நம்மில் பலர் கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கட்டி அதில் இருந்து tax refund பெற்றிருப்போம். அல்லது விண்ணப்பித்திருப்போம். இந்த வருடம் அரசாங்கம் LOW INCOME TAX REBATE-ஐயும் அதிகரித்துள்ளதால் பலருக்கு கடந்த வருடத்துக்கான வருமான வரி கணிப்பில் அதிக பணம் திருப்பி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு கிடைக்கும் பணத்தை அநாவசியமாக செலவழிக்காமல் எப்படி நல்ல முறையில் பயன்படுத்தலாம் என விளக்குகிறார் திரு. யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.
தற்பொழுது நம்மில் பலர் கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கட்டி அதில் இருந்து TAX REFUND கிடைக்கிறது. இந்த TAX REFUND எப்படி கணக்கிடப்படுகிறது?
ஒரு நிறுவனத்தில் வேலை செய்து சம்பளம் பெறுபவர்கள், அவர்களுக்கு மாதா மாதம் கிடைக்கும் சம்பளம், வருமான வரி கழித்தே கிடைக்கிறது.
இப்படி கழிக்கப்படும் வரியின் கணிப்பில் ஒருவருக்கு கிடைக்க கூடிய வரி சலுகைகள் கணக்கிடப்படுவதில்லை. அதாவது பெரும்பான்மையானவர்கள் தேவைக்கு அதிகமாகவே வரி கட்டிக்கொண்டு வருவார்கள்.
வருட இறுதியில், அவர்களின் வருமான வரி கணக்கிடும் போது, அப்படி அதிகமாக வரியாக கட்டப்பட்ட தொகை திருப்பி அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, இதைத்தான் TAX REFUND என்று சொல்கிறோம். சிலருக்கு ஒரு சில நூறு டாலர்கள் TAX REFUND கிடைக்கலாம். இன்னும் சிலருக்கு ஆயிரக்கணக்கில் கிடைக்கலாம்.
மேலும் இந்த வருடம் அரசாங்கம் LOW INCOME TAX REBATE-ஐயும் அதிகரித்து உள்ளது. ஆக பலருக்கு கடந்த வருடத்துக்கான வருமான வரி கணிப்பில் அதிக பணம் திருப்பி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
இப்படி திரும்பி கிடைக்கும் பணத்தை எப்படி சேமிக்கலாம்?
இது பலருக்கு ஒரு எதிர்பாராத தொகையாகவே இருக்கும். இந்த மாதிரி கிடைக்கும் பணத்தை அநாவசியமாகவும், தேவையில்லாமலும் செலவழிக்காமல், நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும்
ஒருவருக்கு ஒரு நூறு டாலர் கிடைத்தாலும் சரி, பல ஆயிரங்கள் கிடைத்தாலும் சரி, அந்த தொகை நல்ல முறையாக பயன் படுத்த பல வழிகள் உள்ளன:
- முதலில், ஏற்கனவே கடன் எதுவும் இருந்தால் அதை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்
- அதன் பிறகு, பிற்கால அவசர தேவைக்காக சேமித்து வைக்கலாம்
- இன்னும் சிலருக்கு, இந்த மாதிரி கிடைக்கும் தொகையை அவர்களின் SUPERANNUATION கணக்கில் போடலாம்
- சிலர், அதிகமாக பணம் கிடைத்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்யவும் பார்க்கலாம்.
முதலில், இருக்கும் கடனை குறைப்பது.
இந்த நாட்டில் பலருக்கு வீட்டின் மேல் கடன் இருக்கும் – MORTGAGE PAYAMENT. அந்த வீட்டு கடனை தவிர்த்து தனிப்பட்ட கடன், வாகன கடன், அல்லது CREDIT CARD கடன் இருந்தால் அதன் மேல் மிக அதிகமாக வட்டி இருக்கும்.
உதாரணமாக, வீட்டு கடன் தற்பொழுது 4% அளவில் இருக்கிறது. ஆனால் அதே நபர் வாகனத்தின் பேரில் கடன் எடுத்து இருந்தால் அதற்கு வட்டி 7, 8 % இருக்கலாம்.
PERSONAL LOAN தனிப்பட்ட கடன், அதாவது எந்த விதமான SECURITY-ம் இல்லாமல் எடுக்கும் கடனுக்கு 10% க்கும் மேலாக வட்டி இருக்க கூடும்.
இதற்கும் மேலாக CREDIT CARD வட்டி 20% வரை கூட இருக்கலாம்.
இவ்வாறு இருக்கும் கடனை குறைப்பது, சேமிப்பதை விட இரண்டு மடங்குக்கும் மேலான பயனை கொடுக்கக்கூடும்.
உதாரணத்துக்கு சொல்லப்போனால், நான் இப்பொழுது வங்கியில் 1000 டாலர் சேமிப்பு கணக்கில் வைத்து இருந்தால், அதற்கு 2% வட்டி கிடைத்தால் அதுவே அதிகம். ஆனால், அதே 1000 டாலர் கடனுக்கு வட்டி 4%-க்கும் மேலாக ஆக இருக்கிறது. ஆக, சேமிப்பதை விட, இருக்கும் கடனை குறைப்பது மிக நல்லது.
அதிலும்,எந்த கடனுக்கு வட்டி அதிகமாக இருக்கிறதோ அதை முதலில் குறைக்க வேண்டும். பலர் CREDIT CARD-ல் கடன் எடுத்திருப்பார்கள் அதை முதலில் செலுத்தி விடுவது நல்லது.
திருப்பி கிடைக்கும் வரிப்பணத்தை SUPERANNUATION கணக்கிலும் போடலாம். எப்படி?
இதில் பல விஷயங்களை யோசிக்க வேண்டும்.
SUPERANNUATION என்பது நீண்ட கால சேமிப்பு. அதில் பணம் போடுவதால் வரி சலுகையும் இருக்கிறது. அதே சமயத்தில், அதிக பட்சம் எவ்வளவு போடலாம் என்று ஒரு அளவும் இருக்கிறது. ஆனால் அதில் பணம் போட்டால் நாம் நினைத்த நேரத்தில் திருப்பி எடுக்கவும் முடியாது.
எனவே இதில் உள்ள சட்ட திட்டங்களை அறிந்து, அதன் பிறகு அந்த சேமிப்பு நல்லது என்று தெரிந்தால் மாத்திரம் SUPERANNUATION-ல் பணம் சேமிப்பது ஒரு நீண்ட கால சேமிப்பாக இருக்கும்.
சிலருக்கு இதில் இன்னொரு பயனும் இருக்கிறது. ஒருவரின் வருட வருமானம் 38,564 டாலர்களுக்கு குறைவாக இருந்து, அவர் 1000 டாலர்கள் AFTER TAX CONTRIBUTION என்ற முறையில், SUPERANNUATION ACCOUNT-ல் போட்டால், அரசாங்கம் SUPER CO-CONTRIBUTION என்ற திட்டத்தின் மூலம் அவருடைய SUPERANNUATION கணக்கில் 500 டாலர்கள் போடுகிறது.
ஆனால், இதிலும் பல முக்கிய விதிமுறைகள் இருக்கின்றன. மேலும், இவ்வாறு ஒருவர், SUPERANNUATION-ல் பணம் இப்பொழுது போட்டால், அரசாங்கம் கொடுக்கும் CO-CONTRIBUTION பணம் அடுத்த வருடம், ஜூன் 30-ம் தேதிக்கு பிறகுதான் கிடைக்கும்.
இந்த SUPERANNUATION திட்டத்துக்குள்ளேயே இன்னொரு சேமிப்பு திட்டமும் உள்ளது. அது FIRST HOME SUPER SAVER SCHEME திட்டம். அதாவது, முதல் வீடு வாங்குவதற்காக பணம் சேமிக்கும் திட்டம்.
இதுவரை வீடு வாங்காதவர்கள், இந்த திட்டத்தின் மூலம் பணம் சேமித்தால், வரி சலுகையும் கிடைக்கும். அதிக வருமானமும் கிடைக்க வாய்ப்பும் இருக்கிறது. இதிலும் பல விதி முறைகள் உள்ளன. எனவே இது பற்றி வரி கணக்காளர்களிடம் யோசனை கேட்பது நல்லது.
பங்கு சந்தையில் பணம் போடுவது எப்படி?
பங்கு சந்தையில் பணம் போடுவது என்பது எல்லோருக்கும் பொருந்தாது.
பங்கு சந்தையில் பணம் போடுவதற்கு முன், அது எப்படி செயல்படுகிறது என்பதைப்பற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து இருக்க வேண்டும். ஏனென்றால், பங்குகளின் விலை கூடும், குறையும். அது நமக்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தக் கூடாது.
மேலும் பங்கு சந்தையில் பணம் போடுவது ஒரு சேமிப்பு என்றும் சொல்ல முடியாது. அதை ஒரு முதலீடு என்றே சொல்லலாம்.
பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்தால், அவர்கள் முதலீடு செய்த நாள், அதில் இருந்து பணத்தை எடுக்கும் நாளை பொறுத்து, அவருக்கு லாபம் வரக்கூடும், சில சமயங்களில் அது நட்டமாகவும் இருக்கலாம்.
ஆனால் சராசரியாக எடுத்துக்கொண்டால் 1997 ல் இருந்து 2017 வரை, 20 வருடங்களில் பங்கு சந்தை வருடத்துக்கு 8.8% வருமானத்தை கொடுத்து இருக்கிறது. ஒருவர் 1000 டாலர்கள் 1997-ல் முதலீடு செய்திருந்தால், 20 வருடங்களுக்கு பிறகு அது 5,800 டாலர்களாக கூடியிருக்கும்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அது கடந்த கால தகவல். இந்த வருடம் எவ்வளவு வருமானம் கிடைக்கும், லாபம் கிடைக்குமா அல்லது நட்டமாகி விடுமா என்பது யாருக்கும் தெரியாது.




