ஆஸ்திரேலியாவில் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை. அது ஒரு வணிக நிகழ்வாக இருக்கலாம், குழந்தைகளுக்கான ஒன்றுகூடலாக இருக்கலாம், BBQ அல்லது நண்பர்களுக்கான இரவு விருந்தாக இருக்கலாம். இப்படியான நிகழ்வுகளில் நம்மில் பெரும்பாலானோர் ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு நிகழ்வில் கலந்துகொள்வோம்.
இப்படியாக நாம் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போதோ அல்லது நிகழ்வு ஒன்றை நடத்தும்போதோ நாம் சில நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
ஒருவரின் வீட்டிற்கு ஒரு விசேட நிகழ்வுக்குச் செல்வது அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவானது எனவும் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான வடிவங்களைக் கொண்டுள்ளது எனவும் சொல்லும் Australian School of Etiquette நிர்வாகி Zarife Hardy ஆஸ்திரேலியாவில் மிகவும் பொதுவான ஒன்றுகூடல் BBQ என்கிறார்.

உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களை வரவழைக்கும்போது சில நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
குறிப்பாக உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது அவர்களுடன் நீங்கள் நேரம் செலவழிக்கும்வகையில் காரியங்களை திட்டமிட வேண்டும். விருந்தினர்கள் வந்தபின்னரும் நீங்கள் சமையலறையில் நேரம் செலவிடுவது அழகல்ல என்கிறார் Zarife Hardy.
அதேநேரம் நீங்கள் வேறொருவரின் வீட்டிற்கு விருந்திற்கு செல்கிறீர்கள் என்றால் வெறுங்கையுடன் செல்லாமல் ஒரு சிற்றுண்டி அல்லது இனிப்பு போல ஏதேனுமொரு சிறிய பரிசைக் கொண்டுசெல்வது நல்லது என சொல்கிறார் Overseas Students Australia நிறுவனர் மற்றும் CEO சாம் ஷர்மா.

ஒரு விருந்தினராக கவனத்தில் கொள்ள வேண்டிய பிற பொதுவான மரியாதையான விடயங்களில், தாமதமாக வராமல் இருப்பது, ஆடை பொருத்தமானதா என்பதைச் சரிபார்ப்பது மற்றும் முடிந்தவரை விருந்தை நடத்துபவருக்கு உதவியாக இருப்பது ஆகியவை அடங்கும்.
சர்வதேச மாணவராக 17 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்த சாம் ஷர்மா ஆஸ்திரேலிய விருந்துபசார நிகழ்வுகளுடன் தொடர்புடைய சில சொற்களை புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இதில் sparkling wineஐக் குறிக்கும் 'bubbles 'உங்கள் சொந்த பானத்தை கொண்டு வாருங்கள்' என்பதைக் குறிக்கும் 'BYO' மற்றும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துவதற்கான 'RSVP' போன்ற சொற்கள் இதில் அடங்கும் என்கிறார்.
அதேநேரம் சைவ உணவு உண்பவர் என்பதால், தான் செல்லும் விருந்துகளுக்கு ஏதேனுமொரு சைவ உணவுப்பொருளைக் கொண்டுசெல்வதன்மூலம் விருந்தை ஏற்பாடு செய்பவருக்கு உதவியாக இருப்பது தனது வழக்கம் எனவும் சாம் ஷர்மா கூறுகிறார்.

குழந்தைகளுக்கான விருந்துகள் என்று வரும்போது, அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கும் ஏதேனும் உணவு மற்றும் பானங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்வது சிறந்தது என ஊக்குவிக்கிறார் இரு குழந்தைகளின் தாயரான மெல்பனைச் சேர்ந்த Sonja Herzberg.
ஆனால் பெற்றோருக்கான உணவு மற்றும் பானத்திற்கென அதிகமாக செலவுசெய்யத் தேவையில்லை எனவும் Sonja Herzberg வலியுறுத்துகிறார்.

விருந்தில் இருந்து ஒரு சிறிய நினைவுப் பரிசாக, குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய சிறிய பரிசுகளுடன் கூடிய party bagsஐ விருந்தை ஏற்பாடு செய்த பெற்றோர் தயாரிப்பதும் சிறந்தது என Sonja Herzberg ஆலோசனை சொல்கிறார்.
குழந்தைகள் விருந்திற்கு வருபவர்கள் பரிசுகளைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விலையுயர்ந்த பரிசுகளை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு Australian School of Etiquette நிர்வாகி Zarife Hardy ஆலோசனை கூறுகிறார்.
இதுஇவ்வாறிருக்க கடுமையான விதிகள் பின்பற்றப்படும் நிகழ்வாக வணிக நிகழ்வுகள் உள்ளன என கூறும் Zarife Hardy உங்கள் ஆடை முதல் அங்கு நடந்துகொள்ள வேண்டிய முறை வரை கவனம்செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






