Key Points
- பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு தொல்லை கொடுத்தால், நீதிமன்றச் செயல்முறைக்குப் பதிலாக, அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்வதும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதும் விரும்பத்தக்க வழிகளாகும்.
- ஆஸ்திரேலியாவில், அரச நிறுவனங்கள் மற்றும் பிணக்குத் தீர்க்கும் சேவை வழங்குநர்கள் உங்களுக்கான தகவல் மற்றும் ஆதரவை வழங்க முடியும்.
- உங்கள் புகார் தொடர்பான சட்டங்கள் மற்றும் நீங்கள் எங்கிருந்து உதவி பெறலாம் என்பதைப் பற்றி அறிய உங்கள் உள்ளூர் கவுன்சிலை தொடர்புகொள்ளலாம்
நீங்கள் பிராந்தியமொன்றில் வாழ்ந்தாலோ அல்லது நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்தாலோ, அண்டை வீட்டாருடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பொதுவாக முறைப்பாடுகளின் தன்மை மற்றும் நமது வாழ்க்கை நிலைமைகள் காரணமாக அக்கம் பக்கத்திலுள்ளவர்களுடன் தகராறுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன என்கிறார் சிட்னி பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் Barbara McDonald.
சில நேரங்களில், அண்டை வீட்டாரின் செயல் அல்லது புறக்கணிப்பு உங்களுக்கு ஒரு nuisance- தொல்லையாக இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலிய பொதுச் சட்டத்தின்படி, private nuisance- அதாவது இரு நபர்களுக்கு இடையேயான தகராறு என வரையறுப்பதற்கு ஒருவரின் நடத்தை எரிச்சலூட்டுவதாக இருந்தால் மட்டும் போதாது.

வழக்கா அல்லது பிணக்குத் தீர்ப்பவர்களை நாடுவதா?
ஒரு சிக்கலை முறையாகத் தீர்க்குமாறு நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டால், உங்கள் புகார் அற்பமானதாகவோ அல்லது நியாயமற்றதாகவோ இருந்தால், நீதிமன்றம் பல காரணிகளைக் கருத்தில் கொள்ளும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் நள்ளிரவில் சத்தமாக இசையை வைப்பது அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு வெளியே கட்டிட வேலைகளைச் செய்வது private nuisance-ஆக இருக்கலாம்.
ஆனால் அது எப்போதும் உங்கள் சூழலைப் பொறுத்ததுBarbara McDonald, சிட்னி பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர்

அயலவர்களுடனான உங்கள் தகராறு நீதிமன்றத்தால் தீர்க்கப்படுவது ஒரு கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். வழக்குக்கு அதிகம் செலவாகும் என்பதுடன் இதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதுமட்டுமல்லாமல் தனிநபர்களிடையே அதிக மோதலுக்கும் இது வழிவகுக்கும்.
சட்ட நடவடிக்கையில் ஈடுபடும் முன், அண்டை வீட்டாரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அதனால் பயனில்லை என்றால், சமரசம் செய்வதற்கு மற்றொருவரின் உதவியை நாடலாம் என பேராசிரியர் McDonald வலியுறுத்துகிறார்.

சமரச முயற்சிகளுக்கு சமூக நீதி மையங்கள் போன்ற அரச நிறுவனங்களிடமிருந்து ஆதரவு கிடைக்கிறது.
அக்கம்பக்கத்தாருடனான தகராறுகளைப் பொறுத்தவரை, மற்ற தகராறு தீர்க்கும் முறைகளுடன் ஒப்பிடும்போது மூன்றாவது தரப்பின் தலையீடு அதிக பலன்களைக் கொடுக்கலாம் என Conflict Resolution Serviceஇன் தலைமை நிர்வாக அதிகாரி Melissa Haley கூறுகிறார்.
நல்லெண்ணமும், சர்ச்சைக்கு தீர்வு காணவேண்டும் என்ற எண்ணமும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இருக்கவேண்டும் என Melissa Haley கூறுகிறார்.

பிணக்குத் தீர்ப்பவர் மூலம் என்ன மாதிரியான தீர்வினை அடைய முடியும்?
பிணக்குத் தீர்க்கும் செயல்முறையானது சர்ச்சையைத் தீர்ப்பதை உள்ளடக்கியது மற்றும் சர்ச்சை ஏன் முதலில் தோன்றியது என்பதைப் புரிந்துகொள்ள இரு தரப்பினருக்கும் உதவுகிறது.
முக்கியமாக குறித்த தகராறு தொடர்பில் அடுத்தகட்டத்திற்குச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான பாதையை இது உங்களுக்குத் தரக்கூடும்.
பொதுவாக யுனிட்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் அயலவர்களுடன் அடிக்கடி தகராறுகள் எழலாம்.

சிட்னியில் வசித்து வந்தபோது, தனது அயலவரின் பால்கனியில் ஏற்பட்ட கசிவு காரணமாக தனது குடியிருப்பு பாதிக்கப்பட்டது எனவும் முதலில் சொத்து மேலாண்மை நிறுவனத்தை தொடர்பு கொண்டதாகவும், இருப்பினும் NSW Fair Trading நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்டதாகவும் சமிந்த கிரிவத்துடுவ என்பவர் கூறுகிறார்.
இறுதியில் சேதத்திற்கான இழப்பீட்டைப் பெற்றாலும் இதற்குரிய தீர்வைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுத்ததாக சமிந்த கிரிவத்துடுவ சொல்கிறார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்படும் தகராறுகளுக்கான தீர்வைக் காணும்போது, இதேபோன்ற எதிர்கால சம்பவங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று Conflict Resolution Serviceஇன் தலைமை நிர்வாக அதிகாரி Melissa Haley வலியுறுத்துகிறார்.

அயலவர்களுடனான எந்தவொரு தகராறு தொடர்பில், உங்கள் உள்ளூர் கவுன்சில்களே முதல் தொடர்பாக இருக்கவேண்டுமெனவும் அவர்களிடமிருந்து தகவல் மற்றும் பரிந்துரைகளைப் பெறலாம் எனவும் அவர் நினைவூட்டுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக அக்கம்பக்கத்தாருடன் தகராறுகளைத் தடுக்க எவரும் செய்யக்கூடிய ஒரு எளிய செயன்முறை, நீங்கள் உங்கள் புதிய வீட்டிற்குச் சென்றவுடன், உங்கள் அண்டை வீட்டாரிடம் சென்று உங்களை அறிமுகப்படுத்தி ஒரு நட்புறவைப் பேணுவதாகும்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சண்டையா?நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், உங்கள் மாநிலம்/பிராந்தியத்தில் உள்ள தெரிவுகளைப் பற்றி அறிய, உங்கள் உள்ளூர் கவுன்சிலைத் தொடர்புகொண்டு கீழே உள்ள இணைப்புகளைப் பார்வையிடவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




