ஒருவருக்கு கொரோனா வந்திருக்கலாம் என்பதை சந்தேகப்படுவதற்கான அறிகுறிகள் என்ன?
ஒருவருக்கு காய்ச்சல், அதாவது உடம்பின் வெப்பம் 37.5 டிகிரிக்கு மேல் இருந்தால், இருமல், மூச்சு விடுவதில் கடினம், தொண்டை வலி, அல்லது சுவை மற்றும் நுகர்வு உணர்ச்சிகள் குறைந்துவிட்டது போல் தோன்றினால் அவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அவர் உடனே மருத்துவ உதவியை நாடுவது அவசியம். மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் 1800 020 080 -க்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
அப்படி அவர் தொடர்பு கொண்டால், அவர் எங்கு சென்று சோதனை செய்து கொள்ளலாம் என்ற விபரங்கள் கொடுக்கப்படும். நேரடியாக ஒரு மருத்துவமனையில் விசாரித்தால் இந்த தகவலை பெற்றுக்கொள்ளலாம். அதன்பிறகு அவரிடம் இருந்து SAMPLE எடுக்கப்பட்டு, அநேகமாக 2 நாட்களுக்குள் அவரின் சோதனையின் முடிவு தெரிவிக்கப்படும்.
அந்த மாதிரி சோதனை செய்து ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அவர் என்ன செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ள அறிவுரைகள் என்ன?
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஒருவர் தனக்கு இந்த நோய் வந்திருக்கலாம் என்று சந்தேகம் வந்ததிலிருந்து, அவரின் சோதனையின் முடிவு வரும் வரை அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வது மிக அவசியம். ஏனென்றால் ஒருவேளை அவர் கொரோனா Positive ஆக இருந்தால் அவரின் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க இந்த தனிமை உதவி செய்யும்.
இப்படி ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தால் முதலில் அந்த சோதனை நிறுவனத்தில் இருந்து அவருக்கு தகவல் வரும். பிறகு மாநில சுகாதார துறையில் இருந்தும் தொடர்பு கொள்வார்கள்.
அவர் இனிமேல் என்ன செய்ய வேண்டும், என்னென்ன கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
அவர் எப்படி தன்னை தனிமைப்படுத்தி இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். மேலும் அவர் அப்படியான கட்டாய தனிமையில் இருக்கும் காலத்தில் அவரை தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதையும் கண்காணித்து வருவார்கள்,
மேலும், அவருக்கு இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் அவர் எங்கெங்கு சென்றார், யார் யாருடன் பழகினார் என்பதையும் சுகாதார துறையினர் விசாரிப்பார்கள். இதைத்தான் CONTACT TRACING என்கிறோம். இதன் மூலம் அவருக்கு எங்கிருந்து அல்லது யாரிடம் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம் அல்லது அவர் மூலமாக வேறு யாருக்கு பரவி இருக்கலாம் என்றும் கண்டுபிடிக்க முடியும்.
தனிமைப்படுத்திக் கொள்வது என்றால் வெளியில் உள்ளவர்களிடம் இருந்து தனித்து இருந்தால் போதுமானதா?
இதில் முக்கிய விடயம் என்னவென்றால், ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வது என்பது, அவர் வீட்டுக்குள் இருந்து கொண்டு வெளியில் உள்ளவர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்துவது மட்டுமல்ல. வீட்டுக்குள் இருக்கும்பொழுதுகூட, வீட்டில் உள்ள மற்றவர்களிடம் இருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இப்படி ஆனவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருக்க வேண்டியது அவசியமா?
ஒருவருக்கு கொரோனா Positive என்று தெரிந்தபின் அவருக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து அவரின் பாதிப்பு குறைந்த அளவில் இருக்கிறதா, சாதாரண அல்லது மிக அதிகமான அளவில் அதாவது MILD, MODERATE அல்லது SEVERE ஆக இருக்கிறதா என்பதை கணிக்கிறார்கள். அந்த கணிப்பை வைத்து அவர் வீட்டிலேயே இருந்து கொண்டு குணமாக முடியுமா அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியமா என்று முடிவு செய்கிறார்கள்.
இதில் ஒரு நல்ல தகவல் என்னவென்றால் சுமார் 80 சதவீதம் பேர் வீட்டிலேயே சுகம் அடைந்து விடுகிறார்கள்.
வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் ஒருவர் வேறு என்ன செய்ய வேண்டும்?
Australia-வின் National COVID-19 Clinical Evidence Taskforce- கொடுத்திருக்கும் தகவல்படி இப்படி வீட்டில் இருக்கும் ஒருவர், ஒரு சாதாரண காய்ச்சலில் இருந்து எப்படி குணம் அடைகிறாரோ அப்படி குணம் அடைந்து விடுகிறார் என்று சொல்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது அவருக்கு காய்ச்சலோ, உடம்பு வலி போன்ற சுகவீனங்கள் இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி அதற்கேற்ற மருந்துகள் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
குடும்ப மருத்துவர் அல்லது அவர் எப்பொழுதும் பார்க்கும் மருத்துவர் ஒருவர் இருந்தால் அந்த மருத்துவரிடம் தான் COVID -19 நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிவித்துக் கொள்ளலாம். ஏனென்றால் அவருக்கு பிற்காலத்தில் வேறு ஏதாவது உடல்நல பிரச்சினைகள் வந்தால் இந்த தகவல் ஒரு உதவியாக இருக்கலாம்.
இப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் உடல்நிலை எந்த விதத்திலாவது மோசமாக ஆரம்பித்தால் அவர் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது மிகவும் அவசியம். அவர் NATIONAL CORONAVIRUS HELPLINE 1800 020 080 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
மிகவும் மோசமான நிலையில் அவசர தொலைபேசி எண் 000 ஐ தொடர்பு கொள்ளவேண்டியது அவசியம்
இப்படி எத்தனை நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும்?
சாதாரணமாக 14 நாட்கள் இப்படி தனிமையாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இப்படி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்கும்போது 12 வது நாள் வரும்போது அவருக்கு இந்த வைரஸ் இன்னும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள மீண்டும் ஒரு சோதனை எடுக்கப்படலாம்.
அந்த சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸிலிருந்து அவர் குணமாகிவிட்டார் என்றாலும் கூட, அவர் எப்பொழுது தனது சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்பலாம் என்று சொல்வார்கள். அவ்வாறு சாதாரண வாழ்க்கை முறைக்கு அவர் திரும்பிய பிறகும், வெளியில் செல்லும்போது மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது, அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது, மற்றும் இருமும் போது, தும்மும் போது சுகாதார முறையில் செய்ய வேண்டியது அவசியம்.
முக்கியமாக மாநில அரசின் சுகாதார அறிவுரைகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
முக்கியமாக நாம் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த நோய் சிலருக்கு கொடூரமாக மாறக்கூடும். எனவே இதை வராமல் தடுப்பது மிக நல்லது.