வெளிநாடு செல்லும்போது எந்த தடுப்பூசிகளைப் பெறுவது என்பதைத் தீர்மானிக்க, உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
WHO அனைத்து பயணிகளுக்கும் வழக்கமான தடுப்பூசிகளை பரிந்துரைக்கிறது, அதே போல் குறிப்பிட்ட நோய்களின் அதிக ஆபத்து உள்ள பகுதிகளுக்கு வருகை தருபவர்களுக்கு சில பிரத்தியேக தடுப்பூசிகளையும் பரிந்துரைக்கிறது.
வெளிநாடு செல்லும்போது TB, typhoid, rabies மற்றும் yellow fever போன்ற ஆஸ்திரேலியாவில் பொதுவானதாக இல்லாத நோய்களுக்கு உள்ளாகக்கூடிய ஆபத்து இருப்பதாக சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக சுகாதார பீடத்தின் School of Public Health இணை பேராசிரியர் Jane Frawley தெரிவித்தார்.

சுகாதார அபாயங்கள் ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும் அதேநேரம் புதிய நோய்ப்பரவல்களும் அதற்கான புதிய தடுப்பூசிகளும் இருக்கலாம் என்கிறார் பேராசிரியர் Frawley.
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட தடுப்பூசிகள் அதன் இலக்கு, நாடு மற்றும் தங்கியிருக்கும் காலம் ஆகியவற்றைப் பொறுத்தது.
தனிநபர்கள் தமது உடல்நிலை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து மருத்துவ ஆலோசனையைப் பெறுவது, அவர்களுக்குப் பொருத்தமான பரிந்துரைகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
அனைத்து பயணிகளும் தங்கள் குறிப்பிட்ட பயணத் திட்டங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தீர்மானிக்க அவர்களின் குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசிக்குமாறு பேராசிரியர் Frawley அறிவுறுத்துகிறார்.
பல தடுப்பூசிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட dose தேவைப்படும் என்பதால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கு கடைசி நிமிடம் வரை காத்திருப்பது தவறு என்றும் அவர் கூறுகிறார்.

சிட்னி பல்கலைக்கழகத்தின் மருத்துவ தடுப்பூசி நிபுணரான பேராசிரியர் Nicholas Wood, உங்களுக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட நோய்த்தடுப்பு மருந்துகள் உங்கள் உடல்நலம், வயது, வாழ்க்கை முறை மற்றும் தொழில் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன என விளக்குகிறார்.
குறிப்பாக உங்கள் உடல்நிலை மோசமாக இருந்தால் மற்றும் நீங்கள் கூடுதல் மருந்துகள் அல்லது நோயெதிர்ப்பு தொடர்பிலான மருந்துகள் போன்றவற்றை உட்கொண்டால், Flu போன்ற வழக்கமான தடுப்பூசிகளைப் பெறுவது மிகவும் முக்கியமானது என அவர் விளக்குகிறார்.
Hepatitis A, Typhoid fever, Yellow fever, Meningococcal, COVID-19 மற்றும் Rabies உள்ளிட்டவற்றுக்கான பல தடுப்பூசிகள் பொதுவாக ஆஸ்திரேலிய பயணிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன அல்லது தேவைப்படுகின்றன.
இந்த நோய்த்தொற்றுகள் ஆரோக்கியமானவர்களில்கூட கடுமையான நோயை ஏற்படுத்தலாம் எனவும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் Rabies எனவும் பேராசிரியர் Nicholas Wood கூறுகிறார்.
அதேநேரம் மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும் திறன் கொண்ட பிற தடுப்பூசிகள் உதாரணமாக Meningococcal meningitis , Japanese encephalitis போன்றவற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நீங்கள் கடந்தகாலத்தில் இத்தடுப்பூசிகளை ஏற்கனவே போட்டிருந்தால் உங்களுக்கு பூஸ்டர்கள் தேவைப்படலாம் எனவும் வெளிநாட்டில் இருக்கும்போது இத்தகைய பூஸ்டர்களை இலகுவாகவும் இலவசமாகவும் பெறுவது கடினம் எனவும் பேராசிரியர் Nicholas Wood விளக்குகிறார்.
இதேவேளை கோவிட்-19 தொற்றை மறந்துவிடக்கூடாதென வலியுறுத்தும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக சுகாதார பீடத்தின் School of Public Health இணை பேராசிரியர் Jane Frawley, நீங்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்று குறைந்தது ஆறு மாதங்கள் ஆகியிருந்தால் அதற்கான பூஸ்டரைப் பெறுவது அவசியம் எனவும், உலகம் முழுவதும் கோவிட் 19 இன்னும் பரவலாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில், தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை அல்லது எதிர்வினைகள் ஏற்படலாம். தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகள் பற்றி கவலை இருந்தால், உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

அத்துடன் 1300 MEDICINE (1300633424) என்ற எண்ணில் Adverse Medicines Events Lineஐ அழைப்பதன் மூலம் பக்க விளைவுகளைப் பற்றி முறையிடலாம் மற்றும் விவாதிக்கலாம்.
அதேநேரம் வெளிநாட்டில் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள், அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கு முன்பு அவற்றை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்புப் பதிவேட்டில் Australian Immunisation Register (AIR) பதிவு செய்வது அவசியம்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுநர்கள் மட்டுமே Australian Immunisation Registerஇல் பதிவுகளைச் சேர்க்க முடியும் என்பதால் உங்கள் குடும்பமருத்துவர் அல்லது மற்ற மருத்துவர்களிடம் உதவி கேட்கலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




