முக்கிய விடயங்கள்
- WorldPride 2023 சிட்னியில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறும்
- இந்த உலகளாவிய LGBTIQ+ நிகழ்வு தெற்கு அரைக்கோளத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை
- சிட்னி நகரில் Gay and Lesbian Mardi Gras தொடங்கி, 45 ஆண்டுகள் நிறைவை இந்த வருட ஆண்டு விழா குறிக்கிறது
மனித உரிமைகள், உலகளாவிய சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் அரவணைத்து வாழ வேண்டும் என்பவற்றை எடுத்துரைக்க, LGBTIQ+ சமூகத்தினர் முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் WorldPride ஒரு கொண்டாட்டங்களைத் தொடங்கினார்கள்.
இந்த வருடம் நடைபெறும் WorldPride 2023, சிட்னியில் நடைபெறுவதால், 45வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Sydney Gay and Lesbian Mardi Gras ஊர்வலங்களும் முதன் முதலில் அவர்கள் ஊர்வலமாகச் சென்ற Oxford தெரு வழியே, பெப்ரவரி 25ஆம் தேதி அன்று பயணிக்கவுள்ளது.

இந்த உலகளாவிய WorldPride 2023, சிட்னி மாநகரில் நடக்கும் போது ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக NSW மாநில, கலை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் Ben Franklin வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார். மாநில பொருளாதாரத்தில் $112 மில்லியன் பங்களிப்பை செய்யும் இந்த நிகழ்வு, உலக அரங்கில் சிட்னி நகரைக் காட்சிக்கு வைக்கும் என்றார் அவர்.
இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக, சிட்னி துறைமுகப் பாலம் மார்ச் மாதம் 5ஆம் தேதி மூடப்பட்டு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும்.
“எங்கள் அடையாளச் சின்னமான சிட்னி துறைமுகப் பாலத்தின் குறுக்கே 50,000 பேர் அணிவகுத்துச் செல்லும் போது, பல அற்புதமான படங்கள் உலகம் முழுவதும் பரப்பப்படும்” என்று சிட்னி பெருநகர சாலைகளுக்கான அமைச்சர் Natalie Ward கூறினார்.

இவ் விழாவில், நம் நாட்டுப் பிரதமர் Anthony Albanese மற்றும் வெளியுறவு அமைச்சர் Penny Wong கலந்து கொள்கின்றனர். அமைச்சர் Penny Wong தன்னை ஒரு பாலின சேர்க்கையால் ஈர்க்கப்பட்ட பெண் என்று அடையாளம் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சகிப்புத் தன்மையைப் பற்றி நாங்கள் அதிகம் பேசுகிறோம் - சகிப்புத்தன்மை மிகவும் முக்கியமானது - ஆனால் இந்த நிகழ்வு சகிப்புத்தன்மையை விட முக்கியமான ஒரு படியாகும்” என்று Mardi Gras அணி வகுப்பில் கலந்து கொள்ளவுள்ள முதல் ஆஸ்திரேலியப் பிரதமரான Anthony Albanese கூறினார்.
“நாம் எமது பன்முகத் தன்மையைக் கொண்டாட வேண்டும், பொறுத்துக் கொள்வது என்பது மட்டும் போதாது.... ஏனென்றால், எமது பன்முகத்தன்மையே நமது மக்களுக்குப் பெரும் பலத்தை அளிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் Mardi Gras மரபு
சிட்னியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் சிலர் (Gay Solidarity Group என்ற பெயரில்) ஒன்று கூடி, 1978ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி ஆரம்பித்த ஒரு நாள் விழா தான் தற்போது Sydney Gay and Lesbian Mardi Gras என்று சிட்னி நகரின் மாபெரும் விழாக்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக குரல் எழுப்புவது தான் அன்று அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இரவில் தெரு வழியாக ஒரு அணிவகுப்பு நடத்தவும், அதைத் தொடர்ந்து விடியல் பொழுதில் அந்த அணி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் ஒன்று கூடி ஒரு பொதுக் கூட்டத்தைக் காலையில் நடத்தவும் இந்தக் குழு திட்டமிட்டது.
ஆனால், காவல்துறையினர் இந்த அணி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தது மட்டுமின்றி பலரைக் கைது செய்த பின்னர், பொது மக்கள் ஆர்வம் இவர்கள் மீது திரும்பியது.
படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வந்த Sydney Gay and Lesbian Mardi Gras, உலகின் மிகப்பெரிய LGBTIQ+ திருவிழாக்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
தெற்காசிய நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்களா??
300ற்கும் மேற்பட்ட நிகழ்வுகள், WorldPride 2023 கொண்டாட்டங்களில் இடம்பெறும். “கூடுவோம், கனவு காண்போம், பறை சாற்றுவோம்” என்ற பொருளில், இந்த வருட கொண்டாட்டங்களின் கருப்பொருள் – “'Gather, Dream and Amplify” என்பதாகும்.
ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் நடைபெறும் மிகப்பெரிய மனித உரிமைகள் மாநாடுகளில் ஒன்றாகும். இதில், தெற்காசிய நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட உலகெங்கிலும் இருந்து 60 பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Sydney Gay and Lesbian Mardi Gras தொடங்கப்பட்டு 45வது ஆண்டு நிறைவைக் கொண்டாட, இந்நாட்டின் LGBTIQ+ சமூகத்திற்குப் பங்களித்த 45 பேருக்கு வானவில் விருது - Rainbow Champions என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலக அழகி - 2020 Miss Universe Australia, Maria Tatthil அவர்களில் ஒருவர்.
இலாப நோக்கற்ற அமைப்பான Trikone Australia ஏற்பாடு செய்யப்பட்ட இசை, நடன மேடை நிகழ்ச்சியில் 'Bar Bombay' மற்றும் 'Sunderella' என்ற குழுக்கள் கலந்து கொள்கின்றன.
தனது அமைப்பு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தெற்காசிய LGBTIQ+ கலைஞர்களுக்குப் பாதுகாப்பான தளம் அமைத்துக் கொடுப்பதாக Trikone Australia அமைப்பின் Kshitija Deshmukh கூறினார்.

“பாலிவுட் தாக்கம் இங்குள்ள பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் அதே வேளையில், இங்கு எமது சமூகம் பெரிதாகிக் கொண்டு வருவதால் எமது பிரதிநிதித்துவமும் இந்த நிகழ்வுகளில் அதிகரித்து வருகிறது. அதனை மேடை நிகழ்வுகளிலும் கூடுதலாகப் பார்க்க முடிகிறது.”
“எங்கள் வண்ணமயமான கலை வடிவங்களை இங்கு பரப்புவதில் நாம் தொடர்ந்தும் அசைக்க முடியாத ஆர்வத்தைக் காட்டி வருகிறோம்” என்று அவர் கூறினார்.
எம்மைப் பற்றி பரவலாக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார் “Sunderella” (சுந்தரெல்லா) நாடகத்தில் நடிக்கும் Kashif Harrison.
“இந்த இசை நாடகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் தெற்காசியப் பின்னணி கொண்ட 17 பேர் நடிக்கிறார்கள். மேலும் இந்த நாடகம் காதல், வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளல்... இந்த ஆண்டின் கருப்பொருளுடன் நன்றாக எதிரொலிக்கிறது” என்று அவர் கருத்து தெரிவித்தார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
