Highlights
- மெல்பனில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 4200-ஐத் தாண்டியுள்ளது.
- மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது.
இவர்களில் இருவர் ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் மற்றவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து மெல்பனில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
42 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இவர்களில் 6 பேர் நேற்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஏனைய மூவர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதுதவிர வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக Arcare Maidstone முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழ்பவர் மற்றும் அங்கு பணிபுரியும் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் முதியோர் பராமரிப்பு இல்லங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
குறிப்பாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது Arcare Maidstone பணியாளர் Bluecross Sunshine பராமரிப்பு இல்லத்திலும் பணிபுரிந்துள்ளதையடுத்து அந்த இல்லமும் முடக்கப்பட்டுள்ளதுடன் முதியோர் பராமரிப்பு ஊழியர் ஒரு இடத்தில் மட்டுமே வேலைசெய்ய முடியும் என்ற சட்டமும் மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவதை கட்டாயமாக்கலாமா என்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு மாநிலங்களுடன் இணைந்து ஆலோசிக்கவுள்ளது.
இதேவேளை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 4200-ஐத் தாண்டியுள்ளது.
விக்டோரியாவில் தற்போது ஆரம்பித்துள்ள கோவிட் பரவல் மேலும் மோசமடையலாம் என எச்சரித்துள்ள சுகாதாரத்துறையினர் எவருக்கேனும் சிறியளவிலான அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்துள்ளனர்.
இப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் விக்டோரியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலையின் ஐந்தாவது நாள் இன்றாகும்.
விக்டோரியாவின் நிலை தொடர்பில் ஒவ்வொரு நாளும் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும் அதைப்பொறுத்தே முடக்கநிலை மேலும் நீடிக்கப்படுமா என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறமிருக்க தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் அவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியல் 330 ஆக அதிகரித்துள்ளது.
இந்த இடங்களின் விவரங்களை தமது இணையத்தில் வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


