இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு மில்லியன் அளவானோர் Dementia எனப்படும் மறதி நோயுடன் வாழ்வார்கள் என Alzheimer's Australia எதிர்வுகூறியுள்ளது.
Dementia என்பது முதுமையின் ஒரு கட்டாய அறிகுறி அல்ல. ஆனால் இதன் ஆரம்ப அறிகுறிகளை உடனடியாக இனங்காண்பதன்மூலம் முன்கூட்டியே உதவிகளைப் பெறலாம்.
அடிக்கடி ஞாபகமறதி, குழப்பம், ஆளுமையில் ஏற்படும் மாற்றம், எதிலும் ஆர்வமின்மை என்பன Dementia வின் ஆரம்ப அறிகுறிகளாகும். குறிப்பாக short term memory loss எனப்படும் குறுகிய கால நினைவிழப்பு Dementiaவின் மிக முக்கிய அறிகுறி என Alzheimer's Australia வைச் சேர்ந்த Vincent Poisson சொல்கிறார். இந்த குறுகிய கால நினைவிழப்பு ஒருவரின் அன்றாட வாழ்க்கையையுமே பாதிக்கின்றது.
எனவே இப்படியான அறிகுறி தென்படுபவர்கள் மருத்துவரை அணுகி இது தொடர்பில் பரிசோதனை செய்து பார்ப்பது மிகவும் சிறந்தது என Alzheimer's Australia ஊக்குவித்துள்ளது.

Source: Pixabay
இந்தநிலையில் பல்கலாச்சாரப் பின்னணி கொண்ட பெற்றோர் Dementiaவை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக இவர்களுக்கு Dementia ஏற்பட்டால் அது மற்றவர்களை விடவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுகிறது.
மேலும் Dementia பற்றி வெளிப்படையாகப் பேசினால் தாம் பைத்தியம் என்ற முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சத்தில் இவர்கள் மௌனமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பல்கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள் மத்தியில் Dementia வால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பராமரிப்பதிலும் போதிய தெளிவு இல்லை எனவும் பெரும்பாலும் மகளோ அல்லது மருமகளோ இவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய அழுத்தத்திற்குள்ளாகுவதாகவும் Alzheimer's Australia வைச் சேர்ந்த Vincent Poisson தெரிவித்தார். அதேபோல் Dementia உள்ளவர்களுக்கு இருக்கும் மொழிப்பிரச்சனையும் ஒரு பெரிய சிக்கலாகும்.
Alzheimer's Australia வின் 2008 அறிக்கையின்படி Dementia ஏற்பட்ட பலர் தமது தாய்மொழியிலேயே இதைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இது உண்மைதான் என்கிறார் Dementia பராமரிப்பாளராக பணிபுரியும் போலிஷ் மொழி பேசும் Kasia Bergner.

Source: Getty
Dementia ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே கண்டறிதல், எப்படியான உதவிகள் இதற்கு இருக்கின்றன, எதிர்காலத்தில் அவர்களை எப்படிப் பராமரிக்கப்போகிறோம் போன்ற பல்வேறு விடயங்களை திட்டமிடுவது மிகவும் முக்கியமானது என Dementia பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியர் Meera Agar தெரிவித்தார்.
Dementia ஏற்பட்டிருப்பவரின் எதிர்கால திட்டமிடுதல்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதும் மிக அவசியம் என்கிறார் பேராசிரியர் Meera Agar .
www.fightdementia.org.au என்ற இணையத்தளத்தில் Dementia பற்றிய பல்வேறு தகவல்கள் 43 மொழிகளில் கிடைக்கின்றன.
இது தவிர Dementia பற்றிய ஆலோசனைகளுக்கு 1800 100 500என்ற இலக்கத்தை அழைக்கலாம். மொழி பெயர்ப்பு வசதி தேவைப்படுபவர்கள் 131 450 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்.