பணியிடங்களில் ஊதிய உயர்வு தொடர்பான விதிகள் வேறுபட்டாலும், பணி ஒப்பந்தங்களில் பொதுவாக ஒரு ஊழியரின் வருடாந்திர செயல்திறன் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக ஊதிய உயர்வு தொடர்பான அம்சங்கள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
ஆனால் தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் தங்கள் சம்பளத்தை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தலாம். எனவே, நிதியாண்டு முடிவதற்குள் அதைச் செய்யலாம் என்று பரிந்துரைக்கிறார் La Trobe பல்கலைக்கழகத்தின் Professor of Management (Governance and CSR) Suzanne Young.
ஒரு தொழிலாளியின் வேலை ஒப்பந்தப்படி அவரது ஊதியத்தில் வருடாந்திர அதிகரிப்பு செய்யப்பட வேண்டுமென்பது அவரது சட்டப்பூர்வ உரிமையாகவும் இருக்கலாம்.

பெரும்பாலான ஆஸ்திரேலிய பணியிடங்கள் தேசிய பணியிட பாதுகாப்பு குறித்த சட்டத்தின் தொகுப்பான Fair Work System-இன் கீழ் இயங்குகின்றன. குறிப்பிட்ட தொழில்கள் மற்றும் தொழில்களில் உள்ள ஊழியர்களுக்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் award rates இதில் அடங்கும்.
தொழிற்சங்க பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து Fair Work Commission முடிவு செய்தபடி, award முறைக்கு உட்பட்ட பணியாளர்கள் தங்கள் ஊதிய விகிதத்தில் வருடாந்திர குறைந்தபட்ச அதிகரிப்பைப் பெறுவதற்கு உரிமை உண்டு.
Enterprise agreement எனப்படும் நிறுவன ஒப்பந்தம் கொண்ட பணியிடங்களில் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான ஏற்பாடுகளும் உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் தொழிலாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் மற்றும் முதலாளி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளின் முடிவுகளாகும்.

சம்பள உயர்வைக் கேட்பதற்கு முன், நீங்கள் awardஇன் கீழா அல்லது நிறுவன ஒப்பந்தத்தின் கீழா உள்ளீர்களா என்பதைக் கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார் பேராசிரியர் Suzanne Young. இந்தவிடயம் தவிர சட்டப்பூர்வமாக நீங்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச ஊதிய உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து உங்களைத் தடுக்க எதுவும் இல்லை எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கேட்பது பலருக்கு சங்கடமாக இருக்கிறது எனச் சொல்கிறார் human resources நிபுணரான Karen Gately.
அப்படிக் கேட்கும்போது அதியுயர் பதவியில் உள்ள ஒருவரின் அதிகாரத்தை மீறுவதாகவோ அல்லது அநாகரீகமாக நடந்துகொள்வதாகவோ வெவ்வேறு பணியிட கலாச்சாரப் பின்னணியில் இருந்து வரும் பணியாளர்கள் உணரலாம்.
இருப்பினும், ஊதிய உயர்வுக்கு நீங்கள் தகுதிபெறுகிறீர்கள் என நீங்கள் நம்பினால் இதைப்பற்றிப் பேசுவது அவசியம் என்று Karen Gately கூறுகிறார்.

சம்பள உயர்வு பற்றி பேசுவதற்கு முன்பு உங்கள் தொழில் சார்ந்த ஏனைய வேலைத் தளங்கள் மற்றும் உங்கள் பணியிடச் சூழலில் உள்ள சம்பள நிலைமையைச் சரிபார்த்து அதுகுறித்த அறிவைப் பெற்றுக்கொள்வது முக்கியம் என பேராசிரியர் Suzanne Young கூறுகிறார்.
ஆனால் இளம் ஊழியர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மை குழுக்கள் என்ற அடிப்படையில் பணியிடங்களுக்குள் சம்பளத்தை சுற்றி ஒரு ரகசிய கலாச்சாரம் உள்ளதாக அவர் எச்சரிக்கிறார்.
தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் தொழிலாளர்களுக்குரிய சம்பளத்தைப் பற்றிய தகவலைச் சேகரிப்பதில் உங்களுக்கு உதவ முடியும் என்று கூறுகிறார் Australian Council of Trade Unions தலைவராக உள்ள Michele O’Neil.
ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது இந்தத் தரவு பயனுள்ளதாக இருக்கும் என அவர் வலியுறுத்துகிறார்.
அதேநேரம் ஒரு தொழிற்சங்க உறுப்பினராக இருந்துகொண்டு ஊதிய உயர்வு குறித்த பேச்சு நடத்துவது எளிது எனவும் Michele O’Neil சுட்டிக்காட்டுகிறார்.

தனித்தனியாக ஊதிய உயர்வைக் கோருவதற்கு முன், தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கும் தொழிலாளர்கள் இதற்கான தயார்ப்படுத்தலில் உதவ தங்கள் தொழிற்சங்கத்தின் ஆதரவையும் பெறலாம் என்றும் Michele O’Neil பரிந்துரைக்கிறார். தொழிற்சங்கமானது தொழிலாளர்களுக்கு இந்த செயல்முறையை திறம்பட முன்னெடுப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதாரங்களை வழங்க முடியும்
இருப்பினும், ஊதிய உயர்வைக் கேட்க நீங்கள் கட்டாயம் தொழிற்சங்க உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
உங்கள் சார்பாக சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைக்கும்போது, உங்கள் வேலையில் நீங்கள் என்ன சாதித்துள்ளீர்கள் என்பதற்கான வாதத்தை முன்வைக்கலாம் என பேராசிரியர் Suzanne Young பரிந்துரைக்கிறார்.
நீங்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் பேசும் நபரைப் பொறுத்து நீங்கள் ஊதிய உயர்வு கேட்கும் விதம் மாறுபடும் என human resources நிபுணரான Karen Gately சொல்கிறார்.
ஆனால் நிலைமையைப் பற்றி அளவுக்கு அதிகமாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறுகிறார்.
உங்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைக்கும்போது மதிப்பு மற்றும் professional attitude தொழில்முறை அணுகுமுறையை பேணுவது முக்கியம் என்கிறார் பேராசிரியர் Suzanne Young.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




