கொல்லப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள IS-இஸ்லாமிய ஸ்டேட் அமைப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரான, முதல் தொகுதி ஆஸ்திரேலிய பெண்களும் குழந்தைகளும் தாயகம் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
சிட்னி நோக்கி புறப்பட்டுள்ளவர்களில் 4 பெண்களும் அவர்களது 13 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வடகிழக்கு சிரியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள 16 ஆஸ்திரேலிய பெண்கள் மற்றும் அவர்களது 42 குழந்தைகளை மீட்கும் திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.
IS அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர், இஸ்லாமிய ஸ்டேட் அமைப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரான இவர்கள் தொடர்பிலான சோதனைகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

சிரியாவில் இருந்து அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியதும் இக்குடும்பங்களைக் கண்காணிக்கப் போவதாகவும், அவர்களுக்குத் தேவையான கவனிப்பு வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
எனினும் IS உறுப்பினர்களின் குடும்பங்களை ஆஸ்திரேலியா அழைத்துவருவதை தாம் தொடர்ந்தும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இப்பெண்கள் IS உறுப்பினர்களுக்கு உடந்தையாக இருந்ததாக நம்புவதால், அவர்களை இங்கே வரவழைக்கும் திட்டங்களை தாம் தொடர்ந்து எதிர்ப்பதாக லிபரல் கட்சி குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் சிரிய முகாம்களிலுள்ள பெண்கள் பலர், தமது விருப்பமின்றியே தாம் மத்தியகிழக்குக்கு தமது கணவன்மாரால் அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதேவெளை IS உறுப்பினர்களின் குடும்பங்கள் ஆஸ்திரேலியா அழைத்துவரப்படும் செய்தி உண்மையென்றால், இதற்காக ஆஸ்திரேலிய அரசைப் பாராட்ட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இணை இயக்குநரும் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவருமான Letta Taylor, SBS செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
"முன்னாள் அரசு எடுக்கத்தவறிய இந்த நீண்ட கால தாமதமான நடவடிக்கையை, ஆஸ்திரேலியாவின் புதிய அரசு மேற்கொள்கின்றமைக்கு நன்றி" என்று அவர் கூறினார்.
IS-இன் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஆஸ்திரேலிய குழந்தைகள் பின்னர் வடகிழக்கு சிரியாவில் மோசமான முகாம்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டார்.
நாடு திரும்பியவுடன் ஆஸ்திரேலிய அரசு அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
