மருத்துவ சிகிச்சைக்காக நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு மெல்பேர்ன் ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 60க்கும் மேற்பட்ட அகதிகள் பலத்த எதிர்ப்பின் மத்தியில் வேறொரு ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதை எளிதாக்கியிருந்த Medevac சட்டம் தற்போது மீளப்பெறப்பட்டுள்ளபின்னணியில் இதன்கீழ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்ட சுமார் 194 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பிரிஸ்பேர்னிலுள்ள கங்காரு பொயின்ட் ஹோட்டலிலும் ஏனையவர்கள் மெல்பேர்ன் பிரஸ்டனிலுள்ள மந்த்ரா ஹோட்டலிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது மந்த்ரா ஹோட்டலில் இருந்த அனைவரும் Carlton-இலுள்ள Park ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டலிலுள்ள அகதிகளை வேறிடத்திற்கு மாற்றாமல் சமூகத்தில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி அகதிகள் செயற்பாட்டாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தபோதிலும் அவர்களது எதிர்ப்பைமீறி இன்றையதினம் அங்கிருந்த அனைவரும் Park ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இன்றுகாலை மந்த்ரா ஹோட்டலுக்கு முன்பாக பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் கூடியதையடுத்து அவர்களை கட்டுப்படுத்தவும் அகதிகளை வாகனத்தில் வேறிடம் கொண்டு செல்வதற்கான பாதுகாப்புப் பணியிலும் பெருமளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மந்த்ரா ஹோட்டலுடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் காலாவதியாகின்ற பின்னணியில் இந்த இடமாற்றம் நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.