ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் பணியிடப்பாதுகாப்பு உரிமை உண்டு.
இங்குள்ள சட்டத்தின்படி வேலைத்தளத்தில் விபத்தோ அல்லது வேறு அசம்பாவிதங்களோ ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான சூழல் பேணப்பட வேண்டும்.
ஆனால் 2013-2014 ஆண்டுக்கான புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் படி அரை மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பணியிடத்துடன் தொடர்புடைய காயம் அல்லது நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் அதிகமானவர்கள் பல்கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
பேர்த்தில் உள்ள இறைச்சித் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த ஷைனி ஒரு தடவை தனது விரல்களையே இழக்கவிருந்தார்.
ஷைனியைப் பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் உரிய காப்புறுதி பெற்றிருக்கவில்லை என்பதால் பாரிய போராட்டத்தின் பின்னரேயே மருத்துவத்திற்கான பணத்தையும் சிறிதளவு நஷ்டஈட்டையும் ஷைனியால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
ஷைனியைப் போன்று பலர் தமது பணியிடங்களில் காயங்களுக்குள்ளாகலாம். அல்லது அவர்கள் பார்க்கும் வேலையால் உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.
அப்படியான சூழலில் incident report எனப்படும் சம்பவ அறிக்கை ஒன்றைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ரிம் நெல்தோர்ப் தெரிவித்தார். எல்லாவற்றையும் எழுத்து மூலம் பதிவு செய்து வைத்துக் கொண்டால் நஷ்டஈடு கோரும் சந்தர்ப்பம் வந்தால் உதவியாக இருக்கும் என்கிறார் ரிம் நெல்தோர்ப்.
ஒருவேளை பணியிட நிலைமைகளால் உருவான உடல்நலக் குறைவால் உங்களால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றுக்கான worker’s compensation எனப்படும் நஷ்டஈட்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனச் சொல்கிறார் ரிம் நெல்தோர்ப்.
2013-2014 ஆண்டுக்கான புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் படி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், போக்குவரத்துத் துறை பணியாளர்கள் மற்றும் வர்த்தகத்துறைப் பணியாளர்களே தமது வேலை நிமித்தம் காயங்களோ அல்லது உடல்நிலை பாதிப்பிற்கோ அதிகம் ஆளாகின்றனர்.
இதேவேளை பணியிடப் பாதுகாப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தாத தொழில்வழங்குநர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படலாம் என strategic and compensation policy இன் துணை நிர்வாகி ஹெலன் றைட்டன் தெரிவித்தார்.
மேலும் தொழில்வழங்குநர்கள் ஒவ்வொரு தொழிலாளருக்கும் உரிய பயிற்சியை வழங்க வேண்டுமென்பதும் கட்டாயமாகும்.
அதேநேரம் தொழிலாளர்களும் வேலை செய்யும் போது உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு தமக்கு வழங்கப்பட்ட பயிற்சியின்படி பாதுகாப்பாக நடந்து கொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்காலிக விசாவில் இருக்கும் ஒருவர் தனக்கு பணியிடத்தில் பாதுகாப்பு இல்லை எனக் கருதும் பட்சத்தில் அதனை உடனடியாக முறையிட வேண்டுமென CFMEU- Construction, Forestry, Mining and Energy Union இன் தேசிய செயலாளர் டேவ் நூனன் ஊக்குவித்துள்ளார்.
தற்காலிக விசாவில் இருந்து கொண்டு அவ்வாறு முறையிட்டால் தனது விசா ரத்துச் செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பலர் குறிப்பாக பல்கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள் மௌனமாக இருப்பதாகவும் அவ்வாறு பயப்பட வேண்டிய தேவையில்லை எனவும் டேவ் நூனன் தெரிவித்தார்.
பணியிடப் பாதுகாப்பு உரிமை குறித்த மேலதிக விபரங்களுக்கு www.safeworkaustralia.gov.au என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள்.