கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா – நடேசலிங்கம் குடும்பத்தை, குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள பிலோயெலா நகரில் வசிக்க மீண்டும் அனுமதிக்குமாறு பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்க அந்தப் பிரதேச மக்கள் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளனர்.
பெற்றோர்களான பிரியா மற்றும் நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான கோபிகா (4 வயது), மற்றும் தருணிக்கா (2 வயது) ஆகியோரை நாடுகடத்த அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமரை அதில் தலையிட்டு, அவர்கள் நாடுகடத்தலை நிறுத்த வேண்டுமென்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இதற்கு ஆதரவாக 250,000ற்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்ட மனுவைக் கையளிக்க இந்தக் குடும்பத்தின் நண்பர்கள் அஞ்சலா ஃபிரடெரிக்ஸ் மற்றும் ஃப்ரொன்வின் டெண்டில் ஆகியோர் தலமையில் ஒரு குழு நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றுள்ளனர்.
பிரதமரை நேரடியாக சந்திக்க பிலோயெலா மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆனால், குறுகிய கால அவகாசத்தில் அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Supporters of the Biloela Tamil family arrive to deliver a petition to Prime Minister Scott Morrison at Parliament House. Source: AAP
“அவர்களை நாடு கடத்துவதற்கு குறுகிய கால அவகாசம் வழங்கும் இந்த அரசு, ஏன் குறுகிய காலத்தில் அதன் மக்களை சந்திக்க முடியாது?” என்று அஞ்சலா ஃபிரடெரிக்ஸ் கேள்வி எழுப்பினார்.
இந்தக் குடும்பத்தின் இளைய மகள் தருணிக்காவின் புகலிடக் கோரிக்கை குறித்து தீர்மானிக்க, இந்த மாத இறுதி வரை நீதிமன்ற விசாரணைக்குக் காத்திருக்கும் வேளையில் இந்த குடும்பம் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடும்பத்தின் மற்றைய மூன்று பேரின் புகலிடக் கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குடும்பத்திற்கு பொதுமக்கள் காட்டும் பேராதரவு, இது வரை அரசின் மனதை மாற்றவில்லை. இவர்களுக்குக் கருணை காட்டினால் ஆள் கடத்தல் காரர்கள் மீண்டும் தம் வேலையை முடுக்கி விடுவார்கள் என்று பிரதமர் கூறுகிறார்.
கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமில் பிரியா நடந்து கொண்டிருந்த போது தரையிலிருந்த பலகை விழுந்து நொறுங்கியது என்றும், அதனால் அவரது காலில் அடிபட்டுள்ளார் என்றும் அஞ்சலா ஃபிரடெரிக்ஸ் கூறினார். ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள பிரியாவிற்கு இது மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்றும், கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட இந்த தடுப்பு முகாம், இந்த ஒரு குடும்பத்திற்காக மட்டும் மீண்டும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் மேலும் சொன்னார்.
வருநிகழ்வு திட்டம் (Contingency plans)
இவர்களது பிரச்சாரம் நாடுகடத்தப்படுவதைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வரும் அதே வேளை, இந்தக் குடும்பம் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் அவர்களை எப்படிப் பாதுகாக்க முடியும் என்றும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
அண்மையில் இலங்கைக்குத் திரும்பிய ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டதை மேற்கோள் காட்டி, நடேசலிங்கமும் அப்படிக் கைது செய்யப்படலாம் என்று, ஃப்ரொன்வின் டெண்டில் தன் கரிசனையை வெளிப்படுத்தினார்.
“குடும்பத்திற்கு என்ன நடக்குமோ என்று நடேஸ் மிகவும் பயப்படுகிறார்” என்று கூறிய அவர், “ஏனென்றால் அவர்கள் எல்லா ஊடகங்களிலும் பேசு பொருளாகி விட்டார்கள். அவர்கள் இலங்கை மண்ணில் காலடி வைத்தவுடன் அவர் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படலாம் அல்லது அவருக்குப் புனர்வாழ்வளிக்கிறோம் என்ற பெயரில் அவர் சித்திரவதை செய்யப்படலாம் என்று அவர் நம்புகிறார்” என்றார்.
ஆஸ்திரேலியாவிற்குத் திரும்புவதற்காக அந்தக் குடும்பம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்ற உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் பரிந்துரைகளை அவர்கள் நிராகரித்தனர்.
திறமைகள் அடிப்படையில். நடேஸ் முன்பு பணிபுரிந்த இறைச்சி தயாரிப்பு நிறுவனம் அவருக்கான வீசா விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யலாம் என்ற ஒரு யோசனை இருந்தது. ஆனால், அதில் பல தடைகள் இருக்கின்றன என்கிறார், அஞ்சலா ஃபிரடெரிக்ஸ்.

Priya's friend Angela Fredericks wants the prime minister to intervene to block the family's deportation. Source: SBS News
“இலங்கைக்குச் சென்றால், மீண்டும் அவர்கள் ஆஸ்திரேலியா வர 12 மாத தடை இருக்கிறது. அத்துடன், இந்த நாட்டிற்கு அவர்கள் கடன் கட்ட வேண்டியிருக்கும். அப்படி கடன் இருக்கும்போது அவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”
நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள், ஆஸ்திரேலியாவிற்குத் திரும்புவதற்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை கட்டாய தடைகளை எதிர்கொள்கின்றனர். அத்துடன், நாடுகடத்தப்படுவதற்கான செலவிற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மெல்பேர்ண், டார்வின் மற்றும் கிறிஸ்மஸ் தீவு என்று இவர்களை விமானங்களில் ஏற்றி சென்றதற்கான செலவு பல லட்சக்கணக்கான டொலர்களாகும்.
மனிதாபிமான வழக்கறிஞர்களின் செலவை ஈடுகட்டவும், ஒரு மூன்றாம் நாட்டிற்குச் செல்வதற்கான சாத்தியங்களை ஆராயவும் அதற்காக விண்ணப்பிக்கவும், இந்தக் குழு இதுவரை ஒரு இலட்சம் டொலர்களை இதுவரை திரட்டியுள்ளது.
“எங்கள் நண்பர்களைப் பாதுகாக்க, சாத்தியமான எல்ல வழிகளையும் நாம் ஆராய்ந்து வருகிறோம்,” அஞ்சலா ஃபிரடெரிக்ஸ் கூறினார்.