இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்திருக்கிறது. ஆளுந்தரப்பான ‘பொதுஜன பெரமுன’ அமோக வெற்றியீட்டியுள்ளது.
இத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட MA சுமந்திரன் அவர்களின் வெற்றி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் சக வேட்பாளர் திருமதி.சசிகலாவின் வெற்றியை சுமந்திரன் குறுக்குவழியில் தட்டிப்பறித்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த அவர்,
'தேர்தல் வாக்குகளை எண்ணும்முறை புரியாமல் ஆட்கள் வெளிப்படுத்துகிற குற்றச்சாட்டு. இறுதிமுடிவு வெளியாகும் வரைக்கும் யார் வென்றார் என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த தேர்தலைப்போலவே இம்முறையும் வாக்குகள் எண்ணி முடிவதற்கு முன்பாகவே வெளியான அனுமானங்களின் அடிப்படையில்தான் இப்படியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மூன்றாமிடத்திற்கும் நான்காமிடத்திற்கும் இடையிலான போட்டி திரு.சித்தார்த்தனுக்கும் திருமதி.சசிகலாவுக்கும் இடையிலே இருந்ததே தவிர எனக்கும் திருமதி.சசிகலாவுக்கும் இடையில் அல்ல. நான் தொடர்ந்தும் இரண்டாமிடத்தில்தான் இருந்தேன்' என்றார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகள் ஒன்றுசேர்ந்து உருவானதாகும். இதில் MA சுமந்திரன் சார்ந்திருப்பது தமிழரசுக் கட்சி.
கடந்த பல ஆண்டுகளாக தமிழர் தாயகமான வடக்கில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இம்முறை பாரிய பின்னடைவைச் சந்தித்து வெறுமனே மூன்று ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளது. இதுபற்றிக் கூறிய சுமந்திரன் அவர்கள்
‘சிறிதரனும் நானும் வென்றிருக்காவிட்டால், கட்சி ஒரு ஆசனத்தைப் பெற்று இன்னும் அவமானமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். கட்சிக்கு எதிராக நடந்துகொள்பவன் நான் இல்லை. ஆனால் சக வேட்பாளர்கள் எனக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்தனர். இதுபற்றி கட்சி தலைவரிடம் முறைப்பாடு செய்தபோதும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு ஆதரவாகப் பேசியவர் சிறிதரன் மட்டுமே. நானும் சிறிதரனும் தலைவரிடம் போய், நீங்களும் சேர்ந்து கட்சிக்குள்ளேயே சதி செய்தீர்கள். அதனால்தான் சதிகாரர்கள் எல்லோரும் தோற்றிருக்கிறீர்கள், நாங்கள் இருவரும் வென்றிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்துள்ளோம்’ என்றார்.
உங்களது கட்சிக்குள்ளேயே உங்களுக்கு எதிர்ப்பு உள்ளது, நீங்கள் சொல்வதை கட்சி கேட்பதில்லை என்றால் அந்தக் கட்சியில் நீங்கள் தொடர்ந்து இருக்கவேண்டுமா என்றதற்கு- மக்களின் ஆணைதான் முக்கியம். மக்களின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்கிறது. மக்கள் ஆணைக்கிணங்க கட்சிதான் மாற்றங்களைச் செய்யவேண்டும்- என அவர் கூறினார்.
இதேவேளை சிறிதரன் அவர்கள் கிளிநொச்சி தொகுதியில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று வென்றிருக்கிறார்.
தமிழரசுக் கட்சி மறுசீரமைக்கப்படும்போது தலைவர் பதவியைத் தனக்குத் தந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அப்படியொரு நிலை வந்தால் உங்களது ஆதரவு சிறிதரனுக்கு கிடைக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன்,
அப்படியொரு சூழ்நிலை வந்தால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என்றார்.