குடும்ப வன்முறையில் உணர்வு ரீதியான துன்புறுத்தலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி 3.3 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தமது பதினைந்தாவது வயதிலிருந்து அவரவர் வாழ்க்கைத் துணையினால் உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
வெளிப்படையான காயங்களெதுவும் ஏற்படாவிட்டாலும் உணர்வு ரீதியான துன்புறுத்தலினால் ஒருவரது தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை என்பன மிகமோசமாக பாதிக்கப்படலாம்.
பாகிஸ்தான் பின்னணி கொண்ட சகினா வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி தான் காதலித்தவரை மணந்துகொண்டார்.
அதன் பின்னர் சகினாவின் கணவரின் அழைப்பின் பேரில் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்.
தான் இங்கு வந்த பின்னர் தனது கணவரின் நடவடிக்கையில் மாறுதல்கள் ஏற்பட்டதாகவும் பொருளாதார ரீதியில் தன்னைக் கட்டுப்படுத்தியதாகவும் சொல்கிறார் சகினா.
கணவரின் இந்த நடவடிக்கையால் தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் தான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாததைப்போல் உணர்ந்ததாகவும் கூறுகிறார் சகினா.
அதுமட்டுமல்லாமல் உணர்வு ரீதியான துன்புறுத்தல் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் தற்கொலைக்குக்கூட தூண்டக்கூடும் என எச்சரிக்கிறார் உளவியல் ஆலோசகர் Monique Toohey.
உளவியல் ஆலோசகர் Monique Toohey குறிப்பிட்டது போலவே தான் உயிரோடு இருக்கவே விரும்பவில்லை என்கிறார் சகினா.
உணர்வு ரீதியான துன்புறுத்தல் என்பதற்குள் கட்டுப்படுத்துதல், மிரட்டுதல், இழிவுபடுத்துதல், தனிமைப்படுத்துதல் என பல அம்சங்கள் அடங்குகின்றன எனச் சொல்கிறார் Monique Toohey.
அதேநேரம் புலம்பெயர் பின்னணி கொண்ட பெண்களைப் பொறுத்தவரை உணர்வு ரீதியான துன்புறுத்தல் இன்னுமதிக தாக்கம் செலுத்துவதாக Australian Muslim Women’s Centre for Human Rights அமைப்பின் தலைவர் Joumanah El Matrah தெரிவித்தார்.
மொழி மற்றும் கலாச்சாரச்சிக்கல்கள் அத்துடன் இவ்வகையான துன்புறுத்தல்களிலிருந்து மீள்வதற்கு என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன என்பது தெரியாதமை போன்றன இதற்கான முக்கிய காரணமென்கிறார் Joumanah El Matrah.
இதேவேளை ஒருவர் தான் உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாரா என்பதை உணர்ந்து கொள்வதற்கே நீண்ட காலம் எடுக்கலாம்.
ஆனால் இது தொடர்பில் எமக்கு நம்பிக்கையானவர்களுடன் உரையாடலாம் என ஊக்குவிக்கிறார் உளவியல் ஆலோசகர் Monique Toohey.
மேலும் உணர்வு ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாகுபவர்களுக்கு தமது அமைப்பினூடாகவும் உதவி வழங்கப்படுவதாகச் சொல்கிறார் Relationships Australia வின் முகாமையாளர் Emily McDonald.
நாம் முன்னர் குறிப்பிட்ட சகினா என்ற பெண் இவ்வாறான உதவியொன்றைப் பெற்று அவர்களது பராமரிப்பின் கீழ் இருக்கிறார்.
சகினாவைப் போன்று நீங்களும் உணர்வு ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டாலோ அல்லது இது தொடர்பில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் 1800 737 732 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
மேலும் உணர்வு ரீதியான துன்புறுத்தலும் குடும்பவன்முறையின் ஒரு பாகமாகவே கருதப்படுவதால் இதிலிருந்து விடுபடுவதற்கு சென்டர்லிங்க் உதவி மற்றும் மனவள ஆலோசனை உதவி உட்பட பல உதவிகள் உங்களுக்கு வழங்கப்படலாம்.
அவசர உதவி தேவைப்படின் 131 114 என்ற இலக்கத்திற்கோ அல்லது 000 வையோ அழையுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு https://www.1800respect.org.au/languages/ மற்றும் http://au.reachout.com/ ஆகிய இணையத்தளங்களுக்குச்; செல்லுங்கள்.