SKIP TO MAIN CONTENT

தமிழகத்திற்கு ஆஸ்திரேலியா திரும்பத்தரும் கடவுள் சிலைகள்

Vijay Kumar, author of “Idol Thief” and the three stolen idols to be returned to India
Vijay Kumar, author of “Idol Thief” and the three stolen idols to be returned to India Source: Supplied

குறிப்பிடத்தக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த மூன்று கலைப் பொருட்களை ஆஸ்திரேலியா இந்தியாவிடம் மீள கையளிக்கவுள்ளது. அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியா பயணிக்கும் பிரதமர் Scott Morrison, இந்த சிலைகளை நேரடியாக எடுத்துச் செல்லவுள்ளார். இது குறித்து, India Pride Project என்ற திட்டம், “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” Poetry in Stone என்ற இணையத் தளம் ஆகியவற்றை நடத்தி வருபவரும், Idol Thief என்ற நூலின் ஆசிரியருமான விஜய் குமார் அவர்களின் கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


Published

Updated

Source: SBS



Skip to podcast episode content

குறிப்பிடத்தக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த மூன்று கலைப் பொருட்களை ஆஸ்திரேலியா இந்தியாவிடம் மீள கையளிக்கவுள்ளது. அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியா பயணிக்கும் பிரதமர் Scott Morrison, இந்த சிலைகளை நேரடியாக எடுத்துச் செல்லவுள்ளார். இது குறித்து, India Pride Project என்ற திட்டம், “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” Poetry in Stone என்ற இணையத் தளம் ஆகியவற்றை நடத்தி வருபவரும், Idol Thief என்ற நூலின் ஆசிரியருமான விஜய் குமார் அவர்களின் கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


Australian National Gallery எனப்படும் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம், பல மில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கிய சிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு மீள கையளித்துக் கொண்டிருக்கிறது.  அந்த வகையில், தமிழ் நாட்டிலிருந்து திருடப்பட்ட 15 ஆம் நூற்றாண்டு துவாரபாலகர் என்று சொல்லப்படும் வாயிற்காவலர்கள் சிலைகள் இரண்டு, மற்றும் ராஜஸ்தான் அல்லது மத்திய பிரதேச மாநிலங்களிலிருந்து திருடப்பட்ட ஆறாம் எட்டாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதி நாகராஜர் சிலை என்று மூன்று சிலைகளை மீள் கையளிக்கவுள்ளது ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம்.

India Pride Project என்ற திட்டம், “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” Poetry in Stone என்ற இணையத் தளம் ஆகியவற்றை நடத்தி வருபவரும், Idol Thief என்ற நூலின் ஆசிரியரும், அருங்காட்சிப் பொருட்களின் உண்மை விலையை உணர்ந்தவன் என்று சொல்பவருமான, திரு விஜய் குமார் அவர்கள் இந்த சிலைகள் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும் என்ற முயற்சியில் பல வருடங்களாக ஈடு பட்டவர்.  இந்த சிலைகளை ஆஸ்திரேலியா திருப்பியளிப்பது குறித்து விஜய் குமாரிடம் கேட்டதற்கு , சுபாஷ் கபூர் என்ற அருங்காட்சிப் பொருள் வியாபாரியும் அவரது சகபாடிகளும், சிலைகளைக் களவாடி, போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் தான் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திற்கு விற்றிருக்கிறது எனத் தெரிவித்தார். 

இதை தகவல் தொடர்பு, இணைய செயற்பாட்டின் பாதுகாப்பு மற்றும் கலைத்துறை அமைச்சர் Paul Fletcher ஒப்புக் கொண்டார்.  அதனை, அருங்காட்சியகம் தமது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளது என்றும்.  கலாச்சார முக்கியம் வாய்ந்த பொருட்களை நியாயமான, நேர்மையான முறையில் தான் அருங்காட்சியகம் வாங்க வேண்டும் என்றும், அப்படி அல்லாத வகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட சிலைகளை மீள் கையளிக்க, அருங்காட்சியகம் தானாகவே முன் வந்துள்ளது என்றும் அமைச்சர் Paul Fletcher குறிப்பிட்டார்.

சிலைகளை வாங்க முன்னரே அவை குறித்து ஆராயாமல், திருட்டு சிலைகளை வாங்கி விட்டதாகத் தாம் முறையீடு செய்த பின்னர் அது குறித்து விசாரணைகளை மேற் கொள்வது ஒரு அருங்காட்சியகத்தின் வேலை இல்லை என்று தனது மனக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தார் விஜய் குமார்.

இந்த மூன்று சிலைகள் மீள் கையளிக்கப்படுவது போலவே, 2014ஆம் ஆண்டு ஒரு நடராஜர் சிலை மீள் கையளிக்கப்படுவது குறித்து நாம் ஒரு நிகழ்ச்சி படைத்த போது, அதில் கருத்துக் கூறிய - ஓய்வு பெற்ற ஐஐரி டெல்லி பேராசிரியரும் இந்தியக் கலை வடிவங்களைப் பேண வேண்டும் என்று முனைப்புடன் செயற்படுபவருமான பேராசிரியர் சுவாமிநாதன் அவர்கள் ஒரு வித்தியாசமான கருத்தைப் பகிர்ந்திருந்தார்.  இந்த சிலைகள் இந்தியாவில் இருப்பதை விட, மேலைத்தேய நாடு ஒன்றில் அழகாகப் பராமரிக்கப்படுவது மட்டுமல்ல, அந்த சிலைகளின் நுணுக்க வேலைப்பாடுகள் உலக மக்கள் அனைவரது கவனத்துக்கும் வரும் என்று அவர் கூறியிருந்தார். 

தென்னாபிரிக்காவில் இருந்து 700 ஆண்டுகள் பழமையான நடராஜா் பஞ்சலோக சிலை, சிங்கப்பூரில் இருந்து 16 சிலைகள், ஆஸ்திரேலியாவில் இருந்து 6 சிலைகள், அமெரிக்காவில் இருந்து 9 சிலைகள் இதுவரை இந்தியாவிற்கு மீள் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஓராயிரம் திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் உள்ளன என்று தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சொல்கிறது.  ஆஸ்திரேலியாவில் இன்னமும் எத்தனை திருடப்பட்ட சிலைகள் இருக்கின்றன என்ற சரியான கணிப்பு இல்லை, ஆனால் ஜனவரி மாதம் இந்தியா திரும்பும் இந்த மூன்று சிலைகளும் அந்த எண்ணிக்கையில் அடங்கும்.  25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகள் சொந்த ஊர் திரும்ப இருப்பதால் அந்தக் கிராம மக்கள் உற்சாகமடைந்துள்ளார்கள் என்று உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன.

 

 

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now