ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் கணக்கெடுப்பு நிகழ்வான – census மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 9ம் திகதி நடைபெறவுள்ளமை நாமறிந்த ஒன்று.
இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியா முழுவதும் வாழும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 24 மில்லியன் பேர் கணக்கிடப்படுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக ABS ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய திட்டமிடல்களுக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பே அடிப்படையாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
1911ம் ஆண்டு முதல் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இவ்வருடம் தலைமையேற்று நடத்துபவர் திரு. Duncan Young ஆவார்.
ஆகஸ்ட் 9ம் திகதியன்று நீங்கள் ஆஸ்திரேலியாவில் எந்த விசாவில் இருந்தாலும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டுமென்பது கட்டாயமாகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக வழங்கப்படும் படிவத்தில் உள்ள மதம் சம்பந்தப்பட்ட கேள்வி தவிர ஏனைய அனைத்துக் கேள்விகளுக்கும் நீங்கள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும்.
2006ம் ஆண்டு முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையிலும் மேற்கொள்ளப்பட ஆரம்பித்ததையடுத்து இவ்வருடம் சுமார் 16 மில்லியன் பேர் இணையவழியாக இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கை நாட்டிலுள்ள 65 வீதமான வீடுகளை உள்ளடக்குகின்றது.
பெரும்பாலான வீடுகளுக்கு இணையவழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவதற்குத் தேவையான பிரத்தியேக குறியீடு ஒன்று ஆகஸ்ட் முதல் வாரத்தில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் காகித வழி கணக்கெடுப்பையே நீங்கள் விரும்பினால் இதற்கான படிவத்தைப் பெறுவதற்கு 1300 214 531 என்ற இலக்கத்தை அழைக்கலாம்.
மாற்றுத் திறனாளிகள், ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் வீடற்றவர்கள் தங்களுக்கான மேலதிக உதவிகள் தேவையென்றால் ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்திடம் கேட்கலாம்.
அதேபோல் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவதற்குத் தேவையான மொழிபெயர்ப்பு உதவிகளும் கிடைக்கின்றன.
ஆகஸ்ட் 9ம் திகதியன்று நீங்கள் நாட்டில் இருந்தும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்றால் நாளொன்றுக்கு 180 டொலர்கள் என்ற அடிப்படையில் மிகப்பெரும் தொகை தண்டப்பணமாக செலுத்த நேரிடும்.
ஆகஸ்ட் 9ம் திகதிக்குப் பின்னர் இக்கணக்கெடுப்பில் பங்கேற்காதவர்களின் வீடுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் விஜயம் செய்வார்கள். ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அடையாள அட்டையை அணிந்திருக்கும் இவர்கள் தம்முடன் ஒரு மஞ்சள் நிற பையையும் வைத்திருப்பார்கள். இவற்றை வைத்து அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தான் என்பதை நன்கு உறுதிப்படுத்திய பின்னர் உங்கள் வீட்டு கதவுகளைத் திறக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
மொழிபெயர்ப்பு வசதியைப் பெற 13 14 50 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
காகித வழி கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்பினால் இதற்கான படிவத்தைப் பெற 1300 214 531 என்ற இலக்கத்தை அழையுங்கள்.