முக்கிய விடயங்கள்:
- வரலாற்று ரீதியாக, பூர்வீகக்குடி ஆஸ்திரேலியர்களைப் பற்றிய ஊடகச் சித்தரிப்புகள் குறைபாடுகள் நிறைந்தவை.
- பூர்வீகக்குடி ஊடகங்கள் அவர்களுக்காகக் குரல் கொடுக்கின்றன, அவர்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்றன, மேலும் ஒரேமாதிரியான பார்வைக்கு சவால் விடுகின்றன.
- TikTok மற்றும் Instagram போன்ற சமூக ஊடக தளங்கள் பூர்வீகக்குடி மக்களின் கதைகளை வெளியில் சொல்ல உதவியுள்ளன.
வரலாற்று ரீதியாக, பூர்வீகக்குடி ஆஸ்திரேலியர்களைப் பற்றிய ஊடகச் சித்தரிப்புகள் குறைபாடுகள் நிறைந்தவை. ஆரம்பகால செய்தித் தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் பெரும்பாலும் பூர்வீகக்குடி மக்களை, ஏதோ குறைவானவர்களாகவோ அல்லது குறைபாடுள்ளவர்களாகவோ சித்தரித்து வந்ததனால், பொதுமக்களின் கருத்துகள் அப்படியே ஆழமாக வடிவமைந்தன என்று கூறலாம்.
"நான் இளமையாக இருந்தபோது, ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்கவில்லை. இப்போது நாங்கள் தடைகளை உடைத்து எமது சிறப்பைக் கொண்டாடுகிறோம் - சர்வதேச அளவில் பூர்வீகக் குடிமக்களின் குரல்கள் ஒலிப்பது நம்ப முடியாதது" என்கிறார் Leanne Djilandi Dolby. அவர், தாய் வழியாக Noongar, Yamatji Naaguja Nunda பின்னணியும், தந்தை வழியாக Yawuru, Gija, மற்றும் Gooniyandi பின்னணியும் கொண்ட ஒரு பூர்வீகக் குடி பெண்.
Kabi Kabi [KAH-bee KAH-bee] மற்றும் Gorreng Gorreng [GOR-reng GOR-reng] பின்னணி கொண்ட Adam Manovic, ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி மக்களின் ஊடக அமைப்பான, First Nations Media Australia - சுருக்கமாக, FNMAயின் இணைத் தலைவர். ஊடகங்களில் பூர்வீகக் குடி மக்கள் இப்படி சித்தரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள நீண்டகால விளைவுகள் என்ன என்று விளக்குகிறார் Adam Manovic.
“மக்கள் ஒரு விடயத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில் ஊடகங்கள் பெரும் செல்வாக்கை செலுத்துகின்றன. 1900களில் ஆரம்பகால செய்தித் தாள்கள் மற்றும் வானொலியில் இருந்தே, பூர்வீகக்குடி ஆஸ்திரேலியர்களை, பூர்வீகக்குடி பின்னணி அல்லாதவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வடிவமைத்துள்ளது. பெரும்பாலும், தவறான எதிர்மறையான, ஒரே மாதிரியான பார்வையை ஊடகங்கள் நிலை நிறுத்தியுள்ளது.
இன்றும் கூட, ஒன்பது சதவீதமான பூர்வீகக் குடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியர்கள் மட்டுமே, ஊடகங்கள் தங்கள் சமூகங்களைப் பற்றிய சமநிலையான பார்வையை வழங்குவதாக நம்புகிறார்கள்” என்கிறார் அவர்.

Left: Tanja Hirvonen. Centre: Adam Manovic. Right: Leanne Djilandi Dolby ( Credit: SBS)
கட்டமைப்புகளில் உள்ள தடைகள் எவை?
முன்னேற்றம் இருந்தபோதிலும், FNMA போன்ற பூர்வீகக்குடி மக்களால் வழி நடத்தப்படும் ஊடக அமைப்புகளுக்கு, முறையான தடைகள் நீடிக்கின்றன. நிதி பற்றாக்குறை மற்றும் காலாவதியான உட்கட்டமைப்பு அவற்றின் வரம்பைக் கட்டுப்படுத்துகின்றன. இதற்கிடையில், பிரதான ஊடகங்கள் பெரும்பாலும் எதிர்மறையான stereotypes என்று சொல்லப்படும் அனைவரும் ஒரேமாதிரியாக சித்தரிப்பதைத் தவிர்க்கின்றன, ஆனால் ஆழமான கலாச்சார சூழல்களையோ அல்லது உண்மையான பூர்வீகக்குடி மக்களின் குரல்களையோ சேர்க்கத் தவறி விடுகின்றன.
தங்கள் சொந்த கதைகளைத் தாமே சொல்வதற்கான அதிகாரம் வழங்கப்படுவது இந்த சவால்களை சமாளிப்பதற்கு முக்கியமானது என்று Adam Manovic வலியுறுத்துகிறார்.
பூர்வீகக்குடி மக்களின் ஊடகங்களின் பங்கு
பூர்வீகக் குடிமக்களின் கதைகளை மீட்டெடுப்பதற்கும், ஒரே மாதிரியான கருத்துக்களுக்குச் சவால் விடுவதற்கும் FNMA மற்றும் NITV போன்ற தளங்கள் முக்கியமானவை. ஆஸ்திரேலியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை FNMA ஆதரிக்கிறது மற்றும் பூர்வீகக் குடி பின்னணி கொண்டவர்கள் ஊடகத் துறையில் நுழைவதற்கான பயிற்சியை வழங்குகிறது.
2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட NITV, தற்போது SBS இன் ஒரு பகுதியாக இயங்குகிறது. பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்கள் பற்றிய உண்மையான கதைகளை எடுத்து வரும் தளமாக செயல்படுகிறது.
இந்த முயற்சிகளுக்கு, நிலையான நிதியுதவியை உறுதி செய்வதற்காக, First Nations Broadcasting Act என்ற பூர்வீகக் குடி மக்களுக்கான ஊடகம் குறித்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறுவ வேண்டுமென்று Adam Manovic கோருகிறார்.
“பூர்வீகக் குடி மக்களின் ஊடக ஆவணக் காப்பகங்களைப் பாதுகாப்பது மிக முக்கியம், ஏனெனில் இது எதிர்கால சந்ததியினருக்காக, மொழியையும் கலாச்சாரத்தையும் பராமரிக்கிறது. இந்தப் பதிவுகள் மறைந்து விடாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் - நாம் யார் என்பதன் ஒருங்கிணைந்த பகுதி அவை,” என்று அவர் கூறுகிறார்.

First Nations hub of inner knowledge, traditional culture and lore.
ஊடக பிரதிநிதித்துவம் பூர்வீகக் குடிமக்களை எவ்வாறு பாதிக்கிறது?
பூர்வீகக் குடிமக்கள் தலைமையிலான ஊடகங்களின் பங்கைப் புரிந்து கொள்வது முக்கியம், ஏனெனில், அவர்களது சொந்தக் கதைகளை எவ்வாறு அவர்கள் மீட்டெடுக்க முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தத் தளங்கள் கலாச்சாரப் பெருமையை வளர்க்கின்றன, ஒரே மாதிரியான கருத்துக்களை சவால் செய்கின்றன, மேலும் பூர்வீகக்குடி சமூகங்களின் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் கதைகளைச் சொல்ல வழி வகுக்கின்றன.
ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி மக்களிடையே அடையாளம் மற்றும் சுயமரியாதையை வடிவமைப்பதில் ஊடகப் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. வரலாற்று ரீதியாக ஊடகங்களின் தீங்கு விளைவிக்கும் சித்தரிப்புகள், முறையான இனவெறி மற்றும் எதிர்மறை சிந்தனைகளை வலுப்படுத்தின.
Jaru மற்றும் Bunuba பின்னணி கொண்ட மருத்துவ உளவியலாளர் Tanja Hirvonen, இதுபோன்ற கதைகளால் ஏற்படும் துயரத்தை விளக்குகிறார்.
“தீங்கு விளைவிக்கும், ஒரே மாதிரியான பார்வையை ஊடகங்கள் நிலைநிறுத்தும்போது, அல்லது தவறான உள்ளடக்கத்தைப் பரப்பும்போது, அது இனவெறி மற்றும் பாகுபாட்டை பெரிய அளவில் வலுப்படுத்துகிறது. ஏற்கனவே போராடி வரும் மக்களுக்கு, இந்தக் கதைகளைப் பார்ப்பது மிகவும் வேதனையாக இருக்கும்,” என்கிறார் அவர்.
இருப்பினும், நேர்மறையான பிரதிநிதித்துவம் - கலாச்சார பெருமையை வளர்ப்பது, சமூக தொடர்புகளை வலுப்படுத்துவது மற்றும் சிறந்த வாழ்க்கை விளைவுகளுக்கு பங்களிப்பது – போன்ற மாற்றத்தக்க நன்மைகளை வழங்குகிறது. பூர்வீகக்குடி மக்களின் மரியாதைக்குரிய மற்றும் துல்லியமான சித்தரிப்புகளை ஊடகங்கள் உள்ளடக்கும் போது, அது தப்பெண்ணத்தைக் குறைக்கவும், நல்லிணக்கத்தை ஆதரிக்கவும், சமூகங்கள் முழுவதும் அதிக புரிதலை உருவாக்கவும் உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
ஊடகங்களில் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்துவதை அவர் பார்க்கும் போது ஏற்படும் நல்ல விளைவுகளை Leanne Dolby விரிவாகக் கூறுகிறார்.
“போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதபோது, பூர்வீகக் குடி பின்னணி கொண்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார். பிரதிநிதித்துவம் என்றால் என்னைப் போன்றவர்கள் அதே குறிக்கோள்களையும் வலிமையையும் கொண்ட மற்றவர்கள் இருப்பதை அறிவது,” என்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் அவர்.

Social media has proven to have the power that enables First Nations people to challenge misinformation. Credit: davidf/Getty Images
மாற்றத்திற்கான ஒரு கருவியாக சமூக ஊடகங்கள்
கடந்த காலங்களில் தடையாக இருந்த பாரம்பரிய ஊடகங்களைத் தவிர்த்து, பூர்வீகக்குடி ஆஸ்திரேலியர்கள் தங்கள் கதைகளை உலகளாவிய பார்வையாளர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்கள் ஒரு சக்திவாய்ந்த தளமாக உருவெடுத்துள்ளன. TikTok, Instagram, மற்றும் Facebook போன்ற தளங்கள் படைப்பாளர்களுக்குக் கலாச்சார பரிமாற்றத்தை வளர்க்கும் அதே வேளையில் தவறான தகவல்களைச் சவால் செய்யவும் உதவியுள்ளன.
#IndigenousX போன்ற Hashtagகள் ஆதரவு மற்றும் கல்விக்கான மையங்களாக மாறிவிட்டன. சமூக ஊடகங்கள் கதைசொல்லலை எவ்வாறு பெருக்குகின்றன என்றும்,
“சமூக ஊடக தளங்கள் வந்து போகும், ஆனால் கதைகளைச் சொல்லும் நமது திறன் ஒருபோதும் மாறாது. அது TikTok, திரைப்படம், வானொலி அல்லது அச்சு ஊடகமாக இருந்தாலும், அந்தத் தளங்களை நமது கலாச்சாரத்தைக் காட்ட நமக்கு சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று Adam Manovic விளக்குகிறார்.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்குப், பிரதான ஊடகத் துறை மற்றும் சமூகக் கட்டுப்பாட்டு ஊடகத் துறை இரண்டிலும் முறையான மாற்றங்கள் தேவை. அதாவது, பூர்வீகக்குடி மக்களின் குரல்களுக்கு இடத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், கதைகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன, சொல்லப்படுகின்றன மற்றும் பகிரப்படுகின்றன என்பதில் நீண்டகால மாற்றங்களை ஆதரிப்பதும் தேவையாகும்.
FNMA மற்றும் NITV போன்ற பூர்வீகக்குடியினரால் வழி நடத்தப்படும் தளங்களுக்கு நிதியுதவி பெற, First Nations Broadcasting Act என்ற பூர்வீகக் குடி மக்களுக்கான ஊடகம் குறித்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறுவ வேண்டுமென்று Adam Manovic அழைப்பு விடுக்கிறார்.
பிரதான ஊடக நிறுவனங்களுக்குள் கலாச்சார ரீதியாக பாதுகாப்பான நடைமுறைகளின் அவசியத்தை Tanja Hirvonen எடுத்துக்காட்டுகிறார் - ஒவ்வொரு மட்டத்திலும் பூர்வீகக் குடியினரின் குரல்களை ஈடுபடுத்துவதன் மூலம் நியாயமான சித்தரிப்புகளை அது உறுதி செய்கிறது.
அனைத்து வகையான ஊடகங்களிலும் பூர்வீகக் குடிமக்களின் வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டும் என்று கூறும் Leanne Dolby,
“திரைப்பட விழாக்கள் மூலமாகவோ அல்லது சமூக தளங்கள் மூலமாகவோ – எமது பூர்வீகக் குடிமக்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள எமக்கு அதிக வாய்ப்புகள் தேவை, மேலும் படைப்புத் தொழில்களில் நுழைபவர்களுக்கு அதிக ஆதரவு தேவை,” என்று வலியுறுத்துகிறார்.
ஊடகங்களில், பூர்வீகக் குடிமக்கள் குறித்த கதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஆனால் அது இன்னமும் அதிகரிக்கப்படலாம். NITV மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற தளங்கள் உண்மையான கதைசொல்லல் மூலம் நம்பிக்கையை வழங்கினாலும், பிரதான ஊடகங்கள் ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மையின் செழுமையை உண்மையாகப் பிரதிபலிக்க, அடையாளத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கதைகள் சொல்வதற்கு அப்பால் செல்ல வேண்டும்.
“ஊடகம் மற்றும் கலாச்சாரத்திற்கு பூர்வீகக் குடி ஆஸ்திரேலியர்களின் நேர்மறையான பங்களிப்புகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியவை,” என்று Adam Manovic கூறுவது போல, பூர்வீகக் குடிமக்களின் குரல்களை வலுப்படுத்துவது ஆஸ்திரேலியாவின் கலாச்சார நிலப்பரப்பை வளப்படுத்துகிறது. அதே நேரத்தில், சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வலுப்படுத்துகிறது.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.