‘Welcome to Country’ என்பது கடந்த கால பாரம்பரியத்தை கௌரவிக்கும்வகையில் ஒரு நிகழ்வின் தொடக்கத்தில் வழங்கப்படும் ஒரு பாரம்பரிய வரவேற்பாகும்.
இது Traditional Custodians- பாரம்பரிய பாதுகாவலர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றது.
இவர்கள் காலனித்துவத்திற்கு முன்பிருந்தே ஆஸ்திரேலிய மண்ணைக் கவனித்து பாராமரித்துக்கொண்ட பூர்வீக குடிமக்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.
SBS பூர்வீக குடி விவகாரங்கள் குறித்த ஆலோசகர் -Aboriginal Elder Rhoda Roberts, 1980 களில் ‘Welcome to Country’ என்ற வார்த்தைப்பிரயோகம் உருவாகக் காரணமாக இருந்தவர் என்பதுடன் வரவேற்பை வழங்குவதற்கான நவீன முறைகளை உருவாக்க உதவியவரும் ஆவார்.

‘Custodian’ மற்றும் ‘Elder’’ என அழைக்கப்படுபவர்கள் தமது சமூகம் குறித்து ஆழ்ந்த கலாச்சார அறிவைக் கொண்டிருப்பதுடன் பாதுகாவலர்களாகவும் செயற்படுகின்றனர்.
‘Welcome to Country’ ஒரு பேச்சு வடிவிலோ, நடன வடிவிலோ அல்லது smoking ceremony வடிவிலோ அமையலாம்.
Country’ என்ற சொல் பலவற்றைக் குறிக்கிறது. இது நிலம், நீர்வழிகள் மற்றும் வானத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் அதேநேரம் வாழ்க்கை, குடும்பம் மற்றும் இணைப்பு ஆகியவற்றின் ஆதாரத்தையும் உள்ளடக்கியது என்று பூர்வீக குடி மூப்பரான Jude Barlow கூறுகிறார்.
Welcome to Country’ ஏற்கனவே குறிப்பிட்டதுபோல Traditional Custodians பாரம்பரிய பாதுகாவலர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றது. அதிலும் குறிப்பாக
நீங்கள் இருக்கும் அந்த நிலத்தின் பாரம்பரிய பாதுகாவலர்களால் வரவேற்பு செய்யப்பட வேண்டும்.

பெரும்பாலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான பாரம்பரிய உரிமையாளர் குழுவாக முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், பாரம்பரிய பாதுகாவலர்கள் நன்கு அறியப்பட்டவர்களாக இருப்பர். சில பகுதிகளில் அவர்கள் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்றால் பாதுகாவலர்களை அடையாளம் காண சில ஆராய்ச்சி தேவைப்படுகிறது,
உங்கள் உள்ளூர் Aboriginal Land Council அல்லது பூர்வீக குடி மக்களுக்கான சுகாதார சேவை வழங்கும் நிறுவனங்களைத் தொடர்புகொள்வது உங்களை சரியான திசையில் வழிகாட்டக்கூடும்.
இதேவேளை மற்றுமொரு முக்கிய அம்சமான ‘Acknowledgement of Country’ என்பது முக்கிய கூட்டங்களில் இடம்பெறும் ஒரு முக்கியமான வரவேற்பு நெறிமுறையாகும்.
இது இது ‘Welcome to Country’யிலிருந்து வேறுபடுகிற அதேநேரம் இதனை யாரும் நிகழ்த்த முடியும்.

உங்கள் சொந்த ‘Acknowledgement of Country’-ஐத் தயாரிக்கும் போது, ஏற்கனவே எழுதப்பட்டுள்ள ஸ்கிரிப்டை மீண்டும் பயன்படுத்துவது எளிது. இருப்பினும், வார்த்தைகள் உங்கள் சொந்த குரலிலும் இதயத்திலிருந்தும் வரும்போது அது அதிக கனதியானதாக அமையும்.
‘Acknowledgement of Country’-க்கென குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவும் இல்லை என்றபோதிலும் இதைத் தயாரிப்பதற்கு உங்களுக்கு உதவ பல ஆன்லைன் ஆதாரங்கள் உள்ளன. இதை மனப்பூர்வமாக செய்வதே முக்கியம்.
நீங்கள் தயாரிக்கும் ‘Acknowledgement of Country’-இல் நீங்கள் இருக்கும் இடத்தின் பூர்வீக பெயரைப் பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள்.
அந்த இடத்தின் பாரம்பரிய பாதுகாவலர்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால் அவர்களைக் குறிப்பிடுங்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பெரியவர்களுக்கும் மரியாதை செலுத்துங்கள்.
நீங்கள் இருக்கும் நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றால், பாரம்பரிய உரிமையாளர்களுக்கான பொதுவான ஒப்புதலை வழங்குவது சிறந்தது.
‘Acknowledgement of Country’-ஐ வழங்குவதற்கு முயற்சி செய்வது மிகவும் மரியாதைக்குரிய விடயம் ஆகும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
