Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலிய சினிமா: Snowtown (dir. Justin Kurzel 2011)

SBS

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், BODIES-IN-THE-BARRELS MURDERS என்று வர்ணிக்கப்பட்ட கொடூர தொடர் கொலைகள், ஆஸ்திரேலியக் கண்டத்தையே நடுங்கச் செய்தன. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட Snowtown திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.


Published

By Renuka

Source: SBS



Share this with family and friends


இருபது ஆண்டுகளுக்கு முன்னர், BODIES-IN-THE-BARRELS MURDERS என்று வர்ணிக்கப்பட்ட கொடூர தொடர் கொலைகள், ஆஸ்திரேலியக் கண்டத்தையே நடுங்கச் செய்தன. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட Snowtown திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.


வன்முறை, வக்கிரம், சித்திரவதை, உடலை உருக்குலைத்து கொலை செய்தல், நரமாமிசம் உண்ணல் என ரத்தக்காட்டேரிகளின் கதைகளில் வரும் கோர சம்பவங்களின் குரூர முகமாக SNOWTOWN கொலைகள் காட்சியளித்தன.

தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டுக்கு வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குறுநகரம்தான் SNOWTOWN.

விவசாயத்துக்கும், காற்றாலை மின் உற்பத்திக்கும் பெயர் போனது இந்த அமைதியான, அழகான கிராமம். அந்த நகரின் பயன்படுத்தப்படாத வங்கிக் கட்டடம் ஒன்றின் பெட்டக அறைக்குள், அமிலம் நிறைந்த பீப்பாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த எட்டு உடல்களை தெற்கு ஆஸ்திரேலிய போலீசார் கண்டெடுத்தனர்.  இந்த சம்பவம்தான் SNOWTOWN திரைப்படத்தின் கருப்பொருள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ELIZABETH HARVEY என்னும் பெண் SALISBURY NORTH என்ற புறநகரில் தனது மூன்று ஆண் பிள்ளைகளோடு வசித்து வருகிறார். அவர் வெளியே சென்றிருக்கும்போது, ELIZABETH-ன் காதலன் அந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்கிறான்.

இது குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட போதிலும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில், ELIZABETH-க்கு JOHN BUNTING மற்றும் அவனது கூட்டாளிகள் சிலரின் அறிமுகம் கிடைக்கிறது.

ELIZABATH-ன் விடலை வயது மகனான, JAMIE, JOHN-ஐ தன்னுடைய தந்தையின் வடிவாகப் பார்க்கிறான். நட்புணர்வைப் பிரதிபலிக்கும் கண்களுக்குள் மறைந்திருக்கும் ரத்த வேட்கையையும், வசீகரப் புன்னகைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வக்கிரதையும், துணிச்சலான அணுகுமுறையின் போர்வைக்குள் புதைந்திருக்கும் கொலைவெறியையும் 16-வயது JAMIE-யினால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை.

குழந்தைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும் அடியோடு வெறுப்பவன், JOHN. அப்படிப்பட்டவர்களை சித்தரவதை செய்து கொலை செய்வது ஒன்றே சரியான தீர்வு என்றும், அது ஒன்றே சமூகத்தை சீரமைக்கும் வழி என்றும் நம்புகின்றனர், JOHN மற்றும் அவனது கூட்டாளிகள். அதன் தொடர்ச்சியாக, கூட்டாளிகளின் உதவியோடு கொன்று அழிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்கிறான், JOHN.

JOHN, அவனது கூட்டாளிகள் மற்றும் JAMIE ஆகியோர் இணைந்து  பன்னிரண்டு பேரை கொன்று தீர்க்கின்றனர். கொல்லப்பட்டவர்களில், JAMIE-இன் சகோதரர்களும், நண்பனும் அடங்குவர்.

இந்தக் கொடூர சம்பவத்தின் விசித்திரமான உண்மை என்னவென்றால், கொலையாளிகளும்  சரி, கொலையுண்டவர்களும் சரி, SNOWTOWN நகரைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் கொன்றவர்கள் சடலங்களை துண்டு துண்டாக்கி கொலையாளிகள், பீப்பாய்களுக்குள் மறைத்து வைத்த இடம்தான் SNOWTOWN நகரம்.

திரைப்படம் முழுக்க JOHN BUNTING-ன் நடுங்க வைக்கும் ஆதிக்க பாவனையையும், அவனது கூட்டாளிகளின் இயலாமைத் தன்மையையும் கட்டி வைக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பரிதாப நிலையையும் கோரமான காட்சிகளைக் கொண்டு விவரிக்காமல், உளவியல் உணர்வுகளோடு விளையாடும்படிக்கு காட்சியமைப்பு செய்துள்ளார், இயக்குனர் JUSTIN KURZEL.

இதற்கு உதாரணமாக இந்தத் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. JAMIE, தன் சகோதரன் கொல்லப்பட்ட பிறகு, விசும்பிக் கொண்டே வீட்டின் வெளியே வந்து அமர்வான். அப்போது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் இருவர் சாலையில் விளையாடிக் கொண்டிருப்பர்.

ஆனந்தம் நிறைந்ததைப் போல தோற்றமளிக்கும் அன்றாட வாழ்க்கை; அந்த அன்றாட வாழ்க்கையின் நடுவில், ஆங்காங்கே நடைபெறும் அசாதாரண அவலங்கள் என இரு வேறுபட்ட காட்சிகளை ஒன்றுக்குள் ஒன்றாக வைத்து பார்வையாளர்களின் உணர்வுகளைக் கசக்கிப் பிழிகிறார் இயக்குனர், KURZEL.

SNOWTOWN தொடர்கொலைகளுக்குப் பின்னணியில் பிணைந்திருந்த தந்தை-மகன் உறவு, அந்த உறவுகளுக்குள் இருந்த மனிதநேயம்; அதற்குள் ஆழ்ந்திருந்த பாதிப்பியல் உணர்வுகளை, தான் வெளிக்கொண்டு வர விரும்பியதாக இயக்குனர் KURZEL பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

மனதுக்குள் கிலியை ஏற்படுத்தும் காட்சியமைப்பு, ஊகிக்க இயலாத ஆனால் எச்சரிக்கை உணர்வுகளை காதுகளுக்குள் தெளிக்கும் பின்னணி இசை, அச்சத்தை வரவழைக்கும்படிக்கு இயல்பான வெளிச்சத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள சாமர்த்தியம், மென்மையும் முரட்டுத்தன்மையும் கலந்த மர்மமான கதாபாத்திரங்கள் என SNOWTOWN திரைப்படம், நம் உள்ளுணர்வோடு சடுகுடு விளையாடுகிறது.

நிஜ சம்பங்களில் நிகழ்ந்த வன்முறைக்கு இணையாக இந்தத் திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் புகுத்தப்படாவிட்டாலும், இந்தத் திரைப்படத்தை குழந்தைகளோடு பார்ப்பது உகந்ததல்ல.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now