ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் விசா பெறுவது எப்படி?

AAP

AAP Source: AAP

ஆஸ்திரேலியாவிற்கு மாணவர் விசாவில் வந்து கல்வி கற்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இதற்கென பல வகைப்பட்ட மாணவர் விசாக்கள் இருக்கின்றன. பாடசாலைக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரைக்கும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். நீங்கள் எந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கிறீர்களோ அதற்கேற்பவே உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுமென சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவர் Maria Jockel (Reg. No: 9802742) தெரிவிக்கிறார். குறிப்பாக நீங்கள் எப்படியான கல்வியை தெரிவு செய்திருக்கிறீர்கள் மற்றும் எந்த நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருக்கிறீர்கள் என்பவற்றிற்கே முக்கிய கவனம் செலுத்தப்படும் என்கிறார் Maria Jockel. மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் முழுநேரப் படிப்பிற்குத் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் அவர் கல்வி கற்க தேர்ந்தெடுக்கும் நிறுவனம் ஆஸ்திரேலிய அரச அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறித்த கல்வி நிறுவனம் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை Commonwealth Register of Institutions and Courses for Overseas Students என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஒருவர் தனியார் மருத்துவக் காப்பீடு வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதுபோல் வேறு என்னென்ன நிபந்தனைகள் இருக்கின்றன என்பதையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எந்த நிறுவனத்தில் கல்வி கற்க விரும்புகிறீர்கள் என்பதையும் என்ன கல்வி என்பதையும் தெரிவுசெய்து அந்த நிறுவனத்தில் விண்ணப்பித்த பின்னர் அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா இல்லையா என்பதை அறிவிப்பார்கள். அவர்கள் உங்களை மாணவராக ஏற்றுக்கொள்ளத்தயாராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் மாணவர் விசா விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் குறித்த கல்வி நிறுவனம் உங்களை ஏற்றுக்கொள்ளத்தயார் என்பதற்காக உங்களுக்கான மாணவர் விசாவும் நிச்சயம் கிடைக்கும் எனச் சொல்லமுடியாது என்கிறார் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவர் Maria Jockel. ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து முழுநேரக் கல்வியை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி உங்களிடம் இருக்கிறதா என்பதையும் குடிவரவுத் திணைக்களம் மிக முக்கியமாக கவனத்தில் எடுக்கும். குடிவரவுத் திணைக்களம் எதிர்பார்க்கும் அனைத்துத் தகுதிகளும் இருக்கும் பட்சத்தில் மாணவர் விசா வழங்கப்படும். அதன் பின்னர் குறித்த மாணவர் ஆஸ்திரேலியாவுக்கு வர முடியும். அத்துடன் தனது விசா என்னென்ன நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை குறித்த மாணவர் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலத்தில் வேலை செய்யலாமா இல்லையா என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் இந்த விசாவில் அடங்கியுள்ளன. மாணவர் விசா பெற்று நாட்டுக்குள் வந்த ஒருவர் தனது கற்கை நெறியையோ அல்லது கல்வி நிறுவனத்தையோ மாற்ற முற்படும்போது அதை அவதானமாகக் கையாள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் ஒரு குடிவரவு முகவர் அல்லது சட்டத்தரணியின் உதவியை நாடுவது அவசியமாகும். இதேவேளை ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் பல மாணவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தாலும் சில மாணவர்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படக்கூடும். அப்படியான சந்தர்ப்பங்களில் தத்தம் கல்வி நிறுவன நிர்வாகத்தைத் தொடர்பு கொள்வதுடன் Overseas Student Ombudsman ஐயும் தொடர்பு கொள்ளலாம். For more information visit: Department of Immigration and Border Protection Holding Redlich Lawyers



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand