ஒரே நாளில் ஆஸ்திரேலியாவுக்கான Backpacker விசா!

ஆஸ்திரேலியாவுக்கு வர விரும்பும் Backpackers தங்கள் விசா விண்ணப்பம் இறுதி செய்யப்படுவதற்கு இப்போது ஒரு நாள் மட்டுமே காத்திருக்க வேண்டும்.

news

Australia visa Credit: Stock Photo

ஆஸ்திரேலியாவிற்கு வெளியே வாழ்பவர்கள், விடுமுறைக்காலத்தில் சுற்றுலாப்பயணிகளாக ஆஸ்திரேலியா வந்து பணிபுரிய வழிவகை செய்யும் working holidaymaker/backpacker விசா விண்ணப்பங்கள், இப்போது ஒரே நாளுக்குள் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேங்கிக்கிடக்கும் விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பதற்குரிய நடவடிக்கைகளையும், பரிசீலனை முன்னுரிமை நடைமுறையையும் ஆஸ்திரேலிய அரசு மாற்றியமைத்ததையடுத்து இது சாத்தியமாகியுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் 120,000 க்கும் மேற்பட்ட கடல்கடந்த backpackersக்கு ஏற்கனவே working holidaymaker (subclasses 417 & 462) விசா வழங்கப்பட்டுள்ளது.

working holidaymaker விசாவில் வருபவர்கள், ஆறு மாதங்களுக்குப் பதிலாக, அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு ஒரே முதலாளியுடன் பணிபுரியலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்தச் சலுகை டிசம்பர் 31 அன்று காலாவதியாக இருந்தபோதிலும், 30 ஜூன் 2023 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு அரசு இதனை நீட்டித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, ஏறக்குறைய ஒரு மில்லியன் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கவென, ஜூன் மாதத்தில் இருந்து 400 கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles கூறினார்.

"பரிசீலனை காலத்தை மேம்படுத்துவதற்கான ஆஸ்திரேலிய அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, ஆஸ்திரேலியாவிற்கு வெளியேயிருந்து விண்ணப்பிக்கும் விசாக்கள் ஒரு நாளுக்குள் இறுதி செய்யப்படுகின்றன" என்று Andrew Giles தெரிவித்தார்.

"தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு குடிவரவு எவ்வளவு முக்கியமானது என்பதை தமது அரசு புரிந்துகொண்டதன் விளைவே இதுவாகும்." எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்

ஜூன் மாதம் குடிவரவுத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2021-22ல் வழங்கப்பட்ட backpacker விசாக்களில் (subclasses 417 & 472) 19 சதவீதம் அதிகரிப்பு காணப்படுகிறது.

An international backpacker (AAP Image/Julian Smith)
Un backpacker all'aereoporto di Melbourne (AAP Image/Julian Smith) Source: AAP

பெல்ஜியம், கனடா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், அயர்லாந்து , இத்தாலி, ஜப்பான், கொரியா, மால்டா, நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் working holidaymaker விசா subclasses 417க்கு விண்ணப்பிக்க முடியும்.

ஸ்வீடன், தைவான், ஐக்கிய இராச்சியம்,அர்ஜென்டினா, ஆஸ்திரியா, சிலி, சீனா, செக் குடியரசு, ஹங்கேரி, இந்தோனேசியா, இஸ்ரேல், லக்சம்பர்க், மலேசியா, பெரு, போலந்து, போர்ச்சுகல், சான் மரினோ, சிங்கப்பூர், ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், தாய்லாந்து, துருக்கி, அமெரிக்கா, உருகுவே, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் working holidaymaker விசா subclasses 462க்கு விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான விசா விசா விண்ணப்பங்கள் தற்போது மூன்று நாட்களில் பரிசீலிக்கப்படுகின்றன.

எந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை உள்துறை அமைச்சகம் மறுபரிசீலனை செய்ததன் விளைவாக, குறிப்பிட்ட துறைகளுக்கான விசாக்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் Andrew Giles சுட்டிக்காட்டினார்.

பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரம் மற்றும் நலன்புரி உதவிப் பணியாளர்கள், குழந்தை பராமரிப்பு மைய மேலாளர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், counsellors, உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பிற தொழில்களுக்கு இப்போது முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற Jobs and Skills மாநாட்டில், ஆஸ்திரேலியாவின் skilled தொழிலாளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, நவம்பரில் ஆஸ்திரேலியாவின் குடிவரவு முறையை மறுஆய்வு செய்வதாக உள்துறை அமைச்சர் Clare O'Neil அறிவித்திருந்தார்.

மே மாதம் லேபர் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான்கு மில்லியன் விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

2 min read

Published

By Rayane Tamer

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now