ஆஸ்திரேலியாவில் இரண்டு பேர் இணைந்து ஒன்றாக வாழும்போது, அவர்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களது உறவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியும்.
De facto உறவை பதிவு செய்யும் நடைமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.
இருப்பினும், முறிவு ஏற்பட்டால், de facto உறவுகள் காமன்வெல்த் சட்டத்தின் கீழ் ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன. De facto உறவில் உள்ள தம்பதிகள் திருமணமானவர்களைப் போன்ற பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள்.
சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் de facto உறவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

De facto உறவு என்றால் என்ன, அது எப்போது சட்டத்தால் அங்கீகரிக்கப்படுகிறது?
De facto உறவின் வரையறை Family Law Act குடும்பச் சட்டத்தில் பரவலாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது, இது ஒரே அல்லது எதிர் பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்கள் "உண்மையான உறவில் இணைந்து ஒன்றாக வாழ்வது" என்று விவரிக்கிறது.
உங்கள் உறவை de facto உறவு என்று அங்கீகரிக்கப்படுவதற்கான செயல்முறை மற்றும் தேவைகள் நீங்கள் வசிக்கும் மாநிலம் அல்லது பிரதேசத்தைப் பொறுத்தது.
எடுத்துக்காட்டாக, தெற்கு ஆஸ்திரேலியாவில் de facto உறவுகள் Relationship Register Act 2016 உறவுப் பதிவுச் சட்டம் 2016 இன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. பதிவுசெய்தவுடன், ஆஸ்திரேலியாவில் எங்கும் இது அங்கீகரிக்கப்படும்.
குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சிட்னி வழக்கறிஞர் Nicole Evans, de facto உறவைப் பதிவு செய்வதில் உள்ள சில நன்மைகளை எடுத்துக் காட்டுகிறார். De facto உறவைப் பதிவு செய்வதன் மூலம் உங்கள் உறவை நீங்கள் நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. விசா பெறும் நடைமுறை மற்றும் மருத்துவ தேவைகளில் முடிவுகளை எடுக்க இந்த பதிவு உதவும் என்று மேலும் கூறுகிறார் Nicole Evans.

ஒரு de facto உறவைப் பதிவு செய்வது பெற்றோர் பராமரிப்பு குறித்து சட்டரீதியா கையாளவேண்டிய சூழலில் மிகவும் உதவியாக இருக்கும், குறிப்பாக ஒரே பாலின தம்பதியருக்கு இது பொருத்தமானது என்று Ms Evans விளக்குகிறார்.
De facto உறவு பதிவு செய்யப்படாத நிலையில், இணைந்து வாழும் இருவரில் ஒருவர், சொத்துப் பிரிவு அல்லது துணை பராமரிப்பு போன்றவற்றில் நீதிமன்றத்தின் முன் உரிமை கோரும் நிலையில் , de facto உறவு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க பல காரணிகள் கருதப்படுகின்றன.
இந்த காரணிகளில் உறவின் நீளம், சமூக மக்களுக்கு தெரிந்திருத்தல், இருவரின் பெயரில் ஏதேனும் கூட்டு நிதி, பாலியல் உறவின் இருப்பு மற்றும் தம்பதியினர் ஒன்றாக வாழ்கிறார்களா ஆகியவை அடங்கும்.
நீதிமன்றம் நம்பியிருக்கும் இந்த அளவுகோல்கள் குறிப்பிட்ட வழக்கைப் பொறுத்தது, மேலும் de facto உறவு குறித்து சில தவறான புரிதல் இருப்பதாக Ms Evans கூறுகிறார்.
De facto உறவு என்று அங்கீகரிக்க நீங்கள் குறைந்தது 2 வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டும் - இல்லை அது தவறான புரிதல் அதே போன்று 2 வருடங்கள் சேர்ந்து வாழந்தப் பின் சொத்தில் சம உரிமை உண்டு அதுவும் தவறான புரிதல். அதோடு De facto உறவில் இருப்பவர்கள் ஒரே வீட்டில் தான் வாழ வேண்டும் என்று இல்லை என்று கூறுகிறார் Ms Evans

De facto உறவில் உள்ள இருவரில் ஒருவர் சட்டப்பூர்வமாக வேறு ஒருவரைத் திருமணம் செய்திருந்தாலும் கூட, அந்த de facto உறவை அங்கீகரிக்கும் சட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ளது என்று கூறுகிறார் பிரிஸ்பனை சேர்ந்த குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் Damien Greer.
De facto உறவில் இருப்பவர்கள் அவர்கள் பிரிந்து 2 வருடங்களுக்குள் சொத்தில் உரிமை, குழந்தை பராமரிப்பு, துணை பராமரிப்பு போன்ற விடயங்களுக்கு நீதிமன்றத்தை நாடவேண்டும். சிறப்பு சூழ்நிலைகளில் நீதிமன்றத்தால் விதிவிலக்கு வழங்கப்படும். De facto உறவில் இருப்பவர்கள்
முன்வைக்கும் குடும்ப வழக்குகள் திருமணமான தம்பதிகள் முன் வைக்கும் வழக்குகள் போன்றே நீதிமன்றத்தால் கையாளப்படுகின்றன.
De facto உறவில் உள்ள தம்பதிகள், திருமணமான சகாக்களைப் போலவே, உறவின் போது எந்த நேரத்திலும் ஒரு நிதி ஒப்பந்தத்தில் நுழைய முடியும். ஆனால் இந்த வகை ஒப்பந்தத்தை ஒரு சட்ட நிபுணரால் மட்டுமே தயாரிக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிந்தால், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் உங்களிடையே எவ்வாறு பிரிக்கப்படும் என்பதற்கான ஒப்பந்தம் என்ன என்பதை இது தீர்மானிக்கிறது என்று விளக்குகிறார் Ms Evans.

குழந்தைகள் பராமரிப்பு மற்றும் நிதி தொடர்பான உடன்பாட்டை எட்டுவதற்கு, de facto தம்பதிகள் மத்தியஸ்த சேவைகளையும் அணுகலாம்.
மத்தியஸ்தம் இரு தரப்பினருக்கும் நியாயமான மற்றும் சமமான ஒரு உடன்பாட்டை எட்ட உதவும் என்று கூறுகிறார் Relationships Australia WA Counsellor Fiona Bennett.
மத்தியஸ்த செயல்முறை தன்னார்வமானது. ஒரு தரப்பினர் அதைத் தொடங்கும்போது, மத்தியஸ்த சேவை மற்ற நபரைத் தொடர்புகொண்டு அவர்கள் பங்கேற்கத் தயாராக உள்ளாரா என்று கேட்கும்.
இரு தரப்பினரும் தொடர ஒப்புக்கொண்டால், அவர்களின் உறவு வரலாற்றினை அறிய வழக்கமாக ஒரு திரையிடல் செயல்முறை பின்பற்றப்படுகிறது, Ms Bennett விளக்குகிறார்.

நீங்கள் நெருக்கடியில் இருக்கிறீர்களா?
அவசர சேவை 000 அல்லது லைஃப்லைன் 13 11 1 அல்லது தேசிய பாலியல் தாக்குதல், குடும்ப வன்முறை ஆலோசனை சேவை 1800 737 732 தொடர்புக்கொள்ளவதன் மூலம் உதவி பெறலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






