Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலிய சினிமா: Japanese Story (dir. Sue Brooks 2003)

SBS

எழில் நிறைந்த, ஆனால் ஈவு இரக்கமற்ற, மேற்கு ஆஸ்திரேலியாவின் பாலைவன நிலப்பரப்பில் விவரிக்கப்பட்டுள்ள வழக்கத்துக்கு மாறான ஒரு காதல் கதையே, Japanese Story (dir. Sue Brooks 2003) திரைப்படம். வெள்ளைக்கார ஆஸ்திரேலியப் பெண்ணுக்கும், நிலக்கரிச் சுரங்கங்களைப் பார்வையிட வருகை தரும் ஜப்பானிய வியாபாரிக்கும் இடையே அரும்பும் ஆழமான காதலை, எதிர்பாராத திருப்பங்களுடன், கண்களை கொள்ளை கொள்ளும் காட்சியமைப்புகள் மூலமாக நகர்த்திச் செல்கிறார், இயக்குனர் Sue Brooks. இந்தத் திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.


Published

Updated

By Renuka

Source: SBS



Share this with family and friends


எழில் நிறைந்த, ஆனால் ஈவு இரக்கமற்ற, மேற்கு ஆஸ்திரேலியாவின் பாலைவன நிலப்பரப்பில் விவரிக்கப்பட்டுள்ள வழக்கத்துக்கு மாறான ஒரு காதல் கதையே, Japanese Story (dir. Sue Brooks 2003) திரைப்படம். வெள்ளைக்கார ஆஸ்திரேலியப் பெண்ணுக்கும், நிலக்கரிச் சுரங்கங்களைப் பார்வையிட வருகை தரும் ஜப்பானிய வியாபாரிக்கும் இடையே அரும்பும் ஆழமான காதலை, எதிர்பாராத திருப்பங்களுடன், கண்களை கொள்ளை கொள்ளும் காட்சியமைப்புகள் மூலமாக நகர்த்திச் செல்கிறார், இயக்குனர் Sue Brooks. இந்தத் திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.


மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த் நகரில் உள்ள ஒரு புவியியல் மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் SANDY EDWARDS. அவர் ஒரு புவியியலாளர். ஆஸ்திரேலியாவில் உள்ள தாதுப்பொருள் சுரங்கங்களைப் பார்வையிட வருகை தரும் வியாபாரி HIROMITSU TACHIBANA.

நகருக்கு அப்பால் வெகு தொலைவில் இருக்கும் PILBARA பகுதியில் உள்ள ஆள் அரவம் அற்ற சுரங்களுக்கு HIROMITSU-வை அழைத்துச் செல்லும் பொறுப்பு SANDY-யின் மீது திணிக்கப்படுகிறது. வேண்டா வெறுப்போடும், வேறு வழியின்றியும் அந்தப் பொறுப்பை ஏற்கிறாள் SANDY.

மொழிப் பிரச்னை, கலாச்சார வேறுபாட்டால் வரும் அதிர்ச்சி, பரஸ்பர வெறுப்புணர்வு என கரடுமுரடாகத் துவங்குகிறது, SANDY -க்கும் HIROMITSU -வுக்கும் இடையிலான அறிமுகம்.

பெர்த் நகரிலிருந்து சுமார் ஆயிரம் மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள பாலைவனத்தின் நடுவில், வெட்ட வெளியில் சிக்கிக் கொள்கின்றனர், SANDY-யும் HIROMITSU-வும்.

இரவில், கடுமையான குளிர்; பகலிலோ, சுட்டெரிக்கும் வெய்யில், என மேற்கு ஆஸ்திரேலியாவின் காட்டமான பாலை நிலத்தின் கொடூரத்தை SANDY-யும் HIROMITSU-வும் இணைந்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

விளைவாக, இருவருக்குமான இறுக்கம் தணிகிறது; நெருக்கம் கூடுகிறது; அந்த நெருக்கம் தந்த உறவுக்குக் காரணம், தனிமையின் அலுப்பை விரட்டியடிக்கும் மோகமா? உடல்களின் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் காமமா? தோல் நிறத்துக்கும், தோற்றத்துக்கும் அப்பாற்பட்ட காதலா? ஒருவரையொருவர் தோற்கடிக்க முயலும் சுயநலமா? இல்லை, வெறும் சந்தர்ப்பவாதமா?  அல்லது சந்தர்ப்பங்களின் நிர்ப்பந்தமா? என்று தீர்மானம் செய்யும் முன்னரே, விசித்திரமான விபத்து ஒன்றில் இறந்து போகிறான், HIROMITSU.

ஓரிரு நிமிடங்களுக்கு முன்னர் தன்னோடு உறவு கொண்ட, சிரித்து மகிழ்ந்த, ஆடிப்பாடிய, தன் மனதின் ஆழத்தில் புதைந்திருந்த சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்ட ஆரம்பித்த HIROMITSU- வை உயிரற்ற பிணமாக கையில் ஏந்தியபடி செய்வதறியாது பதறுகிறாள், SANDY.

ஆள் அரவமே சுத்தமாக இல்லாத பாலைவனத்தின் நடுவே, ஆசை நாயகனின் பிணத்தை ஏந்திக்கொண்டு, இதயம் நிறைய சோகத்தை சுமந்து கொண்டு, மனது முழுக்க கேள்விகளை கேட்டுக்கொண்டே பயணத்தைக் தொடர்கிறாள், SANDY. அவளுக்கும், HIROMITSU-வின் மனைவிக்கும் நடக்கும் உரையாடலே இந்தத் திரைப்படத்தின் CLIMAX-ஆக அமைக்கப்பட்டுள்ளது.

துவக்கத்தில் ஒரு சராசரிக் காதல் காமெடி என்ற உணர்வை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த காட்சி அமைப்புகளில் எதிர்பாராத சம்பவங்களை, யதார்த்தமாக வைத்து திரைக் கதையை நகர்த்துகிறார், இயக்குனர் SUE BROOKS. SANDY-ஆக நடித்த TONY COLLETTE தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலமாக பார்வையாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார். HIROMITSU-வாக நடித்துள்ள GOTARO TSUNASHIMA தனது கதாபாத்திரத்தின் எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார்.

JAPANASE STORY திரைப்படத்தின் பெரும்பகுதி PILBARA பகுதியிலேயே முழுக்க முழுக்க பயணிக்கிறது. பூரவக்குடி மக்களின் கலாச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நிலப்பரப்பை, ஒளிப்பதிவாளர் IAN BAKER அற்புதமாகக் கையாண்டுள்ளார்.

JAPANESE STORY திரைப்படத்தில் வரும் பரந்து விரிந்த ஆஸ்திரேலியப் பாலை நிலம், கதையோடு மட்டுமல்ல, அந்தக் கதையைக் காட்சியாகக் காணும் நம்மோடும் உரையாடுகிறது. நம் வலிமையை, பலவீனத்தை, பரிதவிப்பை, நொடிப்பொழுதில் முடிந்து போகும் மனித வாழ்வை, அதன் நிலைப்புத் தன்மையற்ற இயல்பை மவுனமாகவும் கம்பீரமாகவும் எடுத்துரைக்கிறது, PILBARA பாலைவனம் மூலமாக எடுத்துரைக்கிறது, JAPANESE STORY.

 

 

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now