ஆஸ்திரேலியாவிற்குள் படகுமூலம் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 41 பேரும் விசேட விமானம் மூலம் நேற்று காலை (மே 09) 9.40 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை நாடு கடத்தும் பயணத்தில் பல ஆஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தடன் குறித்த 41 பேரும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன்போது கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரகத்தின் மூன்று உயர்மட்ட அதிகாரிகளும் விமான நிலைய வளாகத்திற்கு சென்றிருந்தனர்.
இதேவேளை 41 பேரும் விமானநிலையத்துடன் இணைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
