புகலிடம்கோரும் நோக்கில் படகுப் பயணம் மேற்கொண்டு, அது தோல்வியடைந்தநிலையில் இந்தோனேசியாவில் நிர்க்கதியாகியுள்ள பல அகதிகள், தம்மை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துமாறுகோரி பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புகலிடம் கோரும் நோக்கில் இலங்கை,ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளிலிருந்து வெளியேறிய பல ஆயிரக்கணக்கான அகதிகள் இந்தோனேசியாவை இடைத்தங்கல் நாடாக பயன்படுத்தி அங்கு தங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட வேண்டுமென்ற கனவுடன், இந்தோனேசியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர்களில் தர்சனாவும் ஒருவர்.
1999ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் போய் மண்டபம் முகாமில் தஞ்சம் அடைந்த அவர், உறவினர்கள் உதவியால் படிப்பை தொடர்ந்தபோதிலும், அங்கு அடிமையான வாழ்க்கைதான் கிடைத்தது எனவும், பின்னர் அங்கிருந்து வெளியேறி ஆஸ்திரேலியா வருவதற்காக படகுப் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Tamil Refugees Stranded in Indonesia Credit: Nimal
இலங்கையிலிருந்து புறப்பட்டுவந்து தற்போது 10 ஆண்டுகளாக இந்தோனேசியாவில் வாழ்ந்துவரும் சுதாகரனின் நிலையும் இதுதான். 2013ம் ஆண்டு படகுப் பயணம் மேற்கொண்டு 45 நாள் கடலில் தத்தளித்து பின் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவில் தஞ்சமடைந்து, இன்று வரை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவதற்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
படகுப் பயணம் மேற்கொள்ளவேண்டாம், உங்களை நாங்கள் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்துவோம் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் வாக்குறுதியளித்திருந்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுதாகரன் குற்றம்சாட்டினார்.
தானும் தனது மகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வாழ்வாதாரமின்றி தாம் துன்பங்களை அனுபவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Suthakaran Credit: Supplied
நம்மிடம் பேசிய மூவருமே விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.
ஆஸ்திரேலிய மக்களிடமும் அரசிடம் கெஞ்சி மன்றாடி கேட்கிறோம். எங்களுக்கு உதவி செய்யுங்கள் எங்களைப் புறக்கணிக்காதீர்கள். உங்களைத்தான் நாங்கள் நம்பியிருக்கிறோம்.
ஐ.நாவின் 1951 அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்டிருக்காத நாடு என்ற வகையில் இந்தோனேசிய அரசு தனது நாட்டில் அகதிகளை நிரந்தரமாக குடியமர்த்தாது என்றபோதிலும் அகதிகளை மூன்றாவது நாடுகளில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளில் ஐ.நா அகதிகள் அமைப்பான UNHCR-உடன் இணைந்து இந்தோனேசியா செயற்படுகிறது.
ஆனால் மற்றொரு நாடொன்றில் அகதிகளை குடியமர்த்தும் விடயத்தில் இலங்கைப்பின்னணி கொண்ட அகதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என தர்சனா விக்கி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.
இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையில் தாங்கள் இல்லை எனவும் அங்கு இன்னமும் நிலைமைகள் சரியாகவில்லை எனவும் மூவரும் தெரிவித்தனர்.

Refugees in Indonesia Source: Supplied / Supplied/Hassan Nazari
மீண்டும் படகுப் பயணத்தை மேற்கொள்ளாமல் ஐநா அமைப்பால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு இந்தோனேசியாவில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் தமிழ் அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில் கேட்டதற்கு, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட அங்குள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை நிர்வகித்து தீர்வு வழங்குவதில் இந்தோனேசியாவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் நம்மிடம் பேசிய சுதாகரன் தெரிவித்ததைப்போல அங்குள்ள அகதிகள் சிலரை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் அவர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்போம் என வழங்கிய வாக்குறுதிக்கு என்னாயிற்று எனக் கேட்டதற்கு, தனிநபர்கள் குறித்த விடயங்களில் உள்துறை அமைச்சு கருத்து தெரிவிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மூன்றாவது நாடொன்றில் மீள்குடியமர்த்தப்படுவதற்காக கடந்த பல ஆண்டுகளாக காத்திருப்பதாக தெரிவித்துள்ள பல அகதிகள், நிலையற்ற எதிர்காலத்துடன் இருக்கும் தமக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.