காளான்களைத் தேடிப் பிடுங்கி உண்ணும் பழக்கம் உலகின் பல பகுதிகளில் பிரபலமாக உள்ளது, ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வந்த புலம்பெயர்ந்தோர் காட்டுக் காளான்களை உண்பதில் உள்ள அபாயங்கள் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.
பாதுகாப்பான காளான் எது தீங்கு விளைவிக்கும் காளான் எது என்பதை வேறுபடுத்திப் பார்க்கும் திறன் இல்லாமல் அவற்றை உண்பது மிகவும் ஆபத்தானது.
ஆஸ்திரேலியாவில் காளான்களைப் பிடுங்கி உண்ணுவது பாதுகாப்பானதா, எங்கு அது அனுமதிக்கப்படுகிறது, அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

Wild Food workshopஐச் சேர்ந்த Diego Bonetto நியூ சவுத் வேல்ஸில் உள்ள pine காடுகளில் உள்ள காளான்கள் உட்பட காட்டு உணவுகளை எவ்வாறு கையாள்வது என்பதை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
தீங்கு விளைவிக்கும் வகைகளிலிருந்து பாதுகாப்பான வகைகளை வேறுபடுத்துவது பற்றிய அறிவு இல்லாமல் காட்டுக் காளான்களை கையாள்வது மிகவும் ஆபத்தானது என்கிறார் அவர்.
ஆஸ்திரேலியாவில் உண்ணக்கூடிய வகை காளான்களை அடையாளம் காண்பதற்கு எச்சரிக்கையும் நிபுணத்துவமும் தேவை என்கிறார் சிட்னி தாவரவியல் பூங்காவின், ஆஸ்திரேலிய தாவரவியல் அறிவியல் கழகத்தில் அறிவியல், கல்வி மற்றும் பாதுகாப்புக்கான முதன்மை விஞ்ஞானி மற்றும் இயக்குநராக உள்ள பேராசிரியர் Brett Summerell.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில வருடங்களாக நச்சுக் காளான்களை சாப்பிட்டு சிலர் உயிரிழந்துள்ளதை பேராசிரியர் Brett Summerell சுட்டிக்காட்டுகிறார்.
ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான தனித்துவமான காளான் இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஆபத்தான பல்வேறு இனங்கள் உள்ளன. அவற்றில் சில வெளிநாடுகளில் இருந்து வந்தவை.
மிகவும் ஆபத்தான காளான் வகைகளில் ஒன்றான Death Cap காளான் டஸ்மேனியா, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACTயில் காணப்படுகிறது.
இதேவேளை காளான்களைத் தேடி காடுகளுக்குச் செல்பவர்கள் அது தொடர்பில் சிறந்த அனுபவமுள்ள நிபுணருடன் செல்வது அவசியமென Diego Bonetto வலியுறுத்துகிறார்.

காளான்களைத் தேடி நீங்கள் புதிய பகுதிகளுக்குச் செல்லும்போதும், ஒரே மாதிரி தோற்றமளிக்கும் காளான் இனங்களைப் பார்க்கும்போதும் நீங்கள் குழப்பமடையலாம்.
தீங்கு விளைவிக்கும் காளான்களை இனங்காண்பதற்கான திறமையைப் பெற்றுவிட்டீர்கள் என்றால் காளான் வேட்டையில் நீங்கள் ஈடுபடலாம் எனக் கூறும் பேராசிரியர் Brett Summerell, அழுகிய நிலையிலுள்ள காளான்களை பிடுங்காமல் இருப்பது முக்கியம் என்று கூறுகிறார்.
குளிர்ந்த மற்றும் ஈரமான வானிலையுள்ள காடுகள் காளான்கள் வளர்வதற்கு ஏற்றவை.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பிராந்தியமும் காளான்களைத் தேடிச்செல்வது தொடர்பில் வெவ்வேறு விதிமுறைகளைக் கொண்டுள்ளன, எனவே நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள விதிகளைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்.
ஆனால் வீடுகளில் காளான் வளர்த்து அறுவடை செய்வதற்கு தடை எதுவும் இல்லை என்கிறார் Diego Bonetto.
காளான்களை உட்கொள்வது பற்றிய உடல்நலக் கவலைகள் எழுந்தால் 131 126 என்ற எண்ணில் Poisons Information Centre ஐ அழைக்கவும்.
உயிருக்கு ஆபத்தான அவசர நிலமையில் 000 ஐ அழைக்கவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.








