருக்கலாம் என்று Liverpool மேயர் Wendy Waller கூறியிருக்கிறார்.
15 சதவீதத்தினர் இந்திய வம்சாவளி
2016 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இங்கு வாழ்பவர்களில் 15 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஆறு சதவீதத்திற்கும் சற்று அதிகமானவர்கள் இத்தாலியர்கள், அத்துடன் கிட்டத்தட்ட ஐந்து சதவீதத்தினர் சீன பின்னணி கொண்டவர்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.