SKIP TO MAIN CONTENT

சிட்டுக்குருவிக்கு என்ன நடந்தது?

Sparrow in Nepal
Source: Antje Schultner via Flickr

மனிதருக்கும் தமக்கும் இடையிலேயான பிணைப்பை வலுவாக வைத்திருந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பெரும் புதிராகவே பார்க்கப்படுகிறது.இது தொடர்பில் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.


Published

By Renuka

Source: SBS



Skip to podcast episode content

மனிதருக்கும் தமக்கும் இடையிலேயான பிணைப்பை வலுவாக வைத்திருந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பெரும் புதிராகவே பார்க்கப்படுகிறது.இது தொடர்பில் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.


நம் வீட்டின் தாழ்வாரத்திலும் விட்டத்திலும் மோட்டுவளையிலும் கூடுகட்டி, குஞ்சு பொரித்து, வைகறையில் கண்விழித்து, முற்றத்தில் மற்றும் வீட்டின் பின்புறம் சிதறிக்கிடக்கும் தானியங்களை, தனது சிறிய சொண்டில் அடக்கிக்கொண்டு பசியால்’ கீச் கீச்’ என்று கத்திக்கொண்டிருக்கும் குஞ்சுகளின் வாயில் கொண்டுவந்து ஊட்டி, மனிதர் நடமாடும் இடங்களிலேயே வாழ்ந்து, மனிதருக்கும் தமக்கும் இடையிலேயான பிணைப்பை வலுவாக வைத்திருந்த சிட்டுக்குருவிகளுக்கு என்ன நடந்தது? சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பெரும் புதிராகவே பார்க்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் சிமெண்டு வீடுகள் கட்டத் தொடங்கியவுடன் குருவிகளுக்கு தங்குவதற்கு வீடுகளில் இடுக்குகள், சந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டது. மற்றும் சிறு தானியங்கள் ஆகிய கேழ்வரகு, சோளம் , கம்பு போன்றவை இவர்களின் ஆகாரம். இதன் விளைச்சல் குறைந்த நகரங்களில் குருவி இனத்திற்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். அடுக்குமாடிக்குடியிருப்புகள் அதிகரித்த பின்னர் மனிதரின் நாளாந்த வாழ்க்கை முறையிலும் நிறையவே மாற்றங்கள்.

வீட்டுத்தோட்டங்களிலும் வேளாண்மை நடக்கும் நிலங்களிலும் இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் மிகுந்த அளவில் பயன்படுத்தப்படுவதால் சிட்டுக்குருவிகளுக்கு புழு, பூச்சிகள் இரையாகக் கிடைப்பதில்லை. முன்பு மாட்டுவண்டிகளில் தானியங்கள் எடுத்துசெல்லப்பட்டபோது வழியிலும் களத்திலும் நிறையவே தானியம் சிந்திக்கிடக்கும்.

அம்மா முற்றத்தில் அமர்ந்துகொண்டு, முறத்தில் அரிசியைப்போட்டு, கல், நெல் பொறுக்குவாள். அவள் அள்ளிப்போடும் ஒரு கைப்பிடி அரிசிக்காக, அவளைச்சுற்றி சிட்டுக்குருவிகள் வந்து உட்கார்ந்து கொள்ளும். இந்தக்காட்சிகளை இப்போது நகர்ப்புறங்களிலும் காணமுடியவில்லை; ஏன், கிராமங்களிலும் காணமுடியவில்லை.

‘சிட்டுக்குருவிகளின் வாழ்விடமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன’ என்கிறார், தமிழ்நாட்டில் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியாளர் ஜகன்னாதன்.

‘விட்டு விடுதலையாகி நிற்பாய்

இந்த சிட்டுக்குருவியைப்போலே

முற்றத்திலும் கழனி வெளியிலும்

முன்கண்ட தானியம் முன்கொணர்ந்துண்டு

மற்றபொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்

வைகறையாகுமுன் பாடி விழிப்புற்று

விட்டு விடுதலையாகி நிற்பாய்

இந்த சிட்டுக்குருவியைப்போலே’ - மகாகவி பாரதி.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now