இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC.
NAIDOC என்றால் என்ன ?
1920களுக்கு முன், பூர்வீகமக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த குழுக்கள், ஆஸ்திரேலிய தினம் என்று கொண்டாடப்படும் ஜனவரி 26ம் நாளை, அதன் கொண்டாட்டங்களைப் புறக்கணித்தார்கள். 1920களில் இந்த எதிர்ப்பலைகள், பரந்த ஆஸ்திரேலிய மக்களிடம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்தக் குழுக்கள் உணர்ந்தார்கள். அதை உணர வைக்கவேண்டும் என்பதற்காகப் பல அமைப்புகள் உருவெடுக்க ஆரம்பித்தன.
குறிப்பாக, 1924ம் ஆண்டில், Australian Aborigines Progressive Association, 1932ம் ஆண்டில், Australian Aborigines League என்று இரு இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவர்களது செயற்பாட்டிற்குக் காவல்துறையினர் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்ததனால் இவை செயலிழந்து போயின. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில், ஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்குத் தனி ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்று, 1935ம் ஆண்டு, Australian Aborigines League ஐ ஆரம்பித்த William Cooper, அப்போதைய பிரித்தானிய மன்னரான ஐந்தாவது George இடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்தக் கோரிக்கை ஆஸ்திரேலிய அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது என்று நிராகரிக்கப்பட்டது.
1938ம் ஆண்டு, ஆஸ்திரேலிய தினத்தன்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் சிட்னி தெருக்களில் அணிவகுத்துச் சென்றது. உலகின் முதல் பெரிய சிவில் உரிமைகள் கூட்டத்தில் அதுவும் ஒன்று. அன்றைய தினத்தை, அது இரங்கல் தினம் Day of Mourning என நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்தார்கள். அன்றிலிருந்து ஆஸ்திரேலிய தினமான ஜனவரி 26ம் நாளை, இரங்கல் தினம் என்று பூர்வீக மக்கள் அவதானித்தார்கள்.
அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, பூர்வீக மக்கள் குறித்த தேசிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை William Cooper தலைமையிலான குழு அப்போதைய ஆஸ்திரேலிய பிரிதமரான Joseph Lyonsற்கு முன்வைத்தனர். ஆனால் அப்படிக் கொள்கை வகுக்க ஆஸ்திரேலிய அரசிடம் அதிகாரம் இல்லை என்று அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
1940 முதல் 1955 வரை, ஆஸ்திரேலிய தினமான ஜனவரி 26ம் நாளுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை, பூர்வீக மக்களல் நாள் என அறிவிக்கப்பட்டு அவதானிக்கப்பட்டு வந்தது... ஆனால், இந்த நாள் வெறும் ஒரு எதிர்ப்பு நாளாக மற்றவர் கருதக்கூடாது என்ற காரணத்தால், 1955 ஆம் ஆண்டு முதல், ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பூர்விக நாள் என்று மாற்றப்பட்டு, பூர்வீக குடிகளின் கலாச்சாரம் கொண்டாடப்படும் நாளாக முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவை ஆஸ்திரேலிய மற்றும் மாநில அரசுகள், பல கிறீஸ்தவ மதக்குழுக்கள், ஆதரிக்க, National Aborigines Day Observance Committee, NADOC என்ற அமைப்பு உருப்பெற்றது. ஜூலை மாத இரண்டாவது ஞாயிறு, பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நினைவு கூரும் நாளாக கொண்டாடுவதற்கும் இந்த அமைப்பு முடிவெடுத்தது.
பூர்வீக மக்களையும் மக்கள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்வதா என்ற கருத்துக் கணிப்பில், 1967ம் ஆண்டு ஆஸ்திரேலியர்கள் பெரும்பான்மையான ஆதரவைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, 1972ம் ஆண்டு பூர்வீக மக்கள் நலனுக்கான அமைச்சு 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1974ம் ஆண்டு, முதல் தடவையாக முற்று முழுதாக பூர்வீக மக்களைக் கொண்ட NADOC குழு உருவானது. அதற்கடுத்த ஆண்டு, பூர்வீக மக்களின் வாழ்வைக் கொண்டாட ஒரு நாள் போதாது என்று, ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இரண்டாவது ஞாயிறு வரையிலான வாரத்தைக் கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
பூர்வீக நாள் என்று கொண்டாடப்படும் நாளை தேசிய விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தக் கோரிக்கைகள் பல வைக்கப்பட்டாலும், இன்று வரை அதற்கான அங்கீகாரம் ஆஸ்திரேலிய அரசினால் வழங்கப்படவில்லை.
Torres Strait தீவிலிருக்கும் மக்களையும் உள்ளடக்குவதற்காக, NADOC என்ற அமைப்பு, NAIDOC ஆக, National Aborigines and Islanders Day Observance Committee என 1991ம் ஆண்டு உருப்பெற்றது. 2005ம் ஆண்டு வரை Senator Aden Ridgeway யின் தலைமையிலியங்கிய NAIDOC அமைப்பு, தற்போது Anne Martin மற்றும் Ben Mitchell ஆகியோரது தலைமையில் இயங்கி வருகிறது.
பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் தொன்மையான வரலாற்றையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் NAIDOC வாரம் ஒரு சிறப்பான தலைப்பை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம், எங்கள் மொழிகள் முக்கியமானவை எனக்குறிக்கும், Our Languages Matter என்பது தலைப்பு. தனித்துவமான அம் மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, பூர்வீக மொழிகள் கலாச்சார அடையாளத்தில் பெரும் பங்கு வகிப்பதையும், பூர்வீக நிலப்பகுதி மற்றும் நீர் நிலையங்களைப் பூர்வீக மக்களுடன் இணைப்பதற்கும், பூர்வீக டார்ரெஸ் ஸ்ட்ரெய்ட் தீவு வரலாற்றின், ஆன்மீக மற்றும் பழக்கவழக்கங்கள் கதை மற்றும் பாடல்களைப் பகிரவும் இந்த மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த மண்ணின் பாரம்பரியத்தை அனைத்து ஆஸ்திரேலியர்களும் பகிர்ந்து கொள்வதால், நாம் அனைவரும் பூர்வீக மொழிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். நாம் அனைவரும் பூர்வீக மொழிகளுக்கு வழங்கும் ஆதரவு, அம்மொழிகளை வலுவடையச் செய்யும்.



