ஒரு குழந்தைக்கு ஆண் பெண் என்று இருவர்தான் பெற்றோர்களாக இருப்பர். ஆனால் ஒரு குழந்தைக்கு ஒரு ஆண் இரு பெண்கள் என்று மூன்றுபேர் பெற்றோர்களாக இருக்கலாம் என்பதற்கு ஆஸ்திரேலிய அரசு இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்காக விரைவில் சட்டம் இயற்றப்படலாம். ஏன் இந்த சட்டம் தேவை? ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர் என்பது ஏன்? அதன் அவசியம் என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
ஒரு குழந்தைக்கு மூன்றுபேர், பெற்றோராக இருக்கமுடியுமா?
முதலில் Khaliya என்ற பெண் சொல்லும், இந்த கதையைப் பார்ப்போம்.
“எனது பெயர் காஹலியா. 25 வயது எனக்கு. எனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். மூன்று நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது என் ஆசை. ஆனால், நான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது அவசியந்தானா என்று யோசிக்கிறேன். எனது தம்பி, mitochondrial disease என்ற மரபணு சார்ந்த இழைமணி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு இதுவரை 14 தடவை- stroke பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது அவனது கண்பார்வை மங்கிக்கொண்டுவருகிறது. கேட்கும் திறன் படிப்படியாக குறைந்துவருகிறது. ஞாபகசக்தியை பெருமளவில் இழந்துவிட்டான். ஏழு வயதான அவனால் இப்போது நடக்கவும் முடியவில்லை. இதற்குக் காரணம் எங்கள் குடும்பத்தில் மரபணு வழியாக வரும் mitochondrial disease என்ற இழைமணி நோய்தான். குடும்பத்தில், பெண்கள் வழியாகவே இந்த மரபணு நோய் அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்லப்படுவதால், எனக்குப்பிறக்கும் குழந்தைகளும் இதே mitochondrial நோயால் பாதிக்கப்படப் போவது நிச்சயம்”
எமது உடல் cell என்ற கலங்களால் ஆனது. இந்தக்கலங்களின் நடுப்பகுதியில் இருக்கும் mitochondria என்ற இழைமணிதான் cell என்ற கலத்தின் powerhouse- சக்தி வழங்கும் அமைப்பு. இந்த இழைமணியால், ஊட்டச்சத்தையும் பிராணவாயுவையும் எரித்து கலத்திற்கு சக்தி வழங்கமுடியாத போது அதற்கு mitochondrial disease-இழைமணி நோய் அல்லது mitochondrial syndrome ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
காஹலியாவின் கதை சொல்லும் செய்தி என்ன?
Mitochondrial disease இழைமணிநோயுள்ள பெண் அல்லது அந்த நோயுள்ள குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் கருவுற்றால், அந்தக்கருவில் உருவாகும் சிசுவும் இந்த நோயால் பாதிக்கப்படும் என்பதுதான்.
எனவே, பெண்ணின் சினைமுட்டையில் இருக்கும் நோயால் பாதிக்கப்பட்ட இழைமணியின் பகுதியை நீக்கிவிட்டு, மற்றொரு ஆராக்கியமான பெண்ணின் சினைமுட்டையில் இருந்து அந்தப் பகுதியை இணைத்து ஆணின் விந்தணுவுடன் IVF என்ற முறையில் கருவை உருவாக்கி பெண்ணின் கர்பப் பையில் வைப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்வதுதான் three parent baby என்ற சிகிச்சை முறையாகும்.
இந்த சிகிச்சைமுறைக்கு, இதுவரையில் இங்கிலாந்தில் மட்டுமே சட்டப்படியான அங்கீகாரம் உண்டு. இப்போது, ஆஸ்திரேலியா வெகுவிரைவில் இதற்கு சட்டப்படியான அங்கீகாரத்தை வழங்கவிருக்கிறது.
இந்த சிகிச்சை காரணமாக, மனித சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறநெறிகள் மீறப்படுகின்றன என்றும் ‘designing a baby’ - குழந்தையை நாம் வடிவமைத்தல் என்பது, playing god- கடவுளின் காரியத்தில் நாம் குறுக்கிடுவது போலாகும் என்றும் பல வாதப் பிரதிவாதங்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்த சிகிச்சை முறைக்கு இன்னும் சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கவில்லை.




