எளிமையாகச் சொன்னால், விவாகரத்து என்பது திருமணத்தை சட்டரீதியாக முறித்துக்கொள்வது. ஆனால் விவாகரத்து ஒருவரில் உணர்ச்சிரீதியான மற்றும் நிதிரீதியான தாக்கங்களை ஏற்படுத்தினால், மூன்றாவது தரப்பொன்றின் உதவி இல்லாமல் ஒரு இணக்கமான தீர்வை அடைவது கடினமாக இருக்கலாம்.
ஆஸ்திரேலியாவில், விவாகரத்துக்கு விண்ணப்பிப்பதெனில் இந்த விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக, தங்கள் திருமண உறவு இனிமேலும் சரிசெய்ய முடியாதது என்பதைத் துணைவர்கள் நிரூபிக்க வேண்டும். அவர்கள் 12 மாதங்களுக்கும் மேலாக பிரிந்திருப்பதை நிரூபிக்க வேண்டும். மற்றும் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்குரிய ஏற்பாடுகள் மற்றும் நிதி ஏற்பாடுகளுக்கு உடன்பட வேண்டும்.
விவாகரத்து செய்யும் தம்பதிகள் இதுதொடர்பில் வழக்குத் தொடரும் முன், விதிவிலக்குகள் எதுவும் இல்லாவிட்டால், முதலில் பிள்ளைகளுக்கான ஏற்பாடு மற்றும் நிதி விவகாரங்களை முறையாகத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என ஆலோசனை சொல்கிறார் Lang and Rogers ஐச் சேர்ந்த சட்டத்தரணி Eleanor Lau.

விவாகரத்து தொடர்பில் நீதிமன்றத்திற்குச் செல்வதென்றால் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும் என்பதுடன் இதற்கு பல மாதங்கள் ஆகலாம்.
இந்தப் பின்னணியில் விவாகரத்து செய்யும் வாழ்க்கைத் துணைவர்களில் 90 சதவீதம் பேர் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் அதனைத் தாங்களே தீர்த்துக் கொள்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று Family Dispute Resolution Practitioner Valerie Norton கூறுகிறார்.
தம்பதியருக்கிடையில் மத்தியஸ்தராக நுழைவதற்கு முதல் இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து அவர்களுக்கு மத்தியஸ்தம் பொருத்தமானதா என்று தான் மதிப்பிடுவது வழக்கம் என்கிறார் Valerie Norton.

மத்தியஸ்த அமர்வுகளின் ஊடாக தம்பதியர்களும் அவர்களது வழக்கறிஞர்களுக்கும் தீர்வினை எட்டுவதற்கு உதவி வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் ‘no fault divorce’ என்ற அம்சம் உள்ளது. இதன் பொருள் ஒரு துணைவர் மற்றவரின் அனுமதியின்றி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அவர் ஏன் திருமணத்தை முடிக்க விரும்புகிறார் என்பதற்கான காரணங்களைக் கூற வேண்டிய அவசியமில்லை.
இதேவேளை விவாகரத்தின்போது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சொத்துக்கள் பாதியாகப் பிரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்ட அளவுகோல்களைப் பயன்படுத்தியே சொத்துப்பிரிப்பு நடைபெற வேண்டும் எனவும் வழக்கறிஞர் Eleanor Lau கூறுகிறார்.
குறிப்பாக தம்பதியர் இருவரும் தமது திருமண உறவின்போது எத்தகைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பதும் அத்தம்பதியரின் வயது, சம்பாதிக்கும் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்து அவர்களது எதிர்காலத் தேவைகள் என்ன என்பதும் சொத்துப்பிரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குடும்ப தகராறு தீர்க்கும் மத்தியஸ்தத்தின் போது தம்பதியர் நிதி அல்லது பிள்ளை பராமரிப்பு குறித்த உடன்பாட்டை எட்டலாம். இதனடிப்படையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக ஒப்புதல் உத்தரவுகளாக தாக்கல் செய்யப்படலாம்.
விவாகரத்தை எதிர்கொள்ளும் நபர்கள் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்ட ஆலோசனையை விரைவில் பெறுவது மிகவும் முக்கியம் என்கிறார் வழக்கறிஞர் Eleanor Lau.
உறவின் தொடக்கத்திற்கு முன் அல்லது உறவில் இணைந்தபின் ஒரு binding financial agreementஇல் கையொப்பமிடுவது எதிர்காலத்தில் சாத்தியமான சிக்கல்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். binding financial agreements இறுதி தீர்வுகளாக பயன்படுத்தப்படலாம்.

இதேவேளை போதிய வசதி இல்லாதவர்கள் மற்றும் ஒரு தனியார் வழக்கறிஞர் அல்லது மத்தியஸ்தரை அணுக முடியாதவர்கள் விவாகரத்து விடயம் தொடர்பில் Legal Aid அல்லது சமூக சட்ட மையங்களில் இருந்து ஆலோசனையைப் பெறலாம்.
உதாரணமாக Relationships Australiaவைத் தொடர்பு கொள்ளலாம், இது அரச நிதியுதவியுடன் இயங்கும் சேவையாகும், விவாகரத்து வரை வரையறுக்கப்பட்ட சட்ட ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் இலவச அல்லது குறைந்த கட்டணத்துடனான மத்தியஸ்தர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் இணைப்பதில் Relationships Australia மக்களுக்கு உதவ முடியும் என விளக்குகிறார் இதன் தலைமை நிர்வாக அதிகாரி Nick Tebbey.

Relationships Australia நீதிமன்றத்தில் தம்பதியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றாலும், அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உணர்வுசார்ந்த ஆதரவையும் ஆலோசனை சேவைகளையும் வழங்க முடியும்.
தேவைப்படுபவர்கள் Relationships Australia அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சந்திப்பை முன்பதிவு செய்யலாம். மாற்றாக, அவர்கள் Family Relationships Advice lineஐயும் அழைக்கலாம்.
இதேவேளை விவாகரத்து செய்யும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் உங்கள் குழந்தைகளின் எதிர்கால தேவைகள் மற்றும் நல்வாழ்வு என சட்ட மற்றும் மனநல நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
விவாகரத்திலிருந்து மீண்டுவருவதற்கான செயல்முறையின் ஒரு பகுதி, உறவுமுறை மாறுவதை ஏற்றுக்கொள்வதில் இருந்து தொடங்குகிறது என சொல்கிறார் ரிலேஷன்ஷிப்ஸ் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி Nick Tebbey.
Resources
- Learn more about alternatives to court
- The Australian Family Dispute Resolution Practitioner finder
- Family Relationships Online
- Guide to Family Dispute Resolution
- How to apply for a divorce flowchart
- Relationships Australia
- For emotional support, contact Lifeline or Beyond Blue.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




