கொரோனா வைரஸ் பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட வெளிநாடுகளுக்கான பயணத்தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவுதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ஆகக்குறைந்தது எதிர்வரும் ஜுன் 17 வரை ஆஸ்திரேலியர்களுக்கான வெளிநாட்டு பயணத்தடை நடைமுறையில் இருக்கும்.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 17ம் திகதி ஆஸ்திரேலிய அரசு இத்தடையை கொண்டுவந்திருந்ததுடன் இத்தடை எதிர்வரும் மார்ச் 17ம் திகதியுடன் காலாவதியாகவிருந்தது.
எனினும் கொரோனா பரவலின் தீவிரம் வெளிநாடுகளில் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இப்பயணத்தடையை மேலும் நீட்டிக்கவேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்தார்.
தற்போதுள்ள நிலையின்படி ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் அதேநேரம் இவ்வாறு நாட்டுக்குள் வருபவர்கள் தமது சொந்த செலவில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானோரே ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவதாலும் குறைந்த எண்ணிக்கையிலான விமானசேவைகளே நடைமுறையில் உள்ளதாலும் சுமார் 40 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நாடுதிரும்புவதற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share


