காலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் உலகம் போராடுகிறது, உலகளாவிய வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் நீண்ட கால மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
நமது நவீன உலகத்தை இயக்குவதற்குத் தேவையான நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு, காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் உருவாகும் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைப்பது, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை மெதுவாக்குவதற்குத் தேவையான ஒரு முக்கிய செயலாகும். கூடவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதும் இன்றியமையாதது.
ஆஸ்திரேலியா நீண்டகால உமிழ்வு குறைப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது. இத்திட்டம் தொடர்பில் அறிந்துகொள்வதும், ஆஸ்திரேலியா அதை எப்படி அடைய முயற்சிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றுவதற்கு தனிநபர்கள் முதல் வீடுகள் மற்றும் வணிகங்கள் வரை அனைவருக்கும் உதவும்.

Fossil fuels என்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படுகின்றன. இது புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக உள்ளது.
காலநிலை மாற்றம் என்பது வெப்பமயமாதலை விட அதிகமானதாகும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் வறட்சி, தீ, வெள்ளம் மற்றும் புயல்களின் தீவிரம் ஆகியவை அடங்கும். அதுமட்டுமல்ல கடல் வெப்பநிலை உயர்தல், உயரும் கடல் மட்டங்கள், துருவ பனிக்கட்டிகள் உருகுதல் மற்றும் பல்லுயிர் பாதிப்புகள்கூட காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது புவியில் நமது இருப்பையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பது என்பது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைப்பது மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டிலிருந்து விலகி காற்று, சூரிய ஒளி மற்றும் அலை ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதை அர்த்தப்படுத்துகிறது.
புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தவென long-term greenhouse gas emissions reduction திட்டத்தை ஆஸ்திரேலியா செயல்படுத்தியுள்ளது.
பெரும்பாலான நாடுகளைப் போலவே ஆஸ்திரேலியாவும் 2050ம் ஆண்டுக்குள் net zero emissions- நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய உறுதிபூண்டுள்ளதாக விளக்குகிறார் காலநிலை கவுன்சிலில் ஆராய்ச்சி இயக்குநராக உள்ள Dr Simon Bradshaw.

2050 என்பது நீண்ட காலமாகத் தோன்றினாலும், உமிழ்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைக்கான காலக்கெடு அவசரமானது மற்றும் அவசியமானது என்று Dr Simon Bradshaw கூறுகிறார்.
ஆஸ்திரேலிய அரசு 2022 இல் காலநிலை மாற்ற சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியது, இது ஆஸ்திரேலியாவின் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு குறைப்பு இலக்குகளை கோடிட்டுக் காட்டுகிறது.
நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்பது வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவைக் அதிகரிக்காமல் இருப்பதைக் குறிக்கிறது.
கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வை முடிந்தவரை குறைத்து, எஞ்சியிருக்கும் உமிழ்வின் அளவுக்குச் சமஅளவிலான கிரீன்ஹவுஸ் வாயுக்களை வளிமண்டலத்திலிருந்து நீக்கி சமநிலைப்படுத்துவதாகும்.
நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் முதலீடு தேவை என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து காலநிலைக் கொள்கையில் பணிபுரிந்தவரும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவுமுள்ள Aaron Tang கூறுகிறார்.
இதேவேளை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதில் ஆஸ்திரேலியா சிறந்து விளங்குகிறது என்பதை Dr Simon Bradshaw ஒப்புக்கொள்கிறார்.

இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க நம் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக முடிந்தவரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது அல்லது மின்சார காருக்கு மாறுவது உள்ளிட்ட விடயங்களைச் செய்யலாம்.
இது தவிர, நாம் அனைவரும் வீட்டில் செய்யக்கூடிய பிற செயல்களும் உள்ளன. உதாரணமாக வீடுகளில் எரிவாயுவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மின்சாதனங்களுக்கு மாறுவது இவற்றில் ஒன்றாகும்.
நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளும் தெரிவுகள் கூட்டாக உமிழ்வைக் குறைப்பதில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று Aaron Tang கூறுகிறார்.
நிகர பூஜ்ஜிய உமிழ்வின் மற்ற அம்சம், வளிமண்டலத்தில் இருந்து கிரீன்ஹவுஸ் வாயுவை எவ்வாறு வெளியேற்றுவது என்பதைப் பற்றியது எனவும் இது இன்னும் பரவலாக விவாதிக்கப்படாத தெளிவற்ற ஒரு அம்சம் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நம் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வாழக்கூடிய காலநிலையை தொடர்ந்து பராமரிப்பதற்கும், உலகின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டியது அவசியம் என Dr Simon Bradshaw வலியுறுத்துகிறார்.
இதேவேளை உமிழ்வைக் குறைப்பதற்கான ஆஸ்திரேலியாவின் பயணம் சவாலானதாக இருக்கும் என்றபோதிலும் தமக்கு நம்பிக்கை உள்ளதாக சொல்கிறார் Aaron Tang.
எனவே தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது வணிகம் என, நாம் அனைவரும் உமிழ்வைக் குறைப்பதில் பங்கு வகிக்க முடியும் எனவும் இதன்மூலம் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறோம் எனவும் வலியுறுத்துகிறார் காலநிலை கவுன்சிலில் ஆராய்ச்சி இயக்குநராக உள்ள Dr Simon Bradshaw.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.








