Key Points
- பதின்ம வயதினரிடையே வேப்பிங் செய்யும் பழக்கம் பெருகி வருவது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது
- கறுப்புச் சந்தையில் வேப்பிங் பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுமானால், சட்ட பூர்வ விற்பனையை முடக்குவதால் எந்தப் பயனும் இல்லை.
- பல வேப்பிங் பொருட்களில் Nicotine இருக்கிறது .
நம் நாட்டில் வேப்பிங் ஒரு “முக்கிய சுகாதார பிரச்சினை” என்றும் பல பாடசாலை மாணவர்களின் நடத்தையிலே நிலவும் மிகப் பெரிய பிரச்சனை இது என்றும் சுகாதார அமைச்சர் Mark Butler விவரித்தது மட்டுமின்றி, அந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பெரு முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, நாட்டின் மேல் நிலைப் பாடசாலை மாணவர்கள் மூன்று பேரில் ஒருவர், 2022-2023 காலத்தில் e-cigarettes பயன்படுத்தியுள்ளார்கள்.
சிட்னி பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை இணைப் பேராசிரியராகக் கடமையாற்றும் , Generation Vape Project என்ற திட்டத்தை வழி நடத்தி வருகிறார்.
e-cigarettes குறித்த இளையோரின் பார்வை, பயன்பாடு போன்றவற்றை இந்தத் திட்டம் ஆராய்ந்து வருகிறது. பதின்ம வயதினரிடையே வேப்பிங் பயன்பாடு மிகப் பரவலாக இருக்கிறது என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.
அத்துடன், சமீப ஆண்டுகளில், குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த வேளை இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பதைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும் சுவையூட்டப்பட்ட வேப்பிங் பொருட்களில் அடிமைப் படுத்தும் தன்மை கொண்ட nicotine என்ற பொருள் அதிக செறிவுடன் இளையோருக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்றும், அவை பதின்ம வயதினர் பயன்படுத்தும் மிகவும் பிரபலமாக தயாரிப்புகள் என்றும் அவர் கூறினார்.

மருந்தகங்களில் மட்டும் கட்டுப்பாட்டுடன் விற்கப்படும் வேப்பிங் பொருட்கள் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப் படுவதைத் தடை செய்யும் விதிமுறைகள் இருந்தபோதிலும், கறுப்புச் சந்தையில் வேப்பிங் பொருட்கள் விற்பனையாவது இளையோர் அதனைப் பெற்றுக் கொள்வதை மிகவும் எளிதாக்குகிறது என்று பேராசிரியர் Becky Freeman கூறுகிறார்.
அதனைக் கறுப்புச் சந்தை என்று அழைப்பதே சிரிப்புக்குள்ளான விடயம், ஒரு சராசரி 14 வயதுடைய ஒருவர் அதனைப் பெற முடியுமென்றால் அதனை திறந்த சந்தை என்றல்லவா சொல்ல வேண்டும் என்று பேராசிரியர் Becky Freeman கேள்வி எழுப்புகிறார்.
வேப்பிங் பொருட்கள் பல வருடங்களாக விற்கப்பட்டு வருகின்றன.
புகை பிடிப்பதிலிருந்து வேறு பட்டது என்று கூறி அதனை இளைய தலைமுறையினரிடையே விளம்பரப்படுத்துவதே இளைஞர்களிடையே இது பிரபலமடைந்ததற்குக் காரணம் என்று பேராசிரியர் Becky Freeman நம்புகிறார். இருப்பினும், அதில் உண்மை இல்லை என்று அவர் வாதிடுகிறார்.
“இளையோர் புகைபிடிப்பதை எதிர்க்கிறார்கள். அதிலுள்ள தீமைகளை அவர்கள் உள்வாங்கிக் கொண்டுள்ளார்கள், சிகரெட்டுகள் மிகவும் விலை உயர்ந்தவை, மற்றும் அவற்றில் அச்சுறுத்தும் சுகாதார எச்சரிக்கைகள் உள்ளன. எல்லா இடங்களிலும் ஒருவர் புகைபிடிக்க முடியாது, ஆனால் வேப்பிங் ஆபத்தானவை என்று இளையோர் பார்க்கவில்லை” என்கிறார் பேராசிரியர் Becky Freeman.Royal Australian College of General Practitioners என்ற அமைப்பில் நிபுணர் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றுபவர் பேராசிரியர் Nick Zwar. புகை பிடிப்பதை நிறுத்திவிட விரும்புபவர்களுக்கு ஆதரவளிக்கும் சுகாதார பயிற்சியாளர்களுக்கான வழிகாட்டுதல்களை அவரது அமைப்பு உருவாக்குகிறது
glycerine மற்றும் propylene glycol ஆகிய பொருட்களை முதன்மையாகக் கொண்ட வேப்பிங் பொருட்கள் உருவாக்கும் வாயுக்கள் Nicotine ஏற்படுத்தும் ஆரோக்கிய அபாயங்களை விட அதிகமான ஆபத்தை விளைவிக்கின்றன என்று அவர் விளக்குகிறார். பல வேப்பிங் பொருட்களில் Nicotine இருப்பது குறித்த எச்சரிக்கை இல்லாவிட்டாலும் பெரும்பாலான வேப்பிங் பொருட்களில் Nicotine இருக்கிறது என்று அவர் எச்சரிக்கிறார்.

குறிப்பாக, இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள் Nicotine கலந்த காற்றை சுவாசிக்க நேர்ந்தால், வளர்ச்சியில் பாதகமான விளைவுகள் உட்பட குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்துகிறது என்கிறார் பேராசிரியர் Nick Zwar.
“இளம் வயதினரின் வளரும் நரம்பு மண்டலம் மற்றும் குறிப்பாக வளர்ச்சி அடைந்து வரும் மூளையில் அதன் தாக்கம் Nicotine பற்றிய பெரிய கவலைகளில் ஒன்று. எனவே இளைஞர்கள் புகைபிடித்தல் அல்லது வேப்பிங் செய்தால் நுரையீரல் மற்றும் இதய அமைப்பில் பாதகமான விளைவை ஏற்படுத்தும், ஆனால் அந்த தீங்கின் அளவு எவ்வளவு என்பது குறித்து தெளிவாக இன்னமும் தெரியவில்லை” என்றார் பேராசிரியர் Nick Zwar.

வேப்பிங் செய்வதை நிறுத்துவது, ஒவ்வொரு இளம் பருவத்தினருக்கும் ஒரு தனித்துவமான பயணமாகும் என்கிறார் Quit Victoriaவின் இயக்குனர் Rachael Andersen.
“புகை பிடித்தவர்கள் மற்றும் வேப்பிங் செய்தவர்கள் இருவரும் அந்தப் பழக்கத்தை நிறுத்த முயலும் போது அவர்கள் உடல் Nicotineஐத் தேடுவது ஒரே மாதிரியான பிரச்சனையைத் தோற்றுவிக்கும். இவை இரண்டிலும் எவ்வாறு நிறுத்துவது என்பதற்கு சுகாதார வல்லுநர்கள்தான் மிகச் சிறந்த ஆலோசனை வழங்குவார்கள்” என்கிறார் Rachael Andersen..
வேப்பிங் பொருட்கள் மீது கொண்டுவரப்பட்டுள்ள தடை, இந்தப் பழக்கத்தைக் கைவிட நினைக்கும் இளையோரை ஊக்கப்படுத்துகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சில இளைஞர்களுக்கு, குடும்பம் மற்றும் சகாக்களின் ஆதரவு போதுமானதாக இருக்கும், மற்றவர்களுக்கு Nicotine அடிமைத் தனத்தை சமாளிக்க மருத்துவ நிபுணரின் உதவி தேவை என்கிறார் பேராசிரியர் Nick Zwar.
சக நண்பர்களின் அழுத்தம் மற்றும் வேப்பிங் செய்வதால் வரும் உடல்நலக் கேடுகள் குறித்து இளையோர் உணராமல் இருப்பது போன்ற காரணங்கள் தான் பதின்ம வயதினர் இந்தப் பழக்கத்தை நிறுத்த கடினமாக்குகிறது என்கிறார் Rachael Andersen.

ஒரு 12 வயது சிறுவனின் தாயான தனக்கு, பல பெற்றோர்களின் கவலை தெளிவாகப் புரிகிறது என்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Becky Freeman.
ஒரு இளையோர் வேப்பிங் செய்வதை நிறுத்துவதற்கு, நேர்மறையான உரையாடலைத் தொடர்வது மற்றும் நிபுணர்களின் ஆதரவைப் பெறுவது என்ற இரண்டு முக்கிய படிகள் தேவைப்படும் என்று அவர் நம்புகிறார்.
ஒரு இளையோருடன் மனம் திறந்த உரையாடலை நடத்துவது, அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பது, அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவது போன்று பார்க்காமல் நியாயமான முறையில் பேசுவது என்பனவெல்லாம் முக்கியமானது என்று Rachael Andersen ஒப்புக் கொள்கிறார்.
இறுதியில், வேப்பிங் செய்வதை நிறுத்த விரும்பும் பதின்ம வயதினருக்குக் கிடைக்கும் அனைத்து ஆதரவு சேவைகளும் அவர்களின் பெற்றோருக்கு, எப்படி ஆலோசனை வழங்கலாம் என்று அறிந்து கொள்ளும் வகையில் கிடைக்கிறது என்கிறார் Rachael Andersen.

Help and support to quit vaping
- Australian Capital Territory
- New South Wales
- Northern Territory
- Queensland
- South Australia
- Tasmania
- Victoria
- Western Australia
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.







